கெளரி,

நேற்று விஷ்வாவிடம் பேசினேன். என் பழையதவறைச் சொல்லி, அந்த தவறு உன் விஷயத்தில் நடந்துவிடக்கூடாதென்று குரல் உடைந்து நம் கதை சொன்ன அதே விஷ்வா. வெளியே நல்ல மழை பெய்கிறது இப்போது. நான் அவனிடம் பேசும் போது இந்த மழை இல்லை. எதையோ பேஸ்புக்கில் எழுதித் தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது. யார் பிறந்த நாளை மறந்துவிட்டாய் எனக்கேட்டான் எடுத்த உடனேயே. உன் பெயரை நான் சொல்ல வேண்டும் என்றொரு விருப்பம் இருந்திருக்கும் அவனுக்கும். அவனே கேட்டான். கெளரியா என்று. ஆம் என்றேன். ”அவ எங்க இருக்கா தெரியுமா?” என்றான். எப்படிச்சொல்வேன் கெளரி. அவன் அளவுகோலில் கூப்பிடும் தூரத்தில்தான் நீ இருக்கிறாய் என்று. என் அளவுகோலின் படி என்னைச்சுற்றி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறாய் என்றொடு பேண்டஸி கதையை. போகட்டும். இருந்தாலும், கூப்பிடும் தூரத்தில் நீ இருந்தாய் எனச் சொல்ல முடியாதது ஒரு துயரம்தான் இல்லையா?

உன் பிறந்த நாளை நான் மறந்துவிட்டேன் என்றொரு பாவனை எப்படி என்னுள் விழுந்ததென்று இன்னும் புரியவில்லை. நாம் பிரிந்த பின் நீ இப்போது வைத்திருப்பது மூன்றாவது அலைபேசி எண். நான் கூப்பிடும் தூரத்தில் நீ இருக்கிறாய். உன் பிறந்த நாள் என் நாட்காட்டியில் தனித்த வண்ணத்தில் எனக்கு மட்டும் தெரியும் ஒரு ரகசியம். உன் முகவரி எப்போதோ அறைந்துவிழுந்த ஒரு சிலுவை. உன் குரல் இப்போதும் என்னுள் ஒலிக்கும் ரீங்காரம். முகுந்தா முகுந்தாவை அத்தனை சுலபமாய் இத்தனை வருடம் கழித்தும் கடந்து போக முடியவில்லை. இதையெல்லாம் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. அப்படித்தானே கடைசியாய் பேசியபோது கேட்டுக்கொண்டாய். எனக்கு நீ யாரோவாக மாறுவது கர்ப்பம் கலைந்து கால் வழி ஒழுகும் உதிரம் பார்த்து ஒரு பெண் வேண்டும், இதெல்லாம் ஒரு கனவாக இருப்பதற்கான சாத்தியமாக கோடியில் ஒரு பங்கு அளவு இருக்குமா?

உன்னைச் சமீபத்தில் பார்த்த பொழுது பின்னணியில் ஒரு இசை ஒலித்ததில்லையா… இப்படியான தருணங்களைத் தவிர்க்க வேண்டிதான் உன்னையும் தவிர்க்க வேண்டியிருக்கிறது. இனி காலங்களுக்கும், அந்த இசைக்கு முன்னாக உன் முகம் வந்து சேரும். அதிர்ச்சி, குழப்பம், வெறுப்பு (இருந்ததாகத் தெரியவில்லை, கேட்டால், உன் பதில் ஆமென்றிருக்குமென்பதால் வெறுப்பையும் சேர்த்த்துக்கொள்கிறேன்) எத்தனை வித உணர்வுகள் உன் கண்களில்.. இந்தக் கண்களைத் தான் உள்ளுக்குள் பொத்தி வைத்திருக்கிறேன் கெளரி. எத்தனை வருடங்களாக… எத்தனை மெளனமாக, எத்தனை அழுத்தமாக. உன் பார்வைகளைச் சுமந்து சுமந்து வளைந்த பாறைகளைத் தூக்கிக்கொண்டு… இந்தப்பயணம் எரிச்சலூட்டுகிறது. உயரங்களில் நிற்கும்போது எல்லாப் பாறைகளையும் எறிந்துவிட்டு, சுதந்திரமாக, ஒரு பறவையைப்போல இலகுவாகி காற்றில் மிதந்துவிடக்கூடுமென்றொரு ஆசை எத்தனை முறை வந்திருக்கும்… ஒவ்வொருமுறையும் யாரோ ஒருவர் காப்பாற்றிவிடுகிறார்கள். உண்மையில் காப்பாற்றிவிடுவதாய் நினைத்து அந்தப்பாறைகளுடன் சேர்த்து இறக்கிவிடுகிறார்கள். இந்தப்பயணம் எரிச்சலூட்டுகிறது கெளரி.

இந்த அறையில் இப்போது யாருமில்லை. வெளியில் மழை கொஞ்சிக்கொண்டிருக்கிறது. நியாபகம் இருக்கிறதா, எல்லோருக்குமான என் வார்த்தையொன்று உனக்கு அசூயை கொடுத்து நமக்குள் நடந்த ஒரு விவாதம். பிடிக்கும் ஆனால் பிடிக்காதென்று பிடிகொடுக்காமல் பழைய பொழுதொன்றில் நீ சொன்ன வார்த்தைகள். அன்றும் இப்படித்தான் மென்குளிர். எதோ ஒன்று உள்ளே ஊடுருவி, ஆன்மாவை மட்டும் சுமந்து மென் காற்றில் தூக்கிச் சென்ற குளிர். அதே குளிர்தான் இன்றும். ஆனால், இன்று இதற்கு வேறு சாயல். வாழ்ந்து முடித்த கிழவின் கடைசி நிமிடங்களில் அருகில் இருந்திருக்கிறாயா? எல்லோர் நோக்கிய திருப்திப்புன்னகைக்குப் பின், கண் விறைத்து நிலைகுத்தியபின், இமைகளுக்கு மேல் உருட்டிய சந்தனத்தை வைக்கும்போது, கிழவியின் உடலில் ரத்தத்தின் சூடு தணிந்து மெல்லிய குளிர் பரவும். இன்றைய குளிரைப்போல.

நேரில் பேசும்போதும் நீயே சலித்து ஒதுக்கிய் புலம்பல்தான் இன்றும் என்னிடம் இருக்கிறது. வலியென்பதை பேசியாவது கடந்தாகவேண்டியிருக்கதே. விரல் நீட்டிக் கேலி செய்யும் நண்பர்களுக்கும், இன்ன பிற வலிகளும், அதைக்கடக்கும் இன்னபிற வழிகளும் உண்டென்றாலும், எனக்குத் தெரிந்ததெல்லாம், எழுதிக்கடப்பதுதானே? கிராமம் நகரமும் அற்ற இரண்டும் கெட்டான் தெருக்களில் ஓடி ஓடி காசு போட்டு அழைத்து அழைத்து புலம்பித் தீர்க்க உன்னையா வைத்திருக்கிறேன் அலைபேசி தொடர்பு எண்களில். தொடர்பு எண் ஒரு பிரச்சினையில்லை. இன்றும்தான் மனப்பாடமாய்ச் சொல்லமுடியுமே உன் முதல் எண்ணிலிருந்து இன்று உன் கையிலிருக்கும் மூன்றாவது எண்வரை. இறந்தாலும் வந்து பார்க்காதே என்றவளைத் தொடர்பு கொள்ளும் தயக்கம். விடாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் ”ஏண்டா டார்ச்சர் பண்ற”எனும் குரல் கொடுத்த தயக்கம். லைஃப் ஹேஸ் டூ கோ ஆன் என்ற சினிமா வசனத்தை நிஜ வாழ்க்கையில் நிஜ மனுஷியிடம் கேட்க நேர்ந்த நினைவின் மிச்சம். உன் பிறந்த நாளை நான் மறக்கமுடியுமா கெளரி? அலைபேசியைத் தொலைத்துவிட்டு, அறை நண்பனின் தொடர்பு எண்ணுக்கு முன்னதாக உன் எண் உதட்டில் ஏறி நின்ற அந்தத் தருணத்தில் உணர்ந்து கொண்ட முதல் தொடர்பு எண்?

எல்லாம் கனவு கெளரி. இந்த வாழ்க்கை. நம் சந்திப்பு. பழைய காதல். பழைய புன்னகை. மின்னும் கண்கள். நான். கடைசியாக நீ.

இப்படிக்கு
ஷிவா.