o
இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து காத்துக்கொண்டிருந்த முக்கிய நண்பர்கள் அத்தனை பேரும் உரத்த குரலுடன் காறி உமிழ்ந்துவிட்டதால் இதை எழுத நேர்கிறது. போஸ்டர்களும் டீசர்களும் ட்ரெய்லர்களும் எந்த ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சொன்னால் ஒரு வகையில் அது பொய்யாகிடும். இந்த கலவைகளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத தனி ஓவியமாகத்தான் திரைப்படம் இருந்து தொலையும் என்பது வழக்கமான செல்வராகவன் பல்லவி. இதற்கு நடுவில் உலக சினிமா விமர்சக பிதாமகர்கள், வெளியாகும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் The Fountainல் தொடங்கி Oz வரை விதவிதமாக பெயர்களை அள்ளிவிட்டு பேண்ட்வித்தைத் தின்றுகொண்டிருந்தார்கள். என்ன நடந்தாலும், செல்வா. நண்பரும் உடன் வருவதாகச் சொன்னதால் வழக்கமான வெள்ளி இரவுக்காட்சி, சனி மாலைக்காட்சிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

கண்ணாடி நீருக்குள் மிதக்க, ஆர்யாவின் குரலில் தொடங்குகிறது. இது இரண்டு உலகங்களின் கதை. இதுவரைகேட்ட எல்லாக் கதைகளின் தொகுப்பு என்பதான முன்பேச்சுகளைத் தாண்டி, கார்டூன்களின் வழி இரண்டாம் உலகத்தின் வரலாறு சொல்லப்படும்போதே முழுக்கதையும் முடிந்துவிட்டது. தவற விட்டு, கொட்டக்கொட்ட விழித்திருந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். செல்வாவின் நாயகர்கள் எல்லாக்காலங்களிலுமே குறிக்கோளவற்றவர்களாகத்தான் இதுவரை இருந்திருக்கிறார்கள். வாழ்வின் அர்த்தத்தை விளக்கிச் சொல்லவோ, அவர்களின் தனியுலகிலிருந்து பொது உலகிற்கு இழுத்துவரவோ ஒரு பெண். அப்பெண்ணுடன் காதல், அவளுக்கான ஒவ்வொரு தப்படியும் பொறுப்பற்ற நாயகனை இழுத்துக் கொண்டுவந்து பொதுவாழ்க்கைக்குள் தள்ளிவிடுவதுதான் மொத்தப்படமாகத்தான் இதுவரை இருந்திருக்கிறது.

மது ரம்யாவைக் காதலிப்பதும், ரம்யா இறப்பதும், மது இரண்டாம் உலகத்திற்கு பயணித்து காதலை வர்ணா மறவனுக்கு அறிமுகப்படுத்துவதுனா முழுக்கதையை இந்நேரத்திற்குள் அத்தனை பேரும் பேசி முடித்திருப்பார்கள் என்பதால் அதை விடுகிறேன். தெலுங்கில் இப்படத்தின் பெயர் வர்ணா. தமிழில் இரண்டாம் உலகம். இரண்டாம் உலகம் முழுக்க வண்ணமயமானது, தாயை கடவுளாகச் சொல்வது. அதே உலகத்தில்தான் பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். காதல் என்பதென்றறியாமல், பெண்கள் பிள்ளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாக மட்டும் நடத்தப்படுகிறார்கள். பெண்கள் அடிமைகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். அவளிடம் யாரும் அனுமதி கேட்பதில்லை (இதையெல்லாம் கேட்டுட்ருப்பாங்களா? உனக்கு பிடிச்சிருந்தா போய் எடுத்துக்கோ – வசனம்). வர்ணாவை ”அடைவது” மறவனின் நோக்கம். நண்பர்கள் சொன்னதைப்போல அவள் அனுமதிக்காக அல்ல, சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறான் இரண்டு முறை கொட்டையில் உதைபட்டு தோல்வியும் அடைகிறான் . எஜமானனால் செய்த தவறிற்கு வெளித்தள்ளப்பட்ட வர்ணாவிற்கு உணவும், குளிராடையும் கொடுத்து மறைந்து கொள்கிறான். இது ஏழுகடல் ஏழுமலை தாண்டியிருக்கும் இன்னொரு உலகம் மட்டும்தானா?

இந்த உலகத்தில் மதுபாலகிருஷ்ணன் பொதுநலவாதி. ஊருக்கு உதவுபவன். கழிப்பறை கழுவும் பெண்ணை சொந்தக்காசில் மருத்துவம் பார்ப்பவன். அப்பாவிற்கு சின்ன அசூயை கூட இன்றி குண்டி கழுவி விடுபவர். கூசுதுடா என்ன அப்பா சொல்ல சும்மாயிருப்பா என தொடர்வதெல்லாம் செல்வராகவனைத் தவிர வேறுயாராவது தமிழ் சினிமாவில் வைப்பார்களா எனத் தெரியவில்லை. ரம்யா மருத்துவர். மருத்துவமனை காட்சியிலெல்லாம் ஒன்று பிரசவம் பார்க்கிறார், அல்லது குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார். கழிப்பறை சுத்தம் செய்பவளின் குழந்தையை மதுபாலகிருஷ்ணன் கையிலேந்தும்போது ரம்யா காதலிக்கத் தொடங்குவதைப்போலத்தான், பிரசவ அறைக்குள் ரத்தம் சொட்டச் சொட்ட பிறந்த குழந்தையை ரம்யா கையில் ஏந்தும்போது மதுபாலகிருஷ்ணன் காதல் கொள்ளத் தொடங்குகிறான்.

மறவன் எல்லா செல்வா நாயகர்களைப்போலவும், பொறுப்பற்றவன். உதவாக்கரை. குடிகாரன். நாட்டுத் தளபதியின், சண்டையிடக்கூடத் தெரியாத தத்தி . வர்ணா, அனாதை. காளான்களைப் பறித்துவிற்றும், வீட்டு வேலைகளை செய்தும் தன்னைக் காப்பாற்றிக்கொள்பவள். மறவனின் மனைவியாகி அடிமைப்பட விரும்பாதவள். மறவன் மட்டுமில்லாது எந்த ஆணின் கரமும் படாமல் தனித்து வாழ விரும்புபவள். அகங்காரி. படையில் சேர வருபவளை மன்னர் தனது உடைமையாக்கிக் கொள்கிறார். அவள் ‘என்னுடையவள்’ என வந்து நிற்கும் மறவனை சிங்கத்தைக் கொல்லச் சொல்ல, மறவன் சிங்கத்துத் தோலைக் கொடுத்து, வர்ணாவை வாங்கிக்கொள்கிறான். தன்னைத்தானே குத்திக்கொண்டு இறந்துவிட முயற்சிக்கிறாள்வர்ணா.

கிட்டத்தட்ட அதே தருணத்தில்தான், ரம்யா தன் தடைகளை உடைத்து மதுபாலகிருஷ்ணனிடம் தன்னை ஒப்படைக்கிறாள். விபத்தில் உடனடியாக இறந்துவிடுகிறாள் ( 7G யாருக்குமேவா நினைவுக்கு வரவில்லை?) . இரண்டாம் உலகத்தில் அம்மா இந்த தருணத்தில்தான் வர்ணாவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்,மதுபாலக்கிருஷ்ணன் ரம்யாவின் மார்புகளையே முட்டிக்கொண்டிருப்பதையெல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

சின்னச் சின்ன வசனங்களிலும், இடைவெளிகளாலும், சுட்டப்பட்டிருப்பது இரண்டு உலகங்களும் வேறு வேறல்ல. ஒன்றோடொன்று பிணைந்தவை. இரண்டு ஆர்யாக்களும், இரண்டு அனுஷ்காக்களும் தனித்தனியர் இல்லை. அவள் இறக்க முயற்சித்து காப்பாற்றப்படும்போது இவள் இறந்து அவளைக்காப்பாற்றுகிறாள். இவன் இறக்க முயற்சிக்கும்போது, அவன் இவனை மயக்கத்தில் தன் உலகத்திற்கு தூக்கிச் செல்கிறான். எல்லாவற்றிலும் ஒற்றை இழையாக நிற்பது காதல். வாசித்த அபத்தங்களிலேயே எரிச்சலூட்டிய ஒன்று, இந்த ஆர்யா அந்த உலகம் போனதுமே பூப்பூத்துவிடுகிறது, காதல் வந்துவிடுகிறதென்றெல்லாம் வந்த வார்த்தைகள். போலவே இரண்டாம் உலகத்தில் மறவன், வர்ணாவின் மீது ’காதல்’வைத்திருந்தான் என்று புரிந்து கொண்டதொரு அபத்தம். அம்மாவைச் சாத்தான் படைகள் தூக்கிப்போகும் பாதையில்தான் மறவன் அம்மாவைக் காப்பாற்ற எதிர்ப்படுகிறான் ( வாள்சுத்தத் தெரியாதவன் இந்த இடைவெளியில் கற்றுக்கொள்கிறான். எப்படி?) ஊருக்குள் வராத வர்ணா வாளைத் தூக்கிக்கொண்டு மறவனுக்கு உதவவருகிறாள். (எல்லாம் வல்ல அம்மா சாத்தான் படைகளுக்கு உடன்படாமல், தன் இருப்பிடத்திலேயே அவர்களை அழித்திருந்தால்?) வர்ணாவை மதுபாலகிருஷ்ணன் பார்க்கும்போது…. நிற்க.. காதல் கொள்ளவில்லை. தன் காதலியை நினைத்துக்கொள்கிறான். காதலுக்கு மட்டுமே இந்த உலகம் அசைந்து வழிவிடும் என்கிறது வசனம். அதுவும் எப்போது, அவளைக்காதலிக்கிறேன் என்பதைத்தாண்டி, நினைவு மனம் எல்லாம் அவள் நிறையும் போது. இறந்து போன காதலியை திரும்ப பார்க்க நேரிடும் தருணம் அன்னியமாகத் தெரிந்தால், பிரிந்த காதலியை இன்னொருவன் மனைவியாக நீங்கள் பார்க்க நேரிடும் ஒரு சுயதருணத்தை நினைத்துப்பாருங்கள். உலகம் அசைந்து வழிவிட்டுத்தான் ஆகவேண்டும் இல்லையா?

மதுபாலகிருஷ்ணன் இரண்டு உலகங்களிலும் வெளிப்படுத்துவது அப்பழுக்கற்ற தூய அன்பை மட்டுமே. முன்பின் தெரியாத வேலைக்காரப் பெண் (அதெப்படி வேலைக்காரப்பெண் முன்பின் தெரியாமல் இருக்கமுடியும்? முதல் காட்சியைப்பார்க்கவும் ), விபத்துகளில் அடிபட்டவர்கள், சக்கர நாற்காலியில் இருக்கும் வாதம் கொண்ட அப்பா, இன்னொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட காதலி. இந்த உலகில் அப்பழுக்கற்ற அன்பு கொண்ட ஒரே ஆள் யார்? அந்த அன்பு யார் மீது செலுத்தப்படுகிறது? குழந்தை – அம்மா. இரண்டாம் உலகத்தில் வர்ணா மதுபாலகிருஷ்ணனைப்பார்த்து அவன் என் குழந்தை மாதிரி எனச் சொல்லுமிடமும் அதற்கே.

முதலாம் உலகத்தில் அப்பாவைப் பார்த்துக்கொள்கிறான், ரம்யாவைக் காதலிக்கிறான். இருவரும் இறந்தபின் இரண்டாம் உலகத்திற்கு ‘அம்மா’வால் வரவழைக்கப்படுகிறான். அங்கு, வர்ணாவிற்கு காதல் என்றால் என்ன சொல்லிக்கொடுக்கிறான். மறவன் “ நீ இப்படியே பார்த்துக்கொண்டிருந்தால் இந்த உலகத்தையே வென்று உன் காலடியில் வைப்பேன்” என்ற மதுபாலகிருஷ்ணனின் காதல் வசனத்தைச் சொன்னபின், மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறான்.

இரண்டாம் உலகத்தின் எதிர்கால அம்மா யார்? வழக்கமான செல்வராகவனின் மகேஷ்,வினோத்,குமார், வாசு, முத்து என்ற ஒற்றைப்பெயர்களைத் தாண்டி, இந்த நாயகன் ஏன் மதுபாலகிருஷ்ணன்? (இன்னொரு இரட்டைப்பெயர் கார்த்திக் சுவாமினாதன் – மயக்கம் என்ன) மழையின் ஊடாகவும், ஆற்றின் ஊடாகவும் ஏன் இந்த உலகம்-உலகம் பிரயாணம் நிகழ்கிறது? ஏன் ரம்யா முதலாம் உலகத்தில் பிரசவத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்? காமம் காரணம் காட்டி விரும்பிய எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆண் எடுத்துக்கொள்ள முடியும் ஒரு உலகத்தில் எப்படி வர்ணா அனாதையாக இருக்கிறார்? தளபதியின் மகன் தத்தியாக இருக்கும் ஒரு ஊரில் அனாதை எப்படி அவ்வளவு நேர்த்தியாக வாள் சுற்றுகிறார்? கல்யாணத்திற்கு முன் வாள் சுற்றத் தெரியாத மறவன், எனக்கும் கத்துக்கொடு என வர்ணாவிடம் கேட்கும் மறவன் இரண்டாம் பாதியில் எப்படி வாள் சுற்றுகிறான்? இவனால் அந்தக்கூட்டத்தைச் சமாளிக்க முடியாதென எப்படி வர்ணாவிற்குத் தெரியும்?

எல்லாக்கேள்விகளுக்கும் படத்திலேயே பதில்களோ, இட்டு நிரப்ப இடைவெளிகளோ இருக்கின்றன. ஒரு வழிப்பாதையாக சொல்வதைக்கேட்டு எழுந்து வர எத்தனையோ படங்கள் இருக்கையில், செல்வாவையும் மிஷ்கினையும் பாலாவையும் பிடித்து தொங்கிக்கொண்டு, ”அவர் ஏன் அதச் சொல்லல இதச்சொல்லல ஏமாத்திட்டார் ?“ என குதிப்பதெல்லாம் முட்டாள்தனமின்றி வேறில்லை. இரண்டாம் உலகம் என்பது ஒரு வகையில் செல்வராகவனின் கனவுகளுக்குள் ஒன்றில் பார்வையாளன் நுழைந்து பார்க்கும் ஒரு பயணம். பரவச அனுபவம் என்பது இந்த ஊடுருவலே.

o