நாடக அரங்குகளில் எனது பரிச்சயம் என வரிசைப்படுத்தினால், இதுவரை இரண்டு. பார்த்த முதல் நாடகம் இதே ஸ்பேசஸ் அரங்கில் சூர்ப்பணங்கு. அதைப்பற்றி எதையாவது எழுதிவிட கைபரபரத்து, சுமார் ஐந்தாறு வடிவங்களில் எழுதிப்பார்த்தும் , அந்த அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாமல் பின்வாங்கிவிட்டேன். அடுத்தது, தம்பிசெழியனின் ஓரங்க நாடகம் ஒன்று (361 இதழ் வெளியீட்டு விழா – டிஸ்கவரி புக் பேலஸ் என்று நினைவு) . மூன்றாவதாக இது.

பாலியல் தொழிலாளி சுகந்தியின் ஒரு நாள் வாழ்க்கை குறித்த “சதத் ஹசன் மண்ட்டோ”வின் ”அவமானம்” சிறுகதையே இந்த நாடகம். முதல் நாளை காலையில் எழுந்து போகும் கவுன்சிலர், ப்ரோக்கர் ராம்லால், காவலர் மாது, தோழி ஜமுனா, சுகந்தியை நிராகரித்துச் செல்லும் கோபால் நாயக்கர் எல்லாவற்றையும் இணைக்கும் ஒளி இழையாக சுகந்தி. இப்படித்தான் கட்டப்பட்டிருந்தது ’அவமானம்’.

ஜமுனாவிற்கும் சுகந்திக்குமான ஆரம்ப உரையாடல்களின் எள்ளல்தொனியும் இடைவெளிகளுடன் விழும் தபேலா இசையும் விளக்குகள் அணைக்கப்பட்ட அரங்கிலிருந்து மேடைக்குள் பார்க்கிறவனை இணைத்துவிடுகிறது. ராம்லால் அமர்ந்திருக்கும் தோரணையும் மெல்லப்புகையும் சிகரெட்டும் அரங்கின் ஓரத்தின் தனித்து விடப்பட்ட ஒற்றை விளக்கும் ஒரு நாவலின் மனிதர்களுக்குள் நடுவில் போய் நிற்பதான உணர்வையே கொடுத்தது.

நாடகங்களைப்பார்த்த பரிச்சயமில்லை என்றாலும், ஒருவாறாக கற்பனை செய்து வார்த்தைகளற்று சின்ன உடல்மொழிகளின் மூலம் சகல உணர்வுகளையும் கடத்திவிடக்கூடும் என்றே நம்புகிறேன். வார்த்தைகளை வார்த்தைகளாகவே ஒப்புவிக்க தனிமனிதனின் சில மணி நேரத்தில் உருவாகும் ஒரு எழுத்துப்பிரதி போதுமானது. அரங்க நிகழ்வுகளின் மனிதர்கள் வார்த்தைகளால் அல்ல, மனிதர்களாலேயே பிரதி எடுக்கப்படுகின்றனர். அந்த உடல் மொழிகளைத்தான் மேடை முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன்.

நிகழ்வு முழுவதும் வரப்போகும் மனிதர்கள் மேடையில் அலைவதும் , இசையும் ஆரம்பம் என்றாலும், எனக்கான நிகழ்வென்பது ராம்லாலின் சிகரெட்டில்தான் தொடங்குகிறது. எல்லாவற்றிலும் பிணைத்துக்கொண்டிருக்கும் அதே தருணத்தில் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருக்கும் ஒரு அலட்சிய பாவனை, ஒற்றை உதறலில் தீக்குச்சியை அணைத்து எறிந்துவிட்டு பார்வையாளர்களைக் கூர்ந்து பார்த்த பொழுது இருட்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவனுக்குள் மெல்லிய உதறல்.சுகந்தியைவிட வேகமாக, ஒரு பாதத்தின் மீது இன்னொரு பாதத்தை வைத்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஜமுனா நிகழ்வுடன் என்னைக்கட்டுகிறார். சுகந்திக்கும் ஜமுனாவிற்கும் இடையே பிறகெப்போதோ நடக்கப்போகும் உரையாடலுக்குப் பின் அரங்கம் இருள்கிறது பிறர் விலகுகிறார்கள் கதை தொடங்குகிறது.

கிளம்பிப்போகும் கவுன்சிலர் எண்ணிப்பார்த்து திணித்துச் செல்லும் நோட்டுகளும், வெளியேறி பின் திரும்பிவந்து தோள் துண்டை எடுக்க நிற்கும்போது சுகந்தி அதை முகத்தில் வீசும் தோரணையும் சுகந்தியை முதல் முறை அறிமுகப்படுத்துகிறது பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு.

ராம்லாலுக்கும் சுகந்திக்கும் இடையேயான உரையாடலின் ஒரு பகுதியாகத்தான் மாது வருகிறான். அவனைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே மெல்ல இருளும் அரங்கத்திலிருந்து மற்றவர்கள் மறைந்து மாதுவும் சுகந்தியும் மட்டும் மிச்சமிருக்கிறார்கள். இந்த மாயாஜாலம் ஒவ்வொரு முறை நிகழும்போதும் துணுக்குறுகிறேன். எந்த இடைவெளியில் அடுத்த காட்சிக்கான மனிதர்கள் அவர்கள் இடத்திற்கு வருகிறார்கள் எந்த இடைவெளியில் மேடையிலிருந்து மனிதர்கள் மறைந்து போகிறார்கள்.. தேர்ந்த மாயாஜாலக்காரனின் கைக்குட்டைகள் புறாக்களாக மாறும் தருணங்களை புலன்கள் தெளிந்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கும் இந்த வயதில் ஏன் கண்டடைகிறேன் என்பது விளங்கவேயில்லை. மாது சுகந்தியைக் காதலிப்பதாகச் சொல்கிறார். வீட்டைச் சுத்தம் செய்கிறார். அழுக்கு ஆடைகளைச் சுத்தம் செய்யச் சொல்கிறார். சுகந்தியை உடமையாக்கிக் கொள்வதைப்பற்றி பேசுகிறார். பிறகு அவர் கட்டளைகளைச் செய்யாவிடில் “ நாம் தொடர்ந்து நண்பர்களாக இருக்க முடியாது” என்கிறார். எனக்கான மொதல் நெருடல் முள் விழுந்த இடம் இதுவே.

ஜமுனா ஜரிகைச் சேலையும் முக்காடுமாக சுகந்தியை சந்திக்க வருகிறார். ஏற்கனவே அறிமுகமாக நிகழ்த்தப்படும் உரையாடல் முதல் முறை நிகழ்கிறது. கூச்ச சுபாவியான டாக்டர் அரங்கேறுகிறார். டாக்டரின் குழந்தையின் பாவனைகள ஒட்டிய அதீதத்துள்ளல்கள் அடுத்த நெருடல் என்றாலும், தொடர்ந்த காட்சியில் கூச்சத்தில் நெளிவதெல்லாம் மென்கவிதை. போலவே சுகந்தி தன் குழந்தைப்பிராயத்துக் கதைகளைச் சொல்லுமிடமும், மாது உடனான காதல் பற்றி ஜமுனாவிடம் சொல்லும் இடங்களும் கவிதை என்றால், ஜமுனாவும் சுகந்தியும் இணைந்து ஆடும் அந்த ஒரு நிமிட ஹிந்திப்பாடல் உறுத்தல்.

சுகந்தியின் வீட்டிற்குள் நுழைய மறுத்தும், தெருவில் நுழையத் தயங்கியும், பெண்ணைச் சுகிக்க கார் எடுத்து வந்திருக்கும் கண்ணிய மனிதர் கோபால்நாயக்கரிடம்தான் கதை தொடங்குகிறது. கோபால் நாயக்கரின் நிராகரிப்பு ச்சீ எனும் ஒற்றை வார்த்தைதான் நிகழ்வைப்புரட்டிப்போடுகிறது. சுகந்தியின் தன்னுடல் நோக்கிய சுயபார்வை அந்த இடத்தில்தான் தொடங்குகிறது. ஆளுயரக்கண்ணாடியின் ஊடாக சுகந்திகேட்கும் கேள்விகள் பார்வையாளனுக்குள் ஒரு பதட்டத்தை உண்டாக்குக்கிறது. நிராகரித்துக் கிளம்பிப்போனவன் கார் திரும்பி வரச்சொல்லி குரல் உடைந்து கத்திவிட்டு வெற்றுத்தரையில் சுகந்தி அறையும் போது பார்வையாளர்களின் பார்வைக்கோணங்கள் தாழ்கின்றன. அதிர்வுகள் மனதில் இறங்குகிறது. அழுதுமுடித்தவளின் கைக்காசை பிடுங்கிப்போக வரும் காவலரின் உடல்மொழி கச்சிதம். திரும்ப்பிப்போகிறவர் சாமி சரணம் என அலைபேசியை எடுத்து பேசத் தொடங்கும்போது அத்தனை அதிர்வையும் வெளியில் உதிர்த்துவிடும் உத்வேகத்துடன் தான் உடல் அதிர கைதட்டிக்கொண்டிருந்தேன். பிறகு வந்து மாதுவின் காதலை கேள்விகேட்பதுவும், புகைப்படங்களை உடைப்பதுவும், பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை, காரணம், கூட்டத்தில் ஒருவனாக, சுகந்தி தரையில் அறையும் காட்சியின் காலத்திலேயே நான் உறைந்திருந்தேன்.

நிகழ்வு முடிந்து திரும்பும் பாதை முழுதும், தனித்த அதிர்வுகளையும், கவித்துவ தருணங்களையும் தாண்டி முழுப்படைப்பாக, நெருடல்களுக்குள் மட்டுமே உழன்று கொண்டிருந்தேன். மாதுவுடனான உறவை காதலாக தன் உடலின் அனைத்து துவாரங்களுக்குள் ஊற்றிப்பருகவேண்டுமென்ற சுகந்தியின் வார்த்தை சுழன்று கொண்டே இருந்தது. எதோ ஒரு குறை இருப்பதாக. என்னவென்று ஒற்றை வரியில் விளக்கத்தெரியாத முடிவற்ற கேள்வியது. உடனடியாக அவமானம் சிறுகதையைப் படித்தாகவேண்டும் என்று தோன்றியது. தமிழ் மொழிபெயர்ப்புகள் நெருடும்போது, மூலத்தைத் தேடும் அதே பழக்கம். குறைந்த பட்சம், ஆங்கில மூலத்தையாவது படித்துவிடவேண்டுமென்று அவமானம் வார்த்தையின் சாத்தியமான அனைத்து ஆங்கிலப்பெயர்களையும், சதத் ஹசன் மண்ட்டோவின் பெயரையும் வைத்தும் தேடிப்பார்த்தும் கிடைக்காமல், இணையத்தில் நண்பர்களிடம் கேட்டிருந்தேன். ஒரு நண்பர் மண்டோவின் படைப்புகள் மொத்தத்தொகுதி கொடுத்தார். அதிலிருந்த அவமானம் சிறுகதையை வாசித்துப்பார்த்தேன். நெருடல்களை இனம் காண முடிந்தது.

சதத் ஹசன் மன்ண்டோ சிறுகதை ஒரு கனவுலகத்தை உருவாக்குகிறது. இதே மனிதர்கள்தான் எனினும், அவர்களுக்கிடையேயான உரையாடல்களும் அதன் தொனியும் வேறாக இருக்கிறது. உரையாடல்கள் குறைவாகவும் மனச்சித்திரங்கள் அதிகமாகவும் இருக்கிறது. புகைப்படங்களையும் நிர்வாணப்படங்களையும் தாண்டி, கட்டிலுக்குக் கீழ் கட்டப்பட்டிருக்கும் நாயும், கூண்டுக்கிளியும் கூட ஒரு பாத்திரமாக சிறுகதையில் இருக்கின்றன. ஒவ்வொரு நிகழ்விலும், கிளியும் நாயும் ஒரு குறுங்காட்சியில் வந்து போகின்றன. போலவே, நாடகத்தில் மாதுவுடனான காதல் பகுதியானது சிறுகதையில் முற்றிலும் வேறாக இருக்கிறது. அங்கு காதல் இல்லை. மிகத் தெளிவாகவே மாது சுகந்தியை ஒரு உடைமைப்பொருளாக கருதுவது காட்டப்பட்டிருக்கிறது. காதல் என்பதே இல்லை. போலவே நிகழ்வில் கோபால் நாயக்கரின் நிராகரிப்பைத் தொடர்ந்து சுகந்தி பேசும் வசனங்கள் அவமானம் என்ற இடத்தைத் தாண்டி எது அழகு என்பதான புறவயகோணத்தில் விரிய, சிறுகதையிலோ இவனொருவன் நிராகரித்தால் என்ன என அகவயமாகக் குவியத் தொடங்குகிறது. நாடகத்தில் கோபால் நாயக்கர் சுகந்தியை நிராகரிக்கிறார், சிறுகதையிலோ, தொடர்ந்த பத்திகளின் மூலம் சுகந்தி கோபால் நாயக்கரை (சிறுகதையில் சேட்) நிராகரிப்பதும், தொடர்ந்து தன்னைச் சுரண்டும் மொத்த ஆண்வர்க்கத்தையும் உதறி நிராகரிப்பதுவுமான தீர்க்கம் , நாடகத்தில் விரக்தியைப்போல மாறிவிடுகிறது. சிறுகதையில் பணம்பிடுங்கும் மாதுவிடமிருந்து தப்பிக்க, காசை ஒளித்துக்கொள்ளுமாறும், சாப்பிட காசில்லை என்று சொல்லுமாறும், ஈரானி டீக்கடையிலிருந்து உணவுவாங்கித்தரச்சொல்லுமாறும், சுகந்தியிடம் ராம்லால் கூறும் தீர்வானது நாடகத்தில் , உணவுவாங்கித்தரச்சொன்னால் தரமாட்டான் என்பதான ஒரு பரிட்சையாக மாறிவிடுகிறது. இந்த ஒற்றை வசனத்திற்காக நிகழ் அரங்கின் வெளியில் நிஜமாகவே ஒரு டீக்கடையை அமைத்து, அதற்கு ஈரானி டீ ஷாப் என பெயர் வைக்குமளவு செலுத்திய உழைப்பை இன்னும் சில தப்படிகள் சிறுகதைக்குள்ளும் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

என் உடல் அதிர தரை அறைந்த சுகந்தியின் கைகளுக்கு மயிலிறகு ஸ்பரிசத்தையும், கூர்பார்வையில் உலுக்கி எடுத்த ராம்லாலுக்கு மனாசீக முத்தங்களையும் பறக்கவிட்டு நிகழ் அரங்கிலிருந்து வெளியே வந்தேன். இரானி டீக்கடையில் ஒப்பனைகளை களைந்துவிட்டு ராம்லாலும், ஜமுனாவும், கோபால் நாயக்கரும், மாதுவும் ஒன்றாக அமர்ந்து டீயும் சமோசாவும் ஆர்டர் சொல்லிக்க்கொண்டிருந்தனர். ஸ்பேசஸிலிருந்து வெளியே வந்தேன். மழை தூறிக்கொண்டிருந்தது. நான் இந்தப்பதிவை மனதிற்குள் எழுதத் தொடங்கியிருந்தேன். நாடக அரங்குகளில் எனது பரிச்சயம் என யோசித்தால்…..

o
நவம்பர் 30 அன்று மாலை பார்த்த, கட்டியக்காரி குழுவினரின் “அவமானம்” நாடகத்தை முன்வைத்து…