மொழி அரசியல் இசை காமம்
கொலை அன்பு
கூடவே கொஞ்சம் கவிதை

எதற்கும் அருகதையற்றவன்
என்பதை எனக்கு நானே
உணர்த்திக்கொள்ளவே
இவ்வளவும் செய்கிறேன்

வேடிக்கை பார்த்திருந்துவிட்டு
கடைசியாக
பரிசுத்தத்தின் புன்னகையுடன் நீங்கள் என்னை
நெருங்கிவருவது

பதட்டம் கொள்ளச் செய்கிறது.
o
பெருவளைவின் எதோ ஒரு தடுமாற்றத்தில்
என்னை தார்ச்சாலையில்
இழுத்துச் செல்கிறது எனது
இருசக்கரவண்டி

இந்த குரூரக் கனவுக்காரனிடம்
எந்த நம்பிக்கையில்
உங்கள் குழந்தைகளை அடுத்த தெருவில்
இறக்கிவிட்டுவிடும்படி
ஒப்படைக்கிறீர்கள்?
o
கொடுக்க முடியாமல் போன
சேலைதான்
சுருக்கானது

வாசித்த சில புத்தகங்களை அடுக்கி
அதன் மேல் நின்று
எடை பார்த்து
காலில் இடறி

கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு தப்பும்போது

சொல்லவேண்டியதையெல்லாம்
சொல்லிவிட்டதான
திருப்தி.