மூன்றாவது ரவுண்ட் கவிழ்த்துக்கொண்டதும் அறையின் ஒளி மங்கத்தொடங்கியது. கனவுலகத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறோம் எனத் தோன்றிய போது அவனுக்கு பயமாக இருந்தது. உண்மையில் அவன் குடிக்க ஆரம்பித்தது மிகச் சமீபத்தில்தான். அவன் உடல் அதற்கு இன்னும் பழகவில்லை. ஆனாலும் கொஞ்சம் அதிகமாகவே இப்போதெல்லாம் மனம் ஆல்கஹாலை விரும்புகிறது. தினமும் கொஞ்சமாவது உள்ளிறங்கியாக வேண்டியிருக்கிறது. நினைவுகளை அழிப்பதற்காகத்தான் குடிக்கத்தொடங்கினான். உண்மையில் குடி அவனது குழந்தைப்பருவத்திலிருந்தே அவனைச் சுற்றி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதன் மீதான ஈர்ப்பு ஒரு நாளும் தோன்றியதில்லை. உண்மையில் எந்தப் பழக்கத்தையும் அறியாதவர்களைவிட அறிந்தவர்கள் அதிக கட்டுப்பாடுடன் இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்பது உங்களுக்குத்தெரியும்தானே? அப்படித்தான் இவனுக்கும்.

முதல்முறையாக குடிகாரர்களை இவன் தனது எட்டாவது வயதில் பார்த்தான். ஒரு திருமணவீட்டில். இரவு விருந்து முடிந்து எல்லாரும் கலைந்து அந்த பெரிய திருமண மண்டபத்தின் மூலைகளில் ஒதுங்கி தூங்கத்தொடங்கியிருந்தார்கள். இவனுக்கு தூக்கம் வராமல் உள்ளேயே அலைந்து கொண்டிருந்த போதுதான் தோட்டத்துப்பகுதியில் சத்தம் கேட்டு அந்தப் பக்கம் போனான். சீட்டுக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது ( விளையாடிக்கொண்டிருந்தது ரம்மி என்றெல்லாம் வெகு காலத்திற்கு பின் அறிந்து கொண்டான். குடியை அறிந்து கொண்டது போலவே) ஒரு பெரிய பாட்டில் நிறைய கருப்புத்திரவம். ஆளாளுக்கு கையில் ஒரு சில்வர் டம்ளர். அவ்வப்போது உறிஞ்சுக்கொள்வதும் அடுத்த சீட்டை நகர்த்துவதுமாக.

சில்வர்டம்ளர்தான் இவன் இப்பொழுது உபயோகிப்பதும். என்னவோ ஒரு பழைய நியாபத்தின் மிச்சம் என்றுதான் தோன்றுகிறது. மெல்ல ஒவ்வொரு சிப்பாக நக்கிக் குடிப்பவர்களைக் கண்டால் கடுப்பு ஏறுகிறது. அதிகபட்சம் இரண்டே மடக்கு. அல்லது ஒரே மடக்கில் எடுத்து மெதுவா டம்ப்ளரை எடுக்காமல் உறிஞ்சும்போது, ஒரு கிளாஸின் எதோ ஒரு நொடியில் வாயிலிருந்து அடிவயிறுவரை மொத்த குடலிலும் ஆல்கஹால் பயணிக்கும் நொடிதான் இவனுக்கான ஆசை. மிச்சம் இருக்கும் கால்வாசியை ஒரே மிடறில் விழுங்கிவிட்டு அந்த இரவிற்கு எடுத்துவைத்திருக்கும் முட்டை பொடிமாஸ் அல்லது ஊறுகாய் அல்லது சிக்கன் 65 அல்லது வேறு எதோ ஒன்று. பிறகு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழ உறிஞ்சினால்.. யார் அது… ஹ்ம்ம்! காலன். அவனை அருகில் அழைத்து முத்தம் குடுத்ததைப்போன்ற ஒரு உணர்வு எழும். ஒரு ரவுண்ட் என்பது இவ்வளவுதானா?

முதலில் அவர்களைப்பார்த்தபொழுது, இவனுக்கு பாட்டில் திரவத்தை விட கையில் இருக்கும் சீட்டுகளில்தான் ஆர்வம்வந்தது. இவன் விட்டிலும் வீட்டில் விட்டத்திற்கும் சுவரின் உச்சிக்கும் இடைப்பட்ட சந்தில் இரண்டு மூன்று கட்டு சீட்டுகள் உண்டு. சிங்கப்பூரிலிருந்து உறவினர் யாரோ கொடுத்துவிட்டது. பிளேடின் கூர்மை கொண்ட பிளாஸ்டிக் தகடுகளைப்போலிருக்கும் அந்த சீட்டுகளின் நுனியில் சரிகை வேட்டியின் ஒற்றை இழை அளவு தங்கமுலாமோ என்னவோ பூசியிருக்கும். குழந்தைகள் சீட்டு விளையாடக்கூடாது என்று சொல்லி அதை எங்களுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பார்கள். ஆனாலும் பக்கத்தில் ஒரு கதவு உண்டு. வீட்டின் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு நாள் அதை எடுத்து புரட்டிப்பார்த்திருக்கிறேன். எண்களும், அதன் குறிகளும் எனக்குப்பிடித்ததேயில்லை. ஜேக்கிலிருந்து கிங் வரையிலான பொம்மைகள் கொண்ட சீட்டுகளே எனது விருப்பம். திருப்பிப்பார்த்தாலும் இரண்டு பக்கமும் இளவரசன், அல்லது ராணி அல்லது…

தேடிப்பார்த்தால் பொடிமாஸ் தீர்ந்துவிட்டிருந்தது. எழுந்து இரண்டு முட்டைகளை உடைத்து பொடிமாஸ் போடவும் சோம்பேறித்தனம். அதுவும் போக முழுபோதையில் பாத்திரத்தைத் தவிர அடுப்பைச் சுற்றி முட்டையை ஊற்றிவைத்து மறு நாள் எழுந்து மாய்ந்து மாய்ந்து துடைத்துக்கொண்டிருந்த பழைய நினைவுகள் வேறு வந்தன. சுற்றிலும் பார்த்தான்.. அழுக்குத்துணிப்பையின் அருகே ஊறுகாய் பாட்டில் உருண்டு கிடந்தது. எடுத்து திறந்து பார்த்தான். கிட்டத்தட்ட ஊறுகாயின் மசாலா அத்தனையும் ஏற்கனவே வழித்தெடுக்கப்பட்டு நாலைந்து மாங்காய்பிஞ்சுகள் மட்டும் சத்தியத்திற்குக்கட்டுப்பட்டு கொஞ்சம் ஈரத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தன. ஒன்றை எடுத்து கடித்தான்.. காரம். காரம்தான் எல்லாவற்றையும் குணப்படுத்துகிறது.. சாரி… காலம்தான் குணப்படுத்துமா? ம்ம்ஹும். இந்த நேரத்தில் காரம் குணப்படுத்தும் எனத் தோன்றியது.

அந்தக்கட்டுகளை வைத்துக்கொண்டுதான் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பொம்மை ராஜாக்களும், வெற்றிலை எண்களும், இதய ராணிகளும் அமர்ந்திருந்த ஜமாவின் நடுவில் நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தனர். அந்தக் கணக்குகள் புரியவில்லை. ஆனாலும் மொழி புரியாத திரைப்படத்தின் இசையில் லயித்த மிருகத்தைப்போல இவன் அவர்களின் ஆட்டத்திற்குள்ளாகவே இவனுக்கான எதையோ கண்டுகொண்டான். தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தவனை அவர்கள் அழைத்தார்கள். நடுவில் வெட்டி வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் துண்டுகளின் தட்டு ஒன்று இவனுக்குக் கொடுக்கப்பட்டது. கையில் வைத்துக்கொண்டான். அருகில் இருந்தவர்களின் தொப்பைகளைத்தாண்டி நடுவில் நடப்பது தெரியவில்லை. கொஞ்சம் குதிகாலை உயர்த்தி, புட்டத்தை அதன் மேல் வைத்து தன் தலையை எக்கியவாறு அமர்ந்துகொண்டான். மடியில் ஆப்பிள் தட்டு. வசதியாக இருந்தது. எண்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

நண்பர்களுடன் இவன் பஃபுகளுக்குப் போவதுண்டு. குடிக்கத்தொடங்கும் முன்பாகவே. அப்பொதும் திரவங்களின் மீது எந்த ஆர்வமும் வந்ததில்லை. அவர்கள் குடித்துக்கொண்டிருக்க, இவன் அவர்களின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். ஒவ்வொரு ரவுண்ட் ஏறும் போதும், முகம் கலங்கத் தொடங்கும், அல்லது அதைத் தெளிவு என்று கூட சொல்லலாம். ஒரு வகை கூர்மையை நோக்கி கண்விழிகள் நகர்வதாகத் தோன்றும். ஒவ்வொருவராக முகமூடிகளைக் கழட்டுவார்கள். என்னவாக நடித்தார்களோ எல்லாவற்றிலிருந்தும் வெளியேறத்தொடங்குவார்கள். வார்த்தைகள் குழறினாலும், இதுவரையிலான பொய்களை விட, இந்த மாதிரியான நேரங்களில் வந்து விழும் உண்மைகள் மிகவும் சுவாரசியமாகவும், நிஜமாகவும் இருக்கும். பனிக்குட நீரைப்போல அத்தனை தூய்மயான, அதே சமயம் அழுக்கான உண்மைகள்.

அவர்களில் ஒருவர் இவனை கொஞ்சம் குடிக்கிறாயா எனக் கேட்டார்கள். இவன் மறுத்தபிறகு அவர்களும் அதே போல் தலையசைத்து தங்களுக்குள் உரக்கச் சிரித்தார்கள். இவனுக்குப் புரியவில்லை. அடுத்த துண்டு ஆப்பிளை கொஞ்சம் வெறுப்புடன் அதிக அரைவை போட்டு முழுங்கினான். விதை தொண்டையில் சிக்கி கண்ணீர் தொட்டது. ஆனாலும், துடைத்தால், அவர்கள் மறுபடியும் இன்னொரு முறை சிரிப்பார்கள் என்று தோன்றியதால் துடைக்கவில்லை. தூசியைப்போல கண்ணீர் அங்கேயே திரண்டு நின்றிருந்தது. அவர்கள் மொத்தமாகக் கலைத்துவிட்டு அடுத்த வரிசையில் சீட்டுகளைத் தங்களுக்குள் பிரித்தார்கள். இவன் இந்த முறை கொஞ்சம் கூர்மையாக கவனிக்கத்தொடங்கினான். ஆளுக்கு பதிமூணு சீட்டுகள். அப்புறம் ஒரு சீட்டை எடுத்து கட்டின் கீழே குறுக்காக மறைத்துவைக்கிறார்கள் ( ஆமா கடைசி சீட்டை அப்படி மறைக்கப்பட்ட சீட்டா வைச்சுட்டா என்ன? ஏன் தனியா எடுத்து குறுக்கால வைக்கணும்?) பிறகு ஒருவர் மாத்தி ஒருவர் அதே கட்டிலிருந்து..

அன்று மாலை அவளிடமிருந்து அந்த குறுஞ்செய்தி வந்திருந்தது. ”Good bye for ever”. இது நிகழுமென்று சில மாதங்களாகவே எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும் அந்த நிமிடம் அந்த சிக்னலில் திடிரென நெருப்பு பட்டு மொத்த ஆடைகளும் எரிந்துபோய் நிர்வாணமாய் நிற்பதைப்போன்று ஒரு நிமிடம் உறைந்து போனான். சிக்னல் மாறியது தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். எவனோ ஒரு தலைக்கவசம் அணிந்திருந்த இருசக்கரவண்டியோட்டி கால்களுக்கு அருகில் வழுக்கிச் சென்று ரோட்டின் நடுத் தடுப்பில் மோதினான். யாரோ இவனை இழுத்துப்போய் ஓரத்தில் விட்டார்கள். இவன் தவறு நொடிப்பொழுதில் வண்டியோட்டின் தவறாக மாறிப்போயிருந்தது. ரோட்டைக் கடந்திருந்த அந்த இடத்தில் மூன்று நட்சத்திர ஹோட்டலொன்று பார் விளம்பரத்துடன் இவனை அழைத்தது. இன்று முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றி உள்ளே நுழைந்து அந்த ஹோட்டலில் பாரின் மூலையிலிருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.

அவர்களில் ஒருவரின் காசு முடிந்திருந்தது. கலைந்த தலையும் சிவந்த கண்களுமாக அருகிலிருந்தவரிடம் எதோ கெஞ்சிக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரை அதட்டி அமைதியாக இருக்கச் சொன்னார்கள். அவர் கெஞ்சல் கொஞ்சம் கொஞ்சமாக சண்டையாக உருமாறிக்கொண்டிருந்தது.

இரவுகளில் தூக்கம் வருவதற்காக, அல்லது நினைவுகளை மறப்பதற்காக என்றெல்லாம் இவன் தெளிவாக இருக்கும்போது கேட்டால் ஆயிரம் விளக்கங்களை இவனும் சொல்லக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. நான்காவது ஐந்தாவது தம்மிற்கு.. இல்லை.. பொடிமாஸ்..ச்சே…. ரவுண்டிற்கு பிறகு இவனிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையில் ஆல்கஹால் மூளையைச் சோர்வுறச் செய்கிறது. உடலையும். மனதையும். ஆனால் மறக்க விரும்பும் நியாபங்கள் அதற்குப்பிறகுதான் மேலெழத் தொடங்குகின்றன. ஒவ்வொரு ரவுண்டிற்கும் ஒவ்வொரு பிரக்ஞையாக செயலிழக்கத்தொடங்கி, கடைசி ரவுண்டில் ஆழ்மனம் மட்டுமே விழித்திருக்கிறது. அதில்தான் மறக்கவிரும்பிய அத்தனை நினைவுகளும் புதைந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக மெல்ல மேலே மேலே வரும்போது…

புட்டி காலியாகியிருந்தது. ஆறாவது ரவுண்ட் அதற்குள் முடிந்துவிட்டதா? கடைசித்துண்டு மாங்காய்ப்பிஞ்சை எடுத்து கடிக்கும்போது, கடைசி ரவுண்டாகிவிட்டதில், கோக் கலந்தானா இல்லையா என்றொரு சந்தேகம் வந்தது. பாட்டிலைக் குலுக்கிப்பார்த்தான். எதுவும் இல்லை. கர்ணன் படப்பாடல் நினைவுக்கு வந்தது. யூட்யூபில் உள்ளத்தில் நல்ல உள்ளம் தேடினால் சிவாஜி தேர்ச்சக்கரத்தில் படுத்திருக்க, யாரோ மாவு பூசியவர் சுற்றிசுற்றி நடந்து கொண்டிருந்தார். கடுப்பாக வந்தது. soothing performance by gowtham… கிடைத்தது… தாய்க்கு நீ மகனில்லை… தம்பிக்கு அண்ணனில்லை… இவன் உடைந்து அழத்தொடங்கினான்…