(அலுவலகத்தில் நடக்கும் ஒரு போட்டிக்காக எழுதத்தொடங்கியிருக்கும் ஒரு காதல் தொடர் 🙂 )

o

”எப்படில இது?” முத்து கேட்டான். அவனுக்கு இன்னும் ஆச்சர்யம் தீரவில்லை. ”எப்படில அவ உன்னப்பாக்கா?” மறுபடியும் கேட்டான்.

நந்து காபியை குடித்து முடித்திருந்தான். முத்துவின் டம்ளரில் காபி அப்படியே இருந்தது.

“அதெல்லாம் அப்டிதான் மக்கா.. கொஞ்ச நாளாவே அவ என்னத்தான் பாத்துட்டு இருக்கா சொன்னா நம்புதியளா நீயும் அவனும். இப்ப பாத்துட்டல்ல.. போய் அவன்கிட்டச் சொல்லு”.

நந்து சொல்லிவிட்டு எழுந்தான். முத்து மிச்சமிருந்த காப்பியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவனும் ஓடிவந்தான். இருவரும் அவரவர் பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு சைக்கிளை வீடு நோக்கி மிதிக்க ஆரம்பித்தனர். பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கியிருந்ததால் நந்து, முத்து, மணி இன்னும் சிலர் பள்ளியிலேயே இரவு தங்கிப்படிக்க ஏற்பாடாகியிருந்தது. முந்தைய இரவுதான், அஷ்வினி விவகாரத்தில் நந்துவிற்கும் மணிக்கும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் போய் முடிந்திருந்தது. அஷ்வினியும் அதே வகுப்புப் பெண். கொஞ்சம் துறுதுறு. நிறைய அழகு. கிராமத்தின் எண்ணைப்பிசுக்குகள் அண்டாத ஷாம்புவில் அலையும் தலைமுடி. சீருடையிலும், காட்டன் கசங்கல்கள் அற்று சீராக தேய்க்கப்பட்ட உடைகள். அரும்பு மீசைக்காரர்களின் கனவுக்கன்னி.
அஷ்வினியை நந்து பெரிதாய் கவனித்ததில்லை. முதல்முறை அவன் கவனித்ததே மணி சொல்லித்தான். நந்து புத்தகப்புழு. பாடப்புத்தகங்களிலிருந்து, வாராந்தரி, தினசரிகள், லைப்ரரியின் கெட்டி அட்டைப்புத்தகங்கள், சுண்டல் மடித்த காகிதம் என எதையாவது எப்பொழுதும் வாசித்துக்கொண்டிருப்பவன். மணிக்கு பெண்கள்தான் பாடம், பொழுதுபோக்கு எல்லாமும். அஷ்வினி பத்தாவது சேர்வதாக எந்தூரிலிருந்தோ இந்தப்பள்ளிக்கு மாற்றல் வாங்கி வந்திருந்த முதல் நாளே மணி கவனித்திருந்தான். பாடம் ஏறாது. எதிலாவது தன்னை நிருபிக்கும் ஆர்வம் பெண்களிடம் கொண்டுபோய் அவனை நிறுத்தியிருந்தது. பள்ளியின் சீனியர் ஜீனியர் என வரைமுறை இல்லாமல் அவனிடம் கதைகள் இருக்கும். அவர்கள் வயசுக்கு வந்த போது, அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு எழுதிய லீவ் லெட்டர்களின் கலெக்‌ஷன் சேகரித்து வைக்குமளவுக்கு.

அஷ்வினி தனது பிறந்த நாளுக்கு, புதுத்துணி அணிந்து பள்ளிவந்திருந்த போதுதான், மணி நந்துவைக்கூப்பிட்டு அவளைப் பார்க்கச்சொன்னான். அதுவும், மணிக்கு பிடித்த வெளிர் நீலத்தில் அவள் உடை இருந்ததால், அவள் இவனுக்காகத்தான் அந்த நிறத்தில் ஆடையைத் தேர்ந்தெடுத்ததாகவும், பிறந்த நாளுக்கென்று இவனுக்கு மட்டும் வீட்டிலிருந்து கேக் கொண்டுவந்ததாகவும் கூடவே சேர்த்துச் சொன்னான். நந்து அப்படி ஒரு பெண் தன் வகுப்பில் அன்றுதான் சேர்ந்ததைப்போல அவளை உணர்ந்தான். அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான். அன்று முழுவதும். பள்ளி விடும்வரை.

இதுவரையிலான பெண்கள் இவனைச் சிறுவனாக நடத்தியிருந்த போது, அஷ்வினி முதல்முறையாக நந்துவை ஒரு ஆணாக உணரச்செய்தாள். இதுவரை கவனிக்காத அரும்பு மீசையை அன்றிரவுதான் நந்து முதல் முதலாக கண்ணாடியின் அருகே முகத்தை வைத்து கவனித்தான். ஒவ்வொரு முறை காதுகளின் ஓரங்களில் அஷ்வினி முடிக்கற்றையை ஒதுக்கும்போது நந்துவிற்கும் உடல்கூசியது. கைமயிர்கள் கூச்செறிந்தன. ஒரு முறை ஒரே முறை அஷ்வினி முடிக்கற்றைகளை ஒதுக்கும்போது நந்துவைப்பார்த்தாள். கண்களைத் தாழ்த்திக்கொண்டாள். சிரித்தது போல் இருந்தது. உடைகளை இன்னொரு முறை நேர்படுத்திக்கொண்டு பாடத்தைக் கவனிக்கத் தொடங்கினாள். பாடங்களின் மீது நந்துவுக்கு வெறுப்பு வரத்தொடங்கியதும் அப்பொழுதிருந்துதான்.
o
” நீ ஏம்ல முத்துவ அடிச்ச.. என்ன இருந்தாலும் அவந்தான் உனக்கு அவளக்காட்டிக்குடுத்துருக்கான்”

“கிளிச்சான். அவன் புழுவுனில. சொன்னதெல்லாம் பொய்யி. என்னமோ ரெண்டுபேரும் ஒண்ணாச்சுத்துர மாதிரில்லா நம்மட்டச்சொல்லுதான். ஆனா அவன் அவட்ட பேசுனதே இல்லியாம் தெரியுமா?”

” நெசமாவல மக்கா?உனக்யார்ல சொன்னா?”

“அஷ்வினியே சொன்னா அன்னிக்கு. பீட்டி பீரியட்ல தண்ணிகுடிக்க கிளாஸ்க்கு வந்தம்ல. அப்ப அவ எதோ வயித்தவலின்னு கிளாஸ்லதான் இருந்தா..”

“வயித்தவலின்னா அதாடே?” முத்து திரும்பி கண்ணடித்தான்.

“உட்டு ஏத்துனம்னா வாயெல்லாம் கிழிஞ்சிரும் பாத்துக்க.. நான் சொல்லவா வேண்டாமா?”

“செரி செரி சொல்லு.. அவ என்ன சொன்னா?”

”ம்ம்… இவனப்பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணா.. எல்லார்க்கிட்டையும் அவ இவன லவ் பண்றதா சொல்லிட்டு திரியுதானாம். அவகூட்டுப் புள்ளைங்கள்லாம் அவள கிண்டல் அடிக்குதுகளாம். நாமதான் கூடவே சுத்துறோம், நீயாவது அவன்ட்ட சொல்லி, இல்லைனா எச்செம்ட சொல்லவேண்டியாயிரும்ங்கா”

“அதுக்கு நீ பாட்டுக்குப்போய் அவன அடிக்கியே.. இப்ப பிளஸ்டூ அண்ணன்மாரெல்லாம் அவன் சாதிதான் தெரியுமா. வந்து மிதிச்சானுவன்னா என்ன பண்ணுவ?”

“அதெல்லாம் பாத்துக்கிடலாம்ல. இவன மிதிச்சதுல எனக்கொரு சந்தோசம், நான் மிதிச்சேன்னு அவளுக்கும் ஒரு சந்தோசம், அதானடே வேணும் நமக்கு”

“ நமக்கா?”

“செரி எனக்கு.. நீயுந்தான இருந்த, நான் எவ்ளோ தன்மையா இவண்ட்ட சொன்னேன். அவ என்னையப் பாக்குதுதல ஆரம்பிச்சு, கம்ப்ளெயிண்ட் வரைக்கும் சொன்னேன்ல.. அவந்தான் ஏறுனான். அப்புறம் எங்கையென்ன புளியங்கா பறிக்கப்போவுமா?

”யெப்பா சாமி. ஒங்க பஞ்சாயத்துல என்னைய இழுக்காதிய. நீயாச்சு அவனாச்சு. எனக்கு ரெண்டு பேருமே பிரண்டு. அவ்ளோதான்.”

o
இரவில் நடந்த அடிதடி மறுநாள் பள்ளி முழுவதும் பரவியிருந்தது. உண்மையில் நந்துதான் அதை சில உளறல் நண்பர்களின் மூலமாக பரப்பியிருந்தான். சீனியர் செட்டில், மணியின் ஊர்க்கார்கள் நந்துவின் மீது கடுப்பில் இருந்தனர். வகுப்பறை விட்டு வெளியே போனால் எதோ ஒரு வகையில் அடி விழும் என்று நந்துவிற்கும் தெரியும் என்பதால் வகுப்பிலேயே இருந்தான். உணவு இடைவேளையில் வழக்கமாகப் போகும் மரத்தடிக்குப்போகாமல், வகுப்பிலேயே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அஷ்வினியும் அவள் தோழிகளும் பெண்கள் பகுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். முடித்துக்கிளம்பும்போது தோழிகளில் ஒருத்தி சத்தம் விட்டாள்

“ஆமாமா. நிறைய சாப்டுடே. இன்னிக்கும் நைட்டு சண்டைபோடணும்ன்லா.. தெம்பா இருக்கும்”

தோழிகள் சிரித்துக்கொண்டே வெளியேபோனார்கள். அஷ்வினி போகவில்லை.

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும் நந்து”

“சொல்…சொல்லு”

“ஏன் அவன அடிச்ச”

“இல்ல.. நீ சொன்னதத்தான் கேட்டேன். அவன் எகிறுனான். சண்டையாயிட்டு. விடமுடியாதுல்லா” நந்துவின் கைகள் சட்டைக்காலரை பின்பக்கம் அன்னிச்சையாக ஏற்றிவிட்டுக்கொண்டன.

“இப்ப என்ன நீயும் அவன மாதிரியேதான் லவ்வுகிவ்வுன்னு ஆரம்பிக்கப்போறியா?”

“இல்ல.. அதுவந்து..”

“ஒவ்வொருத்தர்ட்டையா போய், அவளுக்காக அவன அடிச்சேன்னு பெருமை பீத்திட்டு திரியணும்.. நாங்க சொக்கி லெட்டர் எழுதணூம்… அதான? அதெல்லாம் எங்கிட்ட நடக்காது”

“….”

“என்ன முழிக்கிற? புடிச்சிருக்காக்கும்? லவ் பண்ணுதியளாக்கும்?”

நந்து ஒரு வேகத்தில் குமிழ் உடைந்து உளறினான்.

“ம்ம.. அது வந்து,, அன்னிக்கு உன் பிறந்த நாளைக்கு நீ ப்ளூ கலர் ட்ரெஸ்ல வந்திருந்த.. அப்புறம் அன்னிக்கொரு நாள் ஒத்தப்பின்னல்.. அப்புறம்..”

“அப்புறம்?”

“ஆமா”

”இதச்சொல்ல ஏன் எருமைமாடே சுத்திவளைக்கிற… நானுந்தான்..”

சொல்லிவிட்டு அஷ்வினி வகுப்பைவிட்டு வேகமாய் ஓடிவிட்டாள். நந்துவிற்கு சில நிமிடங்கள் என்ன நடந்ததென்றே புரியவில்லை.. எதோ சந்தோஷமாக இருந்தது. தன்னைப்பார்க்கப்போகும் ஒரு பெண், தன் பெயரை பின்னால் சேர்த்து பெஞ்சுகளில் எழுதிக்கொண்டு என்னைப்பார்த்துச் சிரிக்கப்போகும் ஒரு பெண். பிற்காலத்தில் என்றாவது ஒரு நாள், நம் சொந்த பைக்கில் உக்காரவைத்து ஊரெல்லாம் வலம் வரப்போகும் ஒரு பெண், தன் காதலை அதுவும் இந்த சாப்பிட்டதற்கும் கைகழுவுவதற்கும் இடையில்தான் முடிவாக வேண்டுமா? சினிமாக்களைப்போல, கிரீட்டிங்க் கார்டில் பூவைத்தெல்லாம் மண்டி போட்டு நீட்ட வேண்டிய அவசியமில்லையா.. குழப்பமாக இருந்தது. டிபன்பாக்ஸை மூடி பையில் வைத்துவிட்டு மூலையிலிருந்த குடிதண்ணீர் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து ஜன்னல் வழியாக எட்டி கைகழுவிட்டு பெஞ்சிலேயே படுத்தான். இடைவேளை முடிய இன்னொரு அரைமணி நேரம் இருந்தது.

o
பருவத்தின் அத்தனை சேட்டைகளையும் அஷ்வினியும் நந்துவும் அதன்பிறகு செய்துகொண்டிருந்தார்கள். பாடம் நடக்கும்போதே ஒருவருக்கொருவர் தற்செயலாய் நடப்பது போல திரும்பிப்பார்த்துக்கொண்டார்கள். கண்கள் சந்திக்க நேரும்போது சிரித்துக்கொண்டார்கள். நண்பர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தவர்கள் ஓர இடங்களுக்கு மாறினார்கள். வகுப்பிற்கான வேடிக்கைப்பொருளாய் இவர்களுக்குள் நடமாடிக்கொண்டிருந்த பேப்பர் வினியோகங்கள் இருந்தன. நந்து ராக்கெட் அனுப்ப, அஷ்வினி எதாவது பதில் எழுதி மொத்தத்தையும் கசக்கி ஒரு பந்தைப்போல இவன் மீது எறிந்து கொண்டிருந்தாள். ஆசிரியர்கள் ஜாடைமாடையாக இருவரையும் தனித்தனியே கூப்பிட்டு கண்டிப்பது ஒரு வழக்கமாகவே மாறியிருந்தது. இவர்கள் அந்தக் கதைகளையும் ஒருவருக்கொருவர் எழுதி எறிந்து கொண்டு சிரித்தார்கள். அஷ்வினி வீடிருக்கும் தெருவரை இருவரும் நடந்துபோய், பிறகு தன் வீட்டிற்கு நந்து சைக்கிளேறிய கூத்துகள் நடந்தன. முழுவாண்டுத் தேர்வு தொடங்கும்வரை.

o
”வாய்ப்பிருந்தா மறுபடி பாக்கலாண்டா”

“ஏம்ட்டி லூசுமாதிரி பேசுத. மூணுமாசந்தான லீவு. பிளஸொண்ணுக்கு அம்மா தாவணியெல்லாம் போட்டுட்டு வருவீங்கள்ல… அதுக்காக வெயிட் பண்றேன்”

“இல்லடா. அப்பாவுக்கு மதுரைக்கு மாத்தலாகிட்டு. அங்கதான் போறோம். என் பரிட்சைக்காகத்தான் மார்றத தடுத்துவச்சிருந்தாரு. லீவுல எப்படியும் மதுரைக்குப்போய்டுவோம்”

”என்னட்ட இப்படிச் சொல்லுத இப்பவந்து.. இதெப்பெத்தெரியும் உனக்கு?”

“ போனவாரந்தான்…”

“அப்பவே ஏன் சொல்லல”

“பரிச்சை. நீ படிப்பியோ மாட்டியோன்னு”

“அக்கறை இருக்கிறவ எதாவது வழி சொல்லணும்ல.. லெட்டராவது போடுவியா?”

“இல்லப்பா கஷ்டம். வீட்ல தெரிஞ்சா பிரச்சினையாயிரும். நான் மாமாவீட்டுக்கு அப்பப்ப இங்க வருவேன். அப்ப கண்டிப்பா சொல்லுதேன்”

“..”

“என்னக்கட்டிப்பிடிச்சுக்கோடா”

அஷ்வினிக்கும் நந்துவிற்குமான முதல் ஸ்பரிசமாகவும், கடைசி ஸ்பரிசமாகவும் அது இருந்தது.

– அடுத்து பரணி வருவாள்