பாகம் 1

o

நந்து காத்திருந்த முற்றத்தில் வேப்பம்பூக்களும் பழங்களும் உதிர்ந்து கிடந்தன. தென்றல் அவன் தலைமுடிகளுக்குள் நுழையும்படி வீசிக்கொண்டிருந்தது. உள்ளிருந்து அவள் வந்தாள்.

“யார்ங்க?”

“இல்ல.. அண்ணாவியப்பாக்கணும். நந்துன்னு சொன்னா அவருக்குத் தெரியும்..இன்னிக்கு வரச்சொல்லியிருந்தார்”

அவள் திரும்பி உள்ளே போனாள். வேப்பங்காற்று கலைக்கும் தாவணி. எதோ குமரியம்மனைப்போல், பட்டுசரிகை பாவாடையும் ஜாக்கெட்டும். அவள் உள்ளே போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். காற்று இதமாக இருந்தது. அவள் போன கொஞ்ச நேரத்தில் வந்தார்.

“ நீயாடே.. வா. ஏன் நிக்க?திண்ணையில இரி. என்னவிஷேஷம்?”

“இல்ல.. இன்னிக்கு வரச்சொல்லிருந்தீங்க… சோதிடம் கத்துக்கிற விஷயமா?”

“அட ஆமா, மறந்தே போய்ட்டேன். அதுச்செரி திடம் கத்துக்கிட இப்ப என்னடே அவசரம். உன் வயசென்ன ஒரு பதினஞ்சு இருக்கும்மா?”

“ஆமாங்க. ஸ்கூல் லீவு. சும்மா இருக்கப்ப கத்துக்கலாம்னு”

“ஓ தொரைக்கு பொழுதுபோக்குக்கு கத்துக்க வந்தியளோ?”

“அப்டி இல்லீங்க. தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம்தான். “

“இங்கபார்டே. இதொண்ணும் வெளாட்டுக்காரியமில்ல. தேவக்கணக்கு. அதெல்லாம் மூணுமாசத்துல தெரிஞ்சுராது. நான் என் அண்ணாவிகூட ஆறுவருஷம் அலைஞ்சப்புறம்தான் அவர் சுவடிக்கட்டையே தொட விட்டார் தெரியுமா?”

“….”

“சரி.. டெய்லி வந்து போக இரி. நானாப்பாத்து பாடம் ஆரம்பிக்கிறவரைக்கும் எதும் கேட்கக்கூடாது தெரியுதா?”

“சரிங்க அண்ணாவி”

o

நந்து இந்த விடுமுறை நாட்களை முழுவதுமாய் அள்ளி பருகிவிடும் முடிவிலிருந்தான். காலையில் கணினி வகுப்பு. மதியத்திற்கு மேல் அண்ணாவி வீட்டில் ஜோதிட உதவிகள். உண்மையில் அங்கு எந்த வேலையும் கிடையாது. அண்ணாவி, பிஸியான ஜோதிடரும் கிடையாது. கைராசிக்காரர் என பழைய ஆட்களும், அவரிடம் ஒருவார்த்தை கேட்கலாம் என ஊரின் எல்லா ஜோதிடக்காரர்களுக்கும் போய்வரும் புதிய ஆசாமிகளும் மட்டும் வருவதுண்டு. ஆள்வராத நேரங்களில் அண்ணாவி பேசிக்கொண்டேயிருப்பார். அது புராணக்கதையில் தொடங்கி, ஜோதிட காரணிகளை நோக்கி விரிந்து நடப்பு அரசியலில்தான் போய் நிற்கும். வயசான காலத்தில் புதிய நண்பனாகவும், பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் மட சீடனாகவும் நந்து இருந்தான்.

மதியச்சாப்பாட்டில் ஆரம்பிக்கும் கச்சேரி. நடுவில் யாராவது ஜோதிடம் பார்க்கவந்தால், அவர் ஜாதக்கட்டுகளை வாங்கி, மனக்கணக்குகளைப்போட்டு, ஒரு எண்ணைக் கண்டுபிடித்துச் சொல்வார். அந்த எண் போட்ட நோட்டை முதல் அறையில் அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கவேண்டியது நந்துவின் வேலை. அந்த நோட்டிலேயே வந்திருக்கும் ஜாதகத்திற்கான பலாபலன்களை அவருக்கு மட்டும் புரியும் செய்யுள்களில் எழுதி வைத்திருப்பார். அந்த நோட்டுகள் கூட, அவரே தன் குருவிடம் கற்றுக்கொண்ட ஜோதிடத்தின் அடிப்படையில் கணிதச்சமன்பாடுகளை உருவாக்கி, முழுக்க கைப்பட எழுதிவைத்தவை. வருடம் ஒரு முறை பிரதியெடுப்பதற்காகவே அண்ணாவியின் அக்கா பையன்கள் இருவர் எதோ ஊரிலிருந்து வருவார்கள். பழைய நோட்டைப்பார்த்து ஈயடிச்சான் காப்பி போல புது செட் நோட்டுகளில் எழுதிக்குவித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள். அவர்கள் மூலமாகத்தான் பரணியிடம் பேசத் தொடங்கினான் நந்து.

o

நந்து வந்தபோது அண்ணாவின் மருமகன்கள் இருவரும், திண்ணையில் கால் ஒருக்களித்து அமர்ந்து நோட்டுகளை காப்பிஎடுத்துக்கொண்டிருந்தனர். அண்ணாவியின் சைக்கிள் இல்லை. வெளியில் எங்காவது போயிருக்கக்கூடும்.

“என்னண்ணே… ஆரம்பிச்சாச்சா?”

“ஆமாடே.. நீயென்ன புதுச்சட்டை சந்தனம் குங்குமம்னு ஜெகஜோதியாவந்திருக்க.. பொண்ணுகிண்ணு பாக்கப்போறியா?”

“இல்லைண்ணே.. அம்மாப்பா கல்யாண நாளு.. கோயிலுக்குப்போயிருந்தோம். அதான். இந்தாங்கண்ணே சாக்லேட்”

”ஓ. செரி செரி. ஏம்ல.. எங்களுக்கு மட்டும்தானா?”

“இல்லீங்க.. அண்ணாவிக்கு அம்மா பாயசம் கொடுத்துவிட்டுட்டாங்க காலைலையே”

“அட கிறுக்குப்பயல.. அதில்ல. பரணிக்கு சாக்லேட் கொண்டுவந்தியா?”

“அய்யோ இல்லைண்ணே..”

“லேய் உண்மையச் சொல்லு. நாங்க எப்பவாது வர்றவங்க.. நீ நெதம் இங்கதான் கெடக்க. பரணிப்புள்ளைட்ட எதுனா பேசுனியா? நாங்கதான.. சும்மா சொல்லு”

“அய்யோ. அப்டில்லாம் எதும் இல்லைண்ணே..”

இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.பிறகு நந்து பக்கம் திரும்பி..

“செரி.. அவளுக்கும் ஒரு சாக்லெட் குடுத்துரு. குடுக்கும்போது பெரியத்தான் குடுக்கச்சொன்னாருன்னு ஞாபவமா சொல்லியுட்ரு.. என்ன?”

நந்து கையில் வேறு சாக்லேட் இல்லை. மறுபடியும் சாக்லேட் வாங்க லொங்கு லொங்கு என அரக்கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்கவேண்டும். மிதித்தான். சாக்லேட் வாங்கித் திரும்பும்போது இருவரும் திண்ணையில் இல்லை. நோட்டுகள் மூடிவைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் காலி காபி டம்ளர் இருந்தது. நந்து வாசலுக்குப்போய் வாசலுக்குப் போய் குரல் கொடுத்தான்..

”ஏங்க. ஏங்க..”

“ அட உள்ள வா நந்து. பாத்திரம் தேய்ச்சுட்டு இருக்கேன்.”

நந்து நுழைந்த போது உள்முற்றத்தின் கிணற்றடியில் சண்டை நடந்து முடிந்திருந்த தெரு போல எச்சில்பாத்திரங்கள் சபீனா வாசத்துடன் ஈரம்கொண்டு கிடந்தன. கச்சேரிக்காரன் வாத்தியங்களுடன் போராடுவதைப்போல நடுவில் பரணி அமர்ந்திருந்தாள். ஒரு பக்கமாக இடுப்பில் தூக்கிச்செருகப்பட்ட பாவாடை. ரிஷிகள் ஸ்டைலில் உச்சந்தலையில் உருட்டிக் கட்டப்பட்ட கொண்டை. கையில் கரியும், சபீனாவும், சோப்பும் கலந்த கலவை. நடுவில் ஒரு முறை முகத்தில் விழும் முடியை அவள் புறங்கையில் ஒதுக்கும்போதுதான் நந்து கவனித்தான், அவளுக்கும் அஷ்வினியைப்போலவே ஒரு அழகு இருந்ததை. அம்மா இல்லாத பெண்களின் அழகு என்னவோ விதமாக வீட்டை நிறைக்கிறது.

”இல்ல.. அம்மாப்பா.. கல்யாண நாளு.”

“ஆ. காலைல பாயாசம் வந்துச்சே”

“சாக்லேட்..”

“ஓ.. இதுவேறையா? எல்லாருக்குமா எனக்கு மட்டுமா?”

அவள் கண்களில் என்னவோ இன்னும் கேட்காத கேள்விகள் இருந்ததாக நந்துவிற்குத்தோன்றியது.

“அண்ணனுங்களுக்குக் குடுத்தேன். அவங்கதான் உங்களுக்கும் ஒண்ணு..”

”ஓ..”

“பெரியத்தான் குடுக்கச்சொல்லுச்சு..” நந்து சாக்லேட்டை கிணற்றின் ஓரவிளிம்பில் வைத்தான்.

“ஓ… அவர் சொல்லலைன்னா நீங்க குடுக்கமாட்டீங்களோ?”

“அதில்லங்க..”

“யப்ப்பா சாமி.. நானுஞ்செட்டுதான். பரணின்னே சொல்லு”

“சரிங்க பரணி”

“..”

“சரி பரணி.. நான் போய்ட்டு அப்புறம் வர்றேன்..”

என்னவோ தன்னை வெகுவாக பரணி கிண்டல்செய்துவிட்டதாக நந்துவிற்குத்தோன்றியது. வெளியில் வந்தான். பொழுது சாய்ந்து, பறவைகள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன. சைக்கிள் மிதித்து வீடுவந்து சேரும்வரை நந்துவிடம் ஒரு இனம்புரியாத உற்சாகம் இருந்தது. அவனே கடந்த ஒரு மாதமாக அறியாதது. ரெக்ககட்டி பறக்குதுபார் அண்ணாமலை சைக்கிள் என தலைவர் பாடலின் முதல் இரண்டு வரியை சீட்டியடித்துக்கொண்டே வீட்டிற்கு வந்தான். பாயை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குப்போய் விரித்து மல்லாக்க படுத்து நிலாவையே பார்த்துக்கொண்டிருந்தான். மென்குளிர்காற்று பரவத்தொடங்கி, அவன் எப்போது தூங்கினான் எனத் தெரியாத ஒரு நிமிடத்தில் தூங்கிப்போனான்.

o

அண்ணாவியின் கணக்குகள் ஒருவாறு நந்துவிற்கு அடைபடத்தொடங்கியது. ஜாதகக்கட்டங்களின் சூட்சுமம் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத்தொடங்கியது. கூடவே மலைப்பாகவும் இருக்கிறது. இத்தனைக்கோடி சாத்தியங்களில், எந்தச் சாத்தியத்தைப் பலனாகச் சொல்கிறார்களென்பதில் இருந்த தேர்ந்தெடுப்புதான் ஜோதிடர்களை உருவாக்குவதாக உணரத்தொடங்கியிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக பரணியையும் நெருங்கியிருந்தான். அண்ணாவி இவர்களை நட்பை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவள் கோவிலுக்குப்போகும்போது இவனும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு உடன் நடந்துகொண்டே போனதும் திரும்பி நடந்துவருவதும் ஒரு வழக்கமாகியது. உடல் அதன் இச்சைகளை நந்துவிற்குக் கற்றுக்கொடுத்தது. பரணியும் முழுதாக அனுமதித்தாள். சைக்கிளுக்கு மறுபுறம் நடந்துகொண்டிருந்தவள் இவன் தோள்பட்டை உரசும் இடத்திற்கு நகர்ந்திருந்தாள். எளிதாய் தெரியும் வலப்புறக் காட்சிகளைப் பார்ப்பதற்கு வேண்டுமென்றே கூந்தல் இவன் முகத்தில் விழ வெட்டித்திரும்பி , பின் இவன் புறம் திரும்பிச்சிரித்தாள். இருவரின் கைகளும், பாதங்களும் அவ்வப்போது தற்செயலாக உரசிக்கொண்டன.

வீடிருந்த தெருவிற்கும், கோவிலிருந்த தெருவிற்கும் நடுவில் புதிய தெருக்களை இவர்கள் கண்டுபிடித்தார்கள். இன்னும் கொஞ்சம் பேசிச்சிரித்தபடி, இன்னும் கொஞ்சம் உடல் உரச. சைக்கிள் அதன் மேடுகளில் தற்செயலாக ஏறி, இவனை அலைக்கழித்து அவள் புறம் சரித்தது. அவளும், சலிக்காமல் இவனை மார்புரச பதறிப்பிடித்துக்கொண்டாள் ஒவ்வொரு முறையும். இருவரும் சிரித்துக்கொண்டனர். உடல் உரசத் தொடங்கியதும், சொற்கள் குறையத்தொடங்கிவிடும். மயிர்க்கூச்செரிய நடந்துகொண்டிருந்தனர். பல நாட்களாக. பலவாரங்களாக. நிஜத்தில் சில நிமிடங்களும் கனவில் பல மணி நேரங்களுமாக.

வீடிருந்த தெரு முனையைத் தாண்டியதும் பரணி சொன்னாள்.

“கால்வலிக்குதுடா”

“ஹேய்.. என்னாச்சு திடீர்னு.. திரும்பி போய்டலாமா?”

“லூசு.. சைக்கிள் ஓட்டத்தெரியும்ல?”

சிரித்தான்.

“சரி ஏறு”

ஏறிக்கொண்டாள். மிதிக்க ஆரம்பித்தான்.

“என்னைய உனக்குப்பிடிக்குமா நந்து?”

“என்னடி இது திடீர் கேள்வி?”

”இல்ல.. ”

“புடிக்கும். ஆனா அஷ்வினி..”

“தெரியும்.. உன் சண்டைதான் உங்க ஸ்கூல் முழுக்க பிரபலமாச்சே”

“ஹேய் அதெப்படி உனக்கு?”

“இல்ல நாம கோயிலுக்குப் போன முதல் நாளே உன் ஸ்கூல் பொண்ணுங்க சொல்லிட்டாங்க..”

“சொல்லிட்டாளுகளா.. ஏண்டி, பசங்களப்பத்தி புரளி பேசுறதத்தவிர உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா?”

“ஆமா பசங்க மட்டும் என்னவாம்”

“சரி விடு.. அதான் ஒரு…”

“இதுல என்னடா இருக்கு. எல்லாம் சகஜம்தான்..”

“அடிப்பாவி அப்ப நீயும்..”

“அடிச்செருப்பால. நான் பொதுவா சொன்னேன்.”

“உனக்குப் பிடிச்சிருக்கா?”

“லூசே. பிடிக்காமத்தான் உன் கூட இவ்வளவு நாள் கோயில் குளம்னு சுத்திட்டு இருக்கனா?”

நல்லவேளையாக சைக்கிள் மண்மேட்டில் தட்டி குலுங்கியது. பரணி விழுந்துவிடாமல் இருக்க ஒரு கையை நந்துவின் இடுப்பைச் சுற்றி போட்டுக்கொண்டாள்.

o

கோவிலுக்குப் போகும் வழிகள் இன்னும் நீளமாகிக்கொண்டே சென்றன. சைக்கிளைத் தடுமாறச் செய்யும் மணல்மேடுகள் அதிகரித்தன. மணல் மேடுகள் இல்லாமலையே பரணி இடுப்பை வளைத்து கைபோட்டுக்கொண்டாள். சில நேரங்களில் எதிரில் வரும் பூனைக்கெல்லாம் பயந்து முதுகில் தலைசாய்த்துக்கொண்டாள். உடற்கூச்சமும், உடல் ஆசையும் கலந்த ஒரு உணர்வை முதல்முறை அவன் கவனிக்கத் தொடங்கினான். உடலின் திறக்காத பூட்டுகளின் இருப்பிடத்தை.

இதுவரை இல்லாத உடற்சோர்வு அவர்களைக் கோவிலைவிட்டு கிளம்பவிடாமல் செய்தது. பிரகாரத்திலும், தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளிலும், பிறகு கோவில் பின்புறத்திலிருக்கும் மரத்தின் அடியிலும், இறுதியாக மரத்தின் பின்புறமும். மாமரத்தின் பின்புறம் நந்து அவனது முதல் உதட்டு முத்தத்தை அறிந்து கொண்டான். வாய்கசந்து, எச்சில் ஒட்டி, கொஞ்சம் அருவருப்புடன் கூடவே. பூனை சுடுபாத்திரத்தில் வாய் வைத்து பின்னிழுத்துக்கொள்ளும் அதே வேகத்தில். பரணி நந்துவை நிறுத்தினாள். பூனைவேகத்தை, பசித்த கன்றின் வேகமாக மாற்றி….

o

” நீ ஜோசியம் கத்துக்கிட்ட வரைக்கும் போதும். ”

காலை காப்பியுடன் அம்மா இப்படிச் சொன்னபோது குழப்பமாக இருந்தது. உண்மையில், நந்துவின் முடிவுகளை யாரும் எடுப்பதில்லை. இவனே எடுத்துவிட்டு தெரிவிப்பது மட்டும்தான். ஸ்கூலுக்குப் போகலாமாவேண்டாமா என்பதிலிருந்து, எப்போது வீடு வருவது, எப்போது வெளியே போவது என்பதுவரை யாரும் எதுவும் இதுவரை கேட்டதில்லை. முதல் முறையாக, அதுவும், ஜோதிட விஷயத்தில்.. கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

“ஏன்ம்மா?”

“போவேணாம்னா இரேன்.. இப்ப என்ன வந்துச்சு?”

“இல்லம்மா.. ஏன் திடீர்னு..”

“அவுங்கவீட்ல இன்னிக்கு துட்டி விழுந்துட்டு. பெரியமனுஷனுக்கு எல்லாத்தையும் விளக்கணுமோ?”

தூக்கிவாரிப்போட்டது. வீட்டில் இருந்ததே அண்ணாவியும் அவர் மகளும் மட்டும்தான். அண்ணாவி இறந்துவிட்டார் என்றால்.. பரணியும் எங்காவது பார்க்கமுடியாத இடத்துக்கு..

“அய்யயோ.. அண்ணாவிக்கு என்னாச்சும்மா.. ஒரு எட்டு போய் இருந்துட்டாவது வந்துட்றேன்”

“அவருக்கென்ன திண்ணக்கம் பிடிச்ச மனுசன் கல்லு மாதிரி இருக்காரு..”

“அப்புறம்..”

“அந்தப் பொண்ணு இல்ல.. அதான் எதோ கால் தவறி கிணத்துல விழுந்து..” அம்மாவிற்கு பேச்சு வராமல் தொண்டையை அடைத்தது. எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. கண்களில் பூச்சி பறக்கும் உணர்வு..

”அவளா? கிணத்துலையா.. அம்மா.. அவளுக்கு நல்லா நீச்சல் தெரியுமா.. எல்லாக்கிணத்துலையும்தான் இப்ப தண்ணியிருக்கே..”

“யப்பா! பெரியமனுசா. ரொம்ப கேள்வி கேட்காத.. சொன்னா ஜோசியக்குப்பையெல்லாம் நிறுத்திட்டு, அடுத்து கம்யூட்டர் படிக்கலாமா, பையலாஜி எடுக்கலாமான்னு யோசி.. பாசாகிடுவல்ல..”

“சரி பொண்ணுதான் இல்ல.. துட்டியெல்லாம் முடிஞ்சப்புறம் அண்ணாவிகிட்ட..”

வார்த்தையை முடிக்குமுன்னரே முதுகில் வலுவாக அடிவிழுந்தது. விறகுக்கட்டையுடன் அப்பா.

“ஒரு பெரிய மனுஷி சொல்லிட்டு இருக்கா.. கூடக் கூட பேசிட்டு இருக்க.. மூடிட்டு இருக்கிறதானா இரு… இல்லைன்னா அப்படியே ஜோசியக்கட்ட எடுத்துட்டு கண்காணாமபோய்டு…”

“சரிப்பா.. துட்டிக்காவது போய்ட்டு…”

“ஏங்க.. இன்னும் ரெண்டு போடுங்க.. இந்த வீட்டுலையும் ஒரு எளவு விழாம இவன் அடங்கமாட்டான் போல.”

அழுதுகொண்டே மொட்டை மாடிக்குப் போனான் நந்து. சின்ன ஊரின் மரணத்திற்கு வேறு முகம். அதுவும் கன்னிப்பெண்ணின் மரணத்திற்கு. என் வீட்டைத் தவிர மற்ற எல்லார் வீட்டிலிருந்தும் யாராவது கிளம்பி போய்க்கொண்டிருந்தார்கள். முன்னேற்பாடுகளின் சலசலப்பை வழக்கமாய் வெறிச்சோடியிருக்கும் தெருவின் பரபரப்பிலிருந்து அறிந்து கொள்ளமுடிந்தது. உள்ளே குமைந்து கொண்டிருந்த குமிழ் ஒன்றை உடைக்க, தூரத்தில் அழத்தொடங்கிய குழந்தை ஒன்று போதுமானதாய் இருந்தது. அந்த நாள் முழுவதும் அதே மொட்டைமாடியில் சுவரோரமாய்ச் சாய்ந்தமர்ந்து நந்து அழுதுகொண்டிருந்தான்.

– அடுத்து கார்த்திகா வருவாள்