பாகம் 1 . 2 .

0

நந்து வந்தபோது முதல் தளத்திலிருந்த சிஎஸ்சி கம்ப்யூட்டர் செண்டரின் இரும்புக்கதவுகள் அடைத்திருந்தன. யூசுப் இன்னும் வந்திருக்கவில்லை. கீழே இருந்த பெட்டிக்கடையிலிருந்து சாவியை வாங்கிக்கொண்டான். யூசுப் வராத நாட்களில் இது நடப்பதுதான். சனியும் ஞாயிறும் பொதுவாக கம்ப்யூட்டர் செண்டர்களுக்கு யாரும் நேரமெடுப்பதில்லை. நந்து மாதிரியான, வார இறுதி சிறப்பு வகுப்புகள் வேண்டுமென்று கேட்டு வாங்கிய ஆட்கள் நந்துவைத் தவிர அத்தனைபேரும் நாற்பதிலிருந்து ஐம்பது வரையிலானவர்கள். குறிப்பாக, வங்கி அலுவலர்கள். கம்ப்யூட்டரின் ஒவ்வொரு எழுத்தாகத் தேடித் தேடி ஒற்றை விரலால் தட்டச்சுபவர்கள். கம்ப்யூட்டர் தெரியாதவர்களை வங்கியிலிருந்து கழட்டி விட்டுக்கொண்டிருந்த காலத்தில் தன் இருப்பை தக்க வைப்பதற்காக, எதோ ஒரு கோர்ஸ் சேர்ந்து தன்னை நிரூபிக்க முனைபவர்கள். யூசுப், களக்காட்டின் லோக்கல் ஆள். அந்த செண்டரின் முதலாளி, படுக்கைப்பத்து எனும் பட்டிக்காட்டிலிருந்து வந்தவர். அவர் விடுமுறைகளில் வருவதில்லை. யூசுப், அவர்களின் முக்கிய ட்ரெயினர். குறிப்பாக இந்த விடுமுறை நாட்களின் சிறப்பு ஆள்களை மேய்க்க அவரைவிட்டால் வேறு ஆள் இல்லை.

நந்து ஷட்டரைத் திறந்து செண்டருக்குள் நுழைந்தான். அந்த மணம் அவனுக்கு பிடித்திருந்தது. குளிர்சாதன வசதிகளை அணைத்து சில மணி நேரங்களாய் கணினி சூடு பரவிய அறையின் மணம். தான் வழக்கமாக உட்காரும் கணினியை உயிர்ப்பித்து நந்து அமர்ந்து கொண்டான். அவன் தரவிறக்கி வைத்திருந்த மேரியோவை விளையாடத்தொடங்கினான். அதன் மீதான் ஈர்ப்பு இத்தனை மாதங்களில் கொஞ்சம் கூட குறையவில்லை, விட்ட லெவலிருந்து விளையாடத்தொடங்கினான்.

o
”ஹலோ”

பின்னால் குரல் கேட்டது நந்து திரும்பிப்பார்த்தான். பெண். நீலக்கலர் பட்டுப்பாவடை. மார்புகளை இறுக்கிப்பிடித்திருந்த பட்டுச்சட்டை.

”சொல்லுங்க”

“இல்ல நான் க்ருத்திகா.. இன்னிக்கு கிளாஸ்க்கு வரச்சொல்லிருந்தாங்க..”

“ஓ. மாஸ்டர் இன்னும் வரல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வருவாரு.”

“ஓஹோ. நன்றிங்க.. நீங்க அப்ப மாஸ்டரில்லையா?”

“அய்யோ.. நானும் உங்கள மாதிரிதான். HDCA பண்றேன்.. நீங்க?”

“ நானும் அதான். இன்னைக்குத்தான் கிளாஸ் ஆரம்பிக்கணும். வீக்கெண்ட் பாஸ்ட் ட்ராக். “

“சூப்பர்ங்க.. நானும் அதுலதான் இருக்கேன். மூணுமாசம் ஆச்சு. கொஞ்ச நேரத்துல வந்துருவாரு. யூசுப்னு பேரு. அவர்தான் பாஸ்ட்ராக்கெல்லாம் பாத்துக்கிறது”

“ நான் ஏற்கனவே ரெகுலர்ல ஆபிஸ் பேக்கேஜ் முடிச்சிட்டேன். இது சும்மா, புரோகிராமிங்க் லேங்க்வேஜெல்லாம் கத்துக்கலாம்னு”

நந்துவுக்கு வெறுப்பாக இருந்தது. ஆபிஸ் பேக்கேஜ் சமீபத்தில் முடிந்து விபி ஆரம்பித்திருந்தான். புதிதாக வரும் எல்லாருக்கும் ஆபிஸ் அவன் தான் எடுக்க வேண்டி வந்தது. அவனும், கொஞ்சம் கொஞ்சமா ஆபிஸ் பேக்கேஜின் சந்து பொந்துகளைக் கற்றுக்கொள்ள அது வசதியாக இருந்தது. கூடவே புது மனிதர்களுடன் பழகும் வாய்ப்பும். அவனைத்தாண்டி, ஏற்கனவே கற்றுக்கொண்ட ஒரு இளம்பெண் அவனுக்குப் போட்டியாக அங்கு தொடரப்போவது அவனுக்கு எதையோ கிளப்பிவிட்டது போல் இருந்தது.

சிறிது நேரம் கழித்து யூசுப் வந்தார். க்ருத்திகாவைக்கூப்பிட்டு எம்டி அறையில் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார். நந்துவிற்கு மேரியோ கவனத்தை ஈர்க்கவில்லை. திரும்பத் திரும்ப, எளிதாய்க் கடந்து போகும் இடங்களிலெல்லாம் விழுந்து செத்துக்கொண்டிருந்தான்.
o
“அவர் உங்களக்கூப்ட்றாருங்க”

மறுபடியும் கிருத்திகா வந்து சொன்னாள். நந்து மேரியோவை அமர்த்திவிட்டுப் போனான்.

”வாடா. அது.. புதுப்பொண்ணு. விபிதான் ஆரம்பிக்கணும்.. பண்றியா?”

“இல்லண்ணா.. விபி.. நான் எப்படி..”

“அட.. பொண்ணு, பொழுதுபோகாம வர்ற கேஸ்டா.. நீதான் விபில பத்து பதினஞ்சு நாள் ஓட்டிட்டியே.. அதுபோதும், சும்மா சமாளிச்சுக்க.. பெருசுங்கள நான் கவனிச்சிக்கிறேன்”

”சரிண்ணா… எதுனா வந்தா மட்டும் நீங்க..”

“விடு விடு பாத்துக்கலாம்”

நந்து கிருத்திகாவுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விபி கற்றுக்கொண்டான். அவளின் கேள்விகள் இவனுக்கு இதுவரை தோன்றாதவை. எதோ அடையாளம் தெரியாத பகுதியிலிருந்தெல்லாம் அவள் இவனைக்குடைந்து கொண்டிருந்தாள். இவனும் முடிந்த வரை சமாளித்தும், மற்றவற்றை ரெபரன்ஸ் என்ற பெயரை யூசுப்பிடமிருந்து கற்றும் கடத்திக்கொண்டிருந்தான்.

க்ருத்திகா, நந்து எதிர்பார்த்திருந்ததை விட சூட்டிகையாக இருந்தாள். அவள் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விழித்து நிற்கக்கூடிய நேரம் வந்துவிடக்கூடாது என நந்து கவனமாக இருந்தான். விழுந்துவிழுந்து விபியைப்படித்துக்கொண்டிருந்தான். பெண்கள் முன்பாக தோற்பதைவிட ஆணுக்குப் பெரிய அவமானம் எதுவுமில்லைதானே? கொஞ்சம் கொஞ்சமாக க்ருத்திகாவும், நந்துவைப் புரிந்து கொண்டாள். ரொம்ப நாசுக்காக, நந்துவைக்கிண்டலடிப்பதுடன் சரி. பெரிய கேள்விகளைக் கேட்டு திணறடிப்பதில்லை. ஆண் -பெண் உறவு தன்னளவில் ஒரு நாடகத்தை ஒத்திருக்கிறது. அவள் இவனுக்காக இறங்கிவருவதும், இவண் அவளுக்காக சில படிகள் ஏறிப்போவதுமாக, அந்த நாடகத்தை இருவருமே தன்னளவில் அறிந்திருந்த படியே நடத்திக்கொண்டிருந்தார்கள். பாடங்களைத் தாண்டிய ஒரு நட்பு இருவருக்குள்ளும் வளர்ந்துகொண்டிருந்தது. அதையும் இருவரும் அறிந்திருந்தார்கள்.
o

“ஹேய்.. அடுத்தவாரம் நாங்க திருக்கங்குடி போறோம்”

“…”

“ம்ம்.. வீட்ல இருந்து எல்லாரும். சும்மாதான்.”

“ம்”

“என்ன ம்? நீயும் வரியா?”

“ நான் எப்படிப்பா? உங்க வீட்ல எல்லாரும் இருக்கும்போது”

“அட நீ வா.. செண்டர் பிரண்டுன்னு சொல்லிட்றேன். நான், அண்ணன், அப்பா, அம்மா அவ்ளோதான். கூட நீயும் இருந்தா நல்லா இருக்கும்”

“ம்ம். சரி நான் நேரா அங்கையே வந்திட்றேன்”

“என்னவோ பண்ணு. நாங்க கார்லபோறோம்…”

“அது சரி, ஆனா நான் இங்க வந்து திரும்பி அவ்ளோதூரம் கடுப்பாயிருக்கும். எனக்கு பக்கம்தான். அங்கையே நேரா வந்திட்றேன்”

“..”

“மூஞ்சி ஏன் அப்டி போகுது.. என்ன பண்ணணும் நீ சொல்லு.”

“ நீயும் எங்ககூட கார்ல வர்லாம்ல”

”அப்ப என் சைக்கிள்?”

“ஆமா… பெரிய இது… பஸ்டாண்டுல பூட்டாம போட்டா நாய் வாய்வைக்காது..”

“ஏய்ய்”

”சரி சரி விடு. எங்கியாவது போடு. காலைல போய்ட்டு நைட்டு வந்திரலாம்”

”ம்ம்.”

o

நந்து சைக்கிளை செண்டரின் கீழ்தளத்திலேயே விட்டுவிட்டு வந்திருந்தான். பாதைத்திருப்பமொன்றில் நந்து அவர்களின் காரில் ஏறிக்கொண்டான். எதோ ஒரு வாடகை அம்பாசிடர். டிரைவருக்கு அருகில் நந்துவும், க்ருத்திகாவின் அண்ணனும். பின் சீட்டில் க்ருத்திகாவும் அவள் பெற்றோரும். ரியர்வ்யூ மிரரில் நந்துவின் பார்வையில் அவள் இருந்தாள். பட்டுத்தாவணியும், நெத்திச்சுட்டியும் குண்டுமல்லியுமாக. அப்பாவிடமும் அண்ணனிடமும் வம்பிழுத்துக்கொண்டே இருந்தாள். அண்ணனும் அவளும் அங்கையே அடித்துக்கொண்டார்கள். சில அடிகள் தவறி நந்துவின் மீது படும்போது பதறி கையை எடுத்துக்கொண்டாள். பிறகு சரிந்து கண்ணாடிவழியாக இவனைப்பார்த்தாள்.

அரைமணி நேரத்தில் கோவில் ஏரியாவை அடைந்திருந்தார்கள். கீழேயே செருப்புகளை கழற்றிவிட்டு பாறைகளின் ஊடாக மேலே நடக்கத்தொடங்கினார்கள். அண்ணன் டிரைவருடன் எங்கையோ பக்கத்தில் போவதாகச் சொல்லிவிட்டுப் போனான். அம்மாவும் அப்பாவும் பின்னால் மெதுவாக வந்துகொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் போட்டி போட்டு ஏறுவதாக கொஞ்ச தூரம் ஓடி ஏறினார்கள். க்ருத்திகா கொஞ்ச நேரம் இவனைப்போல் நடப்பதாக நடித்துக்காட்டினாள். பிறகு அதுவும் சோர்ந்து, இருவரும் மெதுவாக நடக்கத்தொடங்கினர். ஒரு நேரத்தில் க்ருத்திகா இவன் தோளில் கை வைத்து ஊன்றிக்கொண்டே ஏறிக்கொண்டிருந்தாள். நந்துவிற்கு அதை விட மனசில்லை. வழக்கத்தைவிட கொஞ்சம் மெதுவாக நடந்தான்.
பத்து நிமிடங்கள். விளையாட்டுகள் அனைத்தும் ஓய்ந்து சோர்வாக ஏறிக்கொண்டிருந்தனர். ஒரு பூந்துவாலை துண்டைப்போல க்ருத்திகாவின் உள்ளங்கை தோளில் அழுந்தியிருந்தது. நந்துவிற்கு நிறைய அழவேண்டும் போலவும், திரும்பி க்ருத்திகாவை அணைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தோன்றியது. மெல்லிய குளிர்காற்றில் கலந்திருந்த க்ருத்திகாவின் மல்லிகை வாசனை அந்த இடத்தின் குளிர்ச்சியை இவனுக்குள்ளும் பரப்பியிருந்தது.

“க்ருத்திகா..”

“ம்ம்”

“எனக்கு உன்னப்புடிச்சிருக்கு..”

“எனக்குந்தாண்டா. அதான் வரச்சொன்னேன்.”

“அதச் சொல்லல. அதுக்கும் மேல. ரொம்ப. வாழ் நாள் பூரா இப்படியே உன் கைய தோள்ல வச்சிட்டே நடந்துட்டு இருக்கமாட்டமான்னு தோணுது.”

“என்ன.. எதாவது படம் பாத்தியா?என்ன படம்”

அதற்கு மேல் எதும் சொல்லத் தோன்றவில்லை. ஒருமுறை முறைத்துவிட்டு திரும்பி நடந்துகொண்டிருந்தாள். க்ருத்திகாவும். தோளிலிருந்து அவள் கையை இறக்கவில்லை.

o

பாறைகளின் மேலிருந்த சமதளத்திற்கு வந்துவிட்டிருந்தார்கள். உடைத்து போடப்பட்டிருந்த கற்களில் இருவரும் அமர்ந்தார்கள். தூரத்தில் க்ருத்திகாவின் அம்மாவும் அப்பாவும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் குலதெய்வமென தேடி வந்த எதோ ஒரு சாமி அந்த சமதளத்தில் இருந்தது. மேலே கல்லாலான குடையும். சாமியின் மீது மஞ்சளும் குங்குமமும் எண்ணைப்பிசுக்கும் பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தன. க்ருத்திகா வேர்த்திருந்தாள். நெத்தியில் குரோட்டன்ஸ் செடியில் தெளிக்கப்பட்ட நீரைப்போல வியர்வை ஒட்டியிருந்தது. தன் தாவணி தலைப்பெடுத்து நெற்றியைத் துடைத்துக்கொண்டாள். தலைப்பை இவனிடம் கொடுப்பதைப்போல் கை நீட்டியபடி இவனைப்பார்த்தாள். அவன் அதை தொடப்போக கோபப்பார்வையுடன் வெடுக்கென இழுத்துக்கொண்டாள்.

நந்து வெறுங்கையாலேயே தன் நெற்றியைத்துடைத்துக்கொண்டான். க்ருத்திகாவின் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு ஒதுங்கியிருந்தது. எதோ ஒரு வேகத்தில் இவன் அதை கையால் எடுத்து சரியான இடத்தில் வைத்தான். அவள் கண்மூடிக்கொண்டாள். பின்னால் காலடிச்சத்தங்கள் வலுக்க ஆளுக்கொருபக்கம் திரும்பிக்கொண்டனர். அப்பா அம்மா சரியாக வந்து சேர்ந்தார்கள்.இவன் செய்ததை அவர்கள் பார்த்திருக்கக்கூடும் என நினைத்தபோது நந்துவுக்கு கொஞ்சம் உதறல் எடுத்தது. அவர்கள் இவர்கள் இருவரையும் கவனிக்காமல் குனிந்தபடியே முட்டிகளைப் பிடித்துக்கொண்டு ஏறிவந்தார்கள்.

கட்டிவைத்திருந்த பூச்சரங்களை சாமியின் மேல் போட்டார்கள். கொண்டுவந்திருந்த தாம்பாளத்தை எடுத்துவைத்து, அதில் தேங்காவை உடைத்து வைத்தார்கள். பாக்கெட் கற்பூரத்தை உடைத்து சாமியைச் சுற்றி நாலாபுறமும் ஏற்றி வைத்தார்கள். பிறகு கைகூப்பியபடியே மூன்றுமுறை சுற்றிவந்தார்கள். க்ருத்திகாவின் அம்மா கைகாட்டி இவனை அழைத்து தாம்பாளத்திலிருந்த அச்சுவெல்லங்களின் ஒன்றை இவனிடம் கொடுத்தார்கள். இவன் மறுத்தபோது எதோ ஐதீகம் என வற்புறுத்திக்கொடுத்தார்கள். இவன் வாங்கி வாயில் அதக்கிக்கொண்டான். தேங்கா,பழ,வெற்றிலைகளை அங்கேயே விட்டுவிட்டு தாம்பாளத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இறங்கத்தொடங்கினார்கள்.

o
மலையை விட்டு இறங்கும்போது வெயில் தாழத்தொடங்கியிருந்தது. ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டார்கள். கொண்டுவந்திருந்த புளிசோறை ஆளுக்கொரு உருண்டையாக உருட்டி க்ருத்திகாவின் அம்மா கொடுக்க, டிரைவர் உட்பட ஒவ்வொருவராக வாங்கிக்கொண்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக, மலையேறிய அசதியும் இளவெயிலும், வேப்பமரக்காற்றும் சேர்ந்து மெல்ல கண்கள் சொக்க மரத்தண்டில் சாய்ந்தே அமர்ந்திருந்தார்கள்.

நந்து தூக்கம் கலைந்து எழுந்தபோது, அம்மா மரத்தடியில் ஒரு கல்துண்டை தலைக்கு வைத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். டிரைவரும், க்ருத்திகாவும் அண்ணனும் காருக்குள்ளாகவும், அவள் அப்பா தூரத்திலிருந்த இன்னொரு மரத்தின் கீழ் இருந்த திண்டிலும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். க்ருத்திகா தூக்கத்திலேயே சாய்ந்து நந்துவின் மடியில் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் தலைமுடி நந்துவின் கைகளில் படர்ந்திருந்தது. கொஞ்சமாய் நெற்றிப்பக்கத்தில் முடி விலக்கி நந்து முத்தமிட்டான். முதலில் தூக்கத்திலேயே மெல்லச் சிரித்தவள் திடுக்கிட்டு எழுந்தாள். எழுந்தமர்ந்து நந்துவை முறைத்தாள். உடைகளைச் சரிசெய்தாள். தாவணியை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

“என்ன பண்ற.”

”இல்ல தூக்கத்துல நீதான்.. உன் முடி உன் வாய்க்குள்ள..” நந்து உளறினான்.

“ஓ.. அப்ப இது..” முத்தமிட்ட இடத்தை தொட்டுக்காட்டி கேட்டாள்.

”இல்ல..”

”என்ன நினைச்சுட்டு இருக்க மனசுல..”

“….”

ஒரு எதிர்பாராத கணத்தில், க்ருத்திகா நந்துவை ஓங்கி அறைந்தாள். பின் அழத்தொடங்கினாள். அதற்குள் சத்தம் கேட்டு க்ருத்திகாவின் அம்மா எழுந்துவிட்டார்.

“அய்யோ இங்க வாங்களேன்… என் புள்ளைய என்னவோ பண்றானே… இன்னொரு புள்ளையா நினைச்சு கூட்டிட்டு வந்தேனே.. அவளும் வெள்ளந்தியா பழகுனாளே… இப்படிப்பண்ணிட்டானே..”

க்ருத்திகா அழுதுகொண்டே நின்றுகொண்டிருந்தாள். க்ருத்திகாவின் அப்பாவும், அண்ணனும், ட்ரைவரும் சத்தம் கேட்டு எழுந்து வருவதற்குள், நந்து வாழைத்தோப்புகளுக்குள் புகுந்து ஓடிக்கொண்டிருந்தான்.

– அடுத்து ரோகிணி வருவாள்.