நான் விலகுகிறேன்
எனக்கு யாரும் தேவையில்லை
என்னை யாருக்கும் பிடிப்பதில்லை.

புலம்பல்களினாலான‌ மாலையில்
ஸ்ட்ராபெரி சுருட்டை
நல்லாயிருக்கும் மச்சி ட்ரை பன்ணிப்பாரு
என கடவுள் கொடுத்துப்போகிறார்

பொம்மையின் கண்களை
நினைத்துக்கொண்டபடி
தேடியலைகிறேன்
எப்போதும் உடனிருக்கும் அன்பைக்
கொடுக்கும்

ஒரு கடையை.

o

புற்றுநோய் மருத்துவமனையின்
வாசலில்
குடையின் கீழ்
ஒற்றைத்தர்பூசணியை
துண்டுகளாக்கி
விற்றுக்கொண்டிருக்கும்
நூற்றுக் கிழவியை
தயவு செய்து அப்புறப்படுத்துங்கள்.

மரணத்தின் வாசலில்
அதிகமாய் வலியூட்டுவது
வாழத் தூண்டும்
ஒரு புன்னகைதான்

o

இடிந்த வீட்டின் கடைசி ஓடு
விழுந்து நொறுங்கும் ஒலி
ஆழ்துளைக்கிணறுகளின்
சப்தத்திலும் தனியாகக் கேட்கிறது

கிழவர்களின் கல்யாண மரணத்திற்குக்
காத்திருக்கும் சொந்தங்களுக்காவென்றேதான்
அந்த உயிர் பிரிகிறது.

ஆனாலும்,
கூட்டின் கண்ணிகளை
அறுத்துப்பிரியும் ஓடு
அதன் வாழ்வை நினைத்துக்கொள்ளக்கூடும்
ஒரு உளுத்த மரக்கட்டையின் வாசத்துடன்.

o

முத்தங்களினால் உடலறிபவன் உங்களுக்கு
பதட்டத்தைத் தருகிறான்

தெய்வீகங்களின் திரைகளின் வழியாக
பொய்களை அறிந்திருப்பவர்களின்
நாடகங்கள்
எனக்குப் எரிச்சலைத் தருகிறது

நாம் சந்திக்கிறோம்
புன்னைமரக்காய்களை கால்களுக்குள்
உதைத்து
முகம் பார்த்துக்கொள்ளும் ஒரு நாளில்

மருத்துவமனை மரங்கள்
புதை மணல்களில் வளர்ந்தவை
என்பதை
ஒரு நிழற்செடிக்கு யாரும் புரிய வைக்க முடியாது
தோழர்.