யாருடைய கனவின்மீது
இந்த காலடித்தடங்கள் விழப்போகிறதென்று
நான் அறியேன்

இருளின் எந்த முனையில்
இந்த வார்த்தைகள்
தொலைந்துவிடப்போகிறதென்றும்

காரணமற்ற கேள்விகளுடன்
சந்திக்கவரும் நண்பா
ஒரு முத்தத்தை வைத்திருக்கிறேன்

பெற்றுக்கொள்ளும் சாமர்த்தியம்
இல்லாதவர்களைச் சந்திக்கும்போது
அடையும் சோர்வை
மீண்டும் காண எனக்கு
பொறுமையில்லை.

o

இந்த நகரத்தின் அடியில்
ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது
இதுவரை கொல்லப்பட்டவர்களின்
குருதியினால் சுத்திகரிக்கப்பட்ட நதி

ஒரு நாள் நதிக்கும் நகரத்திற்கும்
இடையேயான பாதையின் வழியாக
குழந்தை தவறி விழுகிறது
திரும்பி வரும் குழந்தை
வரலாற்றைப் புரியவைக்கும்
பொறுமையின்றி மூச்சை நிறுத்திக்கொள்கிறது

இறந்த குழந்தைக்காக
அழுபவர்கள்தான்
இறந்த மனிதர்களுக்காக
அழாதவர்களாக இருக்கிறார்கள்.

o

அதே நாளில்தான்
செம்போத்துப்பறவையொன்று மின்சாரத்தில்
அடிபட்டு வீழ்ந்திறக்கக்கண்டேன்

பாதிபடித்து தொலைந்துபோன
மர்ம நாவலை அலமாரி
அடுக்கின் எதோ ஒரு மூலையிலிருந்து
கண்டெடுத்ததும்
அதே நாளில்தான்

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகளால்தான்
தொடர்புற்று மலர்கிறது
ஒரு எளிய புன்னகை.