அனாமிகா,

நேற்று உன்னைக்கண்ட ஒரு பெருங்கனவின் மிச்சத்தை எடுத்துக்கொண்டு, அதன் தடங்களில் இன்று நடைபழகி அலைந்தேன். உனக்கான முத்தங்களை யாரென்றறியாத சிறுகுழந்தைகளுக்கு காற்றில் பறக்கவிட்டேன். குழந்தைகள் புன்னகையைத் தவிர பெரிதாய் மொழி அறியாதவை. நான் காதலைத் தவிர எதுவும் அறியாத குழந்தை. நீ மறுப்பைத் தவிர பெரிதாய் கனவுகள் இல்லாத குமரி

உன்னை இன்றைய நாள்களில் பார்க்க நேரும் நிழல்கள் என் கனவின் நிழல்களைப்போலல்ல. என்னிடம் இருப்பவை உன் தேவதை பிம்பங்களின் மிச்சங்கள். இன்று நீ இருப்பது ஒரு பெண்ணின் முழுமை. ஒரு யட்சியாக. ஒரு தாயாக. ஒரு உலகப்பேரரசியாக மாறிக்கொண்டிருக்கிறாய். உன்னிடம் இதையெல்லாம் சொல்ல முடியாத உன் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு கோழையாக இந்த பெரு நகரத்தின் மறு எல்லையிலிருந்து இந்தச் சொற்களை அனுப்புகிறேன்.

சொற்கள் ஒரு பேருண்மை அனாமிகா. அருகமர்ந்து பேருண்மையாக என் அதிர்வுகளை அறியும் தேவதையாக இன்று நீ இல்லை. ஆனால் சொற்களின் பேருண்மையாகவும் என்னை நீ அறியப்போவதில்லை என்பதை கண்ணீருடன் உணர்கிறேன். சொற்கள் கடற்கரையின் மணற்துகள்களாக எவரவர் காலடியோ பட்டு அமிழ்ந்து அரித்துப்போகும் சிறுபொய்யும் கூட என்பதை நீ அறியவில்லை இல்லையா? இந்த பொருள்முதல் உலகத்தில் சொற்களுக்கு உயிரில்லை அனாமிகா. அடுத்தவரைத் தாழ்த்தும் சொற்களைப்போல அடுத்தவரை உயர்த்தும் சொற்களை எவரும் அதன் முதல் கணத்துடன் அறிவதேயில்லை. நீ சொற்களின் தேவதை. குறைந்த வார்த்தைகளில் என்னைக் கொன்று போன தேவதை. உனக்கு எழுத்தின் கூர்மை புரியும். ஆனால் அதை நீ அதை அதன் கூர்மைகளாக அறிவதேயில்லை. ஒரு நிறைகுடம் தன் துளியை பொருட்படுத்தாது போல என் சொற்களை நீ விலக்கினாய் அனாமிகா. என் பாவம்தான் என்ன?

காலம் அனாமிகா. என்னிடம் நீ சொன்ன காலம். காலம் எல்லாக்காயங்களையும் ஆற்றும் என கொஞ்சம் கலங்கிய பார்வையுடன் நீ சொன்னதை பொத்தி வைத்திருக்கிறேன் சில யுகங்களாக. வருடங்களா அல்லது மாதங்களா அல்லது நாட்களா அல்லது நிமிடங்களா என நான் அறியேன். நான் இன்றிலிருக்கிறேன். நீ சொல்லியது நேற்றிலிருக்கிறது. நேற்றிற்கும் இன்றிற்குமான இடைவெளியை யார் கணித்துவிட விட முடியும் அனாமிகா? கையசைத்துச் செல்லும் வேளையில் உன்னிடம் ஒரு புன்னகை இருந்தது என்றே நினைவில்வைத்திருக்கிறேன். அந்தப்புன்னகையை இன்னொரு முறை நான் பார்க்கக்கூடுமா அனாமிகா?

இந்தப்பெண் என் அனாமிகா. இந்தப்பெண் என் எஸ்தர். இந்தப்பெண் என் ஆயிஷா. இந்தபெண் தான் என் யட்சி. இந்தப்பெண் என் தாய். இந்தப்பெண் என் கெளரி. இந்தப்பெண் என் கனவு. எனக்கும் சில நண்பர்கள் உண்டு அனாமிகா. யாருமற்ற அனாதைக்கு உறவுகளை உருவாக்கிக் கொள்ளச்சொல்லிக்கொடுத்த உன் சொற்களைப்பிடித்து வலம்வந்து இவர்களை நான் பெற்றிருக்கிறேன். இவர்கள் என்னை ரசிக்கிறார்கள். இவர்கள் என்னை வாழ்த்துகிறார்கள். இவர்கள் என் வாழ்வுக்காக அவரவர் நம்பும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்த எனக்கு வாய்ப்புக்கொடுக்காமல் விலகிவிட்டாய் அனாமிகா.

ஒரு வேடிக்கைக்காகச் சொல்கிறேன். நீ இருக்கிறாய். உன்னுடன் நான் இருக்கிறேன் என்று அறிவிக்கிறேன். நம் நாளை ஆசிர்வதிக்கக் காத்திருக்கும் இத்தனை உள்ளங்களுக்கு ஒரு நாள் இருந்து பார். கனவு அனாமிகா. என் பெருங்கனவு. யாருமற்றவனாக உன்னைப்பார்த்ததிலிருந்து இவர்களைப்பெற்றவனாக உன்னை இழந்து நிற்கும் இந்தக்கணம் வரை ஒவ்வொரு நொடியும் அழிந்து வாழும் என் கீழ்மை வாழ்வின் பெருங்கனவு. திரும்பி வராத உன் தொலைவிலிருந்து உன்னை நோக்கி அலையும் என் அடிகளை எப்படி புரியவைப்பேன் அனாமிகா..

நீயற்ற நாள்களின் பிரபஞ்சத்தின் விரிவை அறிகிறேன். அதன் கூர்மையையும். ஒவ்வொரு சிறு பூச்சியும் இந்த பிரபஞ்சத்துடன் இணைக்க்கப்பட்டிருக்கும் அழகை. இன்று அலைந்த தெருக்களின் எதோ ஒரு மூலையில் என்றொ ஒரு நாள் நீ நடந்திருக்கக் கூடும். அன்று அதன் எதோ ஒரு பூ உனக்கு என்னை நினைவூட்டி இருக்கக்கூடும். இன்று எல்லாம் அழிந்து புதிதாய் முளைத்திருந்த தாவரங்கள் என்றொ ஒரு நாள் இந்தப்பாதையில் அனாமிகா நடந்ததாக என்னிடம் கூறின. அந்தப் பழங்கோயிலின் ரசாயனம் பூசப்பட்ட கற்களை என்றொ ஒரு நாள் நீ உன் உள்ளங்கையின் வெப்பத்தை வைத்திருக்கிற வாய்ப்பிருக்கிறது. எவர் சட்டையையோ கடித்து இழுந்த பசு உன் கரங்களால் வாஞ்சையாய் தடவிக்கொடுக்கப்பட்டிருக்கலாம்.

நான் நம் உலகில் வாழ்கிறேன் அனாமிகா. நானும் நீயும் இந்த பிரபஞ்சமும் மட்டும் இருக்கும் ஒரு உலகம். தன்னை இழந்து அலையும் ஒருவனும், தன் விரிவைப் பரப்பிய ஒருத்தியின் கரங்கள் பட்ட பிற உயிரிகளும் வாழும் ஒரு உலகம். ஒவ்வொரு நொடியும் அதன் அழிவிற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உயிரும். அதன் ஒவ்வொரு கனவும். அதன் நினைவும். உன் பிறந்த நாள் ஒரு நினைவாக மூளையின் எதோ ஒரு செல்லில் பதிந்திருக்கிறது. ஆனால் அது இன்று தொடர்பில் இல்லை. நீயே இன்று தொடர்பில் இல்லை. பட்டாம்பூச்சி விளைவைப்போல இந்த சொற்களை அனுப்புகிறேன். இது எதோ ஒரு புயலை உருவாக்கி உன் வீட்டின் மரங்களைப் பூச்சொரிய வைக்கக்கூடும். ஒரு குழந்தையைத் தூண்டி உன்னை முத்தமிட வைக்கலாம். அல்லது உனக்கும் என் நினைவுகளைத் தூண்டி ஒரு துளி கண்ணீரை விழவைக்கலாம். அந்தக் கண்ணீர் உன் நினைவில் நிற்கட்டும் அனாமிகா. இதேவித வேதியல் சமன்களுடன் இந்த பூமியில் என்றோ பிறக்கப்போகும் இன்னும் இருவர், நம் பிற வாழ்வாக அந்தக்கண்ணீரை முத்தங்களால் துடைக்கும் இதழ்களுடன் பிறக்கட்டும்.

அன்புடன்
முகமிலி.