தான் விரும்பும் அன்னலட்சுமிக்கு, அவள் சித்தப்பா மற்றும் அவரின் கூட்டத்திற்கு தெரியாமல் கோவிலில் வைத்து ஓர் இரவில் தாலி கட்டுகிறான் விருமாண்டி. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, யாருக்கும் தெரியாமல் பக்கத்து ஊரில் இருக்கும் தன் நண்பனின் வீட்டிற்கு மனைவியை அழைத்துச் செல்கிறான். அந்த நண்பனுடைய தாயின் ஆதரவோடு அங்கே தங்கி, விடிந்ததும் தன் மனைவியை இழக்கப் போவது தெரியாமல் அன்றைய இரவைக் கழிக்கிறான்.

இரவு, நிலவு மற்றும் அன்னலட்சுமி எனத் துவங்குகிறது, விருமாண்டியின் இல்லற வாழ்வு. தன் மனைவியோடு கூடிக் களித்திருக்கும்போது, இன்பமிகுதியில் அவள் கைவிரல் பிடித்து அவள் நகத்தால் தன் நெஞ்சில் தோல் கிழியக் கீறி…

ஸ்ஸ்ஸ்ஸ்.. என்னய்யா இது?.

இது கமல் இயக்கி நடித்த “சண்டியர்” (எ) “விருமாண்டி” திரைப்படத்தின் காட்சி.

எதற்காக அவன், அவள் நகத்தால் தன் நெஞ்சில் கீறிக்கொள்ளவேண்டும்? பின்னாளில், அவன் மேல் அன்னலட்சுமியை கடத்தி வந்து கற்பழித்ததாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது, அந்த நகம் கீறிய தடம் அவனுக்கு எதிராக, பலவந்தப் படுத்தியதற்கான முக்கிய சாட்சியாகக் கொள்ளப்படுகிறது. அந்த ஒரு காரணத்திற்காக அப்படியொரு காட்சியை வலியத் திணித்தாரா இயக்குநர் கமல்?

நகத்தால் உடலில் வேண்டுமென்றே கீறிக்கொள்ளும், இதுவரை இயல்பில் இல்லாத ஒன்றை இவராக எப்படி கற்பனையில் இடைச் செருகலாம்? முன்களியின்போது எதிர்பாராமல் நகக்கீறல் ஏற்படுவது சாத்தியம்தான். திட்டமிட்டே யாரேனும் செய்வார்களா என்ன?

இல்லை, அறிமுகமாகும் ஆரம்பக் காட்சியிலேயே மாடு முட்டிய காயத்தில் சாராயத்தை ஊற்றிக்கொள்வதாக காட்டப்படும் விருமாண்டியின் சண்டித்தனத்தின் நீட்சியாக இக்காட்சியை வைத்தாரா? எதையும் சரியாக காட்சியமைப்பார் என்று போற்றப்படுகிற – குறைந்தபட்சம் அவர் ரசிகர்களால் அவ்வாறு நம்பப்படுகிற கமல்ஹாசன், இப்படியா கோட்டை விடுவார்?

சரி, வேண்டுமென்றே செய்தது என்றால் அவ்வாறு சுயபிரக்ஞையுடன் கீறிக்கொண்டு அதில் சுகம் காண்பது, PERVERT வகையில் சேர்ந்துவிடாதா? இதுவா நமது பண்பாடு? நமது பேராண்மைமிகு கலாச்சாரக் காவலர்களின் கண்களை மறைத்துவிட்டு இப்படி செய்துவிட்டாரே! இது எதோ வாத்சாயனார் வகையறா ஆரிய (ஆனால், ஆறாத! 😉 ) சிந்தனையாக இருக்கிறதே.. ச்சே.. என்ன மனுஷன் இவர்? இதுவா தமிழ்க் கலாச்சாரம்?

என்றால்… நம்புங்கள், அது தமிழ்க் கலாச்சாரம்தான்..! இது எங்கே இருந்து எடுத்தாளப்பட்டது என பின்னோக்கினால் அகநானூற்றுப் பாடல்கள், கலிங்கத்துப் பரணி எல்லாம் அணிவகுத்து நிற்கின்றன.

கூடலில் தலைவன் தலைவியின் உடலில், குறிப்பாக மார்பில் நகக்குறி இடுவான் என்றும், பகற்பொழுதில் தலைவி யாருமற்ற தனிமைப் பொழுதில் ஆடை விலக்கி அதைக்கண்டு இன்புற்று, அன்றைய இரவுக்கு(ம்!) தயாராவாள் என்றும், அவ்வாறு அவள் பார்ப்பது – வறியவன் தனக்கு கிடைத்த அரிய செல்வத்தை மறைத்து வைத்து அடிக்கடி யாருக்கும் தெரியாமல் திறந்து பார்த்து மகிழ்வது போன்ற செயலாகும் என்றும் கலிங்கத்துப் பரணியின் “கடைதிறப்புக் காதை” பாடுகிறது.

“முலைமீது கொழுநர் கைந்நகம்மேவு குறியை
முன்செல்வம் இலாதவர் பெற்ற நிதிபோல்
கலைநீவி யாரேனும் இலாத இடத்தே
கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள், திறமின்!”

கலிங்கத்துப் பரணி மட்டுமல்ல, “விறலிவிடு தூது”ம்!

“உன்தொழில்க ளொன்று முரையாதே யின்னங்கேள்
முந்துவிர லால்தொயில் முலைக்கெழுதி – அந்தமிலாப்
பற்குறிகள் சும்பனங்கள் பண்பாம் நகக்குறிகள்
துற்றுதொழில் தாடனஞ் செய்துங்காண் முற்றியல்குல்”

– இந்தப் பாடலுக்கு பொருள் வேண்டுமா என்ன? 😉

சரி, நகக்குறி படுதல், நகக்குறி விழுதல் என்றில்லாமல் அது என்ன நகக்குறி “இடுதல்”? “நகக்குறி இடுதல் என்றால், இடுதல் எனும் சொல்லில் ஒரு மனப்பூர்வம் தெரிகிறது. உத்தேசம் தெரிகிறது. சற்று அணுகிப் பார்த்தால் மெல்லிய வன்முறை தெரிகிறது” என்று சிலாகிக்கிறார் நாஞ்சில் நாடன். (நன்றி: சொல்வனம்) மேலும் அவர், ஆண் பெண்ணின் மார்பில் நகக்குறி இட்டான் என்றால், பெண் எங்கு இட்டாள் என்று யாரும் ஏன் குறிப்பிடவில்லை என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

இந்தக் கேள்விக்கு விடையாக, வெற்றிடத்திற்கு பதிலாக கமல் முன்வைக்கும் கற்பனையாக அந்த விருமாண்டி படக் காட்சியை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் தலைவனே, தலைவியின் விரல் பிடித்து! 

இப்படி இலக்கியத் தரவுகளை, நேரடியாகவோ மேம்போக்காகவோ தன் எழுத்தில் எடுத்தாளுவது கமலின் வழக்கமாகவே இருந்து வருகிறது. இதே சிந்தனையோடு விஸ்வரூபத்தின் “உன்னைக் காணாது..” பாடலைக் கேட்டால்கூட, ஒரு நுண்ணிழை நமக்கு அபிராமி அந்தாதியை நினைவுபடுத்துகிறது.

“சூடிய வாடலை சூடியவா,
களவாடிய சிந்தனை திரும்பத்தா,
பூதனையாக பணித்திடுவாயா ?
பாவை விரகம் பருகிடுவாயா ?
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா”

என்ற கமலின் வரிகளில் இருக்கும் சந்தத்தைக் கவனித்தால் அதில், இந்த அபிராமி பட்டரின் வரிகளோடு ஒரு சந்தப் பிணைப்பு இருப்பதை உணரலாம்.

“கூட்டிய வாஎன்னைத் தன்னடி யாரில் கொடியவினை
ஓட்டிய வாஎன்கண் ஓடிய வாதன்னை உள்ளவண்ணம்
காட்டிய வாகண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வாநடம் ஆடகத் தாமரை ஆரணங்கே”

அபிராமி பட்டரை சொல்லிவிட்டு “குணா”வை சொல்லாமல் போனால், கோபித்துக்கொள்வான் குணசேகரன். மனநலம் பிறழ்ந்த, அல்லது பிறழ வைக்கப்பட்ட சிறுவன் குணா, குணசீலம் கோவிலில் கட்டிவைத்து வளர்க்கப்படுகிறான். பட்டரின் பாடல்களை மனனம் செய்து – பாடி – பேசி, அபிராமி என்றொருவள் நிஜத்தில் வருவாள், தன்னை ஆட்கொள்வாள் என மனதுக்குள் உறுதியாக நம்புகிறான். அவனுடைய உலகில் அக்றிணைகள், உயர்திணைகள் பேதமில்லை. அக்றிணைகள் அனைத்துடனும் உரையாடித் திரிகிறான். அவன் தனக்கும் அபிராமிக்கும் திருமணம் நடக்க ஏன் “பௌர்ணமி” நாளைத் தேர்ந்தெடுக்கிறான் என, பட்டரின் புராணத்தை படித்தவர்கள் கேட்க மாட்டார்கள். கல்யாணம்.. பௌர்ணமி.. அபிராமி.. குணா!

இதை எழுதும்போது மனதில், பட்டினத்தாரைப் பாடிய நந்தகுமாரனும் (ஆளவந்தான்), சிறைக்கதவுக்குப் பின்னிருந்து பாரதியை வாசித்த கிருஷ்ணசாமியும் (மகாநதி) அடுத்தடுத்து வரிசையில் நிற்கிறார்கள். கிராதகன் இந்தாள்! இன்னொரு நாள் இன்னும் ஆழமாக, இது போலில்லாமல் இன்னும் சிரத்தையாக எழுத வேண்டும்.

எழும் வினா ஒன்றுதான்: தமிழ்த்திரைப்படங்களில் இது போல் இலக்கியங்களை எடுத்தாள இன்று இவர்போல் வேறெவன் உளன்?!

I personally believe that – not like the Hero Kamal – the Writer Kamal is an Unsung Hero. “இப்ப இன்னான்ற சார், ஒடனே ஓங் கவுத தொகுப்ப ரிலீஸ் பண்ண மிடீமா? மிடியாதா?” என்று ஆழ்வார்பேட்டை வாசலில் போய் ஒருநாள் நிற்கலாமென்றிருக்கிறேன்.

எங்கள் காதலுக்குரிய கமல்ஹாசரே, இன்னுமோர் நூறாண்டிரும்!

Love you, Kamal!

###

பிகு: என்னிடமிருந்து இப்படி ஒரு பதிவா என யாரும் பதறி கையிலிருக்கும் பொருட்களை தவறவிட்டு உடைத்துக்கொள்ளவேண்டாம். எழுதியது நானில்லை. நண்பர் அஷோக். 🙂