நனவிலியிலிருந்து எழுந்து வரும் முகம் ஒத்திருக்கிறது
தாமரைக்குளத்திலிருந்து
அணையா விளக்குடன் வந்த தூண்சிலையை

கத்தியின்
கூர்முனையில் ரத்தமில்லை

தடத்தை எடுத்துச் சென்றிருக்கலாம்
ஊர்ந்திருந்த நத்தையின் வயிறு

ஒரு நாள் எல்லாம் சொற்களாக
மட்டுமே எஞ்சுகிறது எனும்போது
வானம் கிழிந்து பறக்கட்டும்
பித்தனின் பழம்பதாகை

O

எரிந்து தணியும் காடு
வைரங்களின் மீதும் புழுதிபடியச் செய்கிறது

ஊர்ந்து செல்லும் பாம்பின் பாதைகள்
நீள்கின்றன எரிந்த சாம்பலில்
அடையாளமிட்டபடி

இனி மகுடன் வருவான்.
சாம்பல் கலையும்
பாம்புகள் அழியும்
காடு எழும்

ஆனால், அது பழங்காடெல்ல
என
அனைவரும் அறிந்திருந்தார்கள்.

O

பியானோக்கட்டைகளில்
வண்ணம் பூசியவளை
நினைத்துக்கொண்டிருக்கும் இசைஞன் தன் முதல் இசையைத் தின்கிறான்

கால்களில் சாயத்துடன்
கருவியின் மீது
நடைபழகும் பூனை
தன் வேடனை அழைத்துச் செல்கிறது பாதையில்

இறுதிக்கண்ணியும் அறுந்து வெடவெடத்து அதிரும் கருவியை
தொலைவிலிருந்து பார்ப்பவர்கள்
யார் சிதைக்கோ வைத்த கொள்ளியை நினைவில் கொண்டு
ஓடுகிறார்கள்

எல்லாம் இசையாக எஞ்சும்
எல்லாம் சொல்லாக எஞ்சும்
எல்லாம் மொழியாக எஞ்சும்