கெளரி,

மறுபடியும் நானே. கணங்களை மறப்பது அத்தனை எளிதல்ல கெளரி. யாராவது எதையாது சொல்லி அங்கே மறுபடி இழுத்துப்போகிறார்கள். எதோ ஒரு அக்டோபரில் எழுதிய சில வார்த்தைகள் மறுபடி ஜூலையில் என்னிடம் திரும்பி வருமென எப்படி நான் அறிவேன். நாம் ஒரு புது காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் கெளரி. இணையம் எல்லாவற்றையும் அக்கறையின்றி இணைத்துக்கொண்டிருக்கிறது. நீ சில தொழில் நுட்பங்களை வைத்து விலகிப்போகிறாய் மறுபடியும், நான் இன்னும் சில தொழில் நுட்பங்களை வைத்து உன்னைப்பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். நம் தேர்வுகள் நம் சூழலை நிர்ணயிக்கின்றன. நம் தேர்வுகள் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. நாம் திரும்பத்திரும்ப பேசிய ஒன்று வலி என்பது சாஸ்வதம், வருந்துதல் என்பது தேர்வு. என் தேர்வு நீ கெளரி. இதில் வலி ஒரு பொருட்டில்லை. இந்த வலியை உனக்காக பொறுத்துக்கொள்ளமுடியாதெனில் என்னதான் என் நோக்கமென்றாகிவிடாதா…

நீதானே என் பொன்வசந்தம் பார்த்துக்கொண்டிருந்தேன். உன்னை நினைவூட்டும் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு செயலையும் திரும்பத்திரும்ப தேடியலைவதைவிட என்ன பெரிய வேலை எனக்கு இருக்கிறது. நான் என்பது வெறும் நியாபகங்கள். நான் என நான் நினைத்துக்கொண்டிருப்பது உன் நியாபகங்கள். இந்த நாடு என் தேவையில்லை. இந்த சூழல், இந்த வாய்ப்பு, இந்த கனவு என்னுடையதில்லை. ஆனாலும், நீ விலக விரும்பினாய். எத்தனை தூரம் என்னால் ஓடமுடியுமோ அத்தனை தூரம் உன்னைவிட்டு ஓடுவேன். உன் பார்வையில் படாமல், நீ கேட்கும் சொற்களில் படாமல், உன் நினைவுகளில் படாமல். என் முகம் நினைவிருக்கிறதா கெளரி. இல்லாமல் இருப்பது நல்லதென்று சொல்வதா, இல்லை, ஒரு கணத்தில் இந்த பனிப்பாறைகளை உடைத்துக்கொண்டு திரும்பி வருவாய் அன்று இந்த முகம் நினைவிருக்கட்டும் என வேண்டிக்கொள்வதா.. ஒருமுறை விலகத்தொடங்கியபின் மீண்டும் நாம் அடையும் நபர் அதே நபர்கள் இல்லை என்கிறது மனோதத்துவம். நான் அதே ஷிவா, கெளரி. இதுவரை எனக்குள் , எதுவும் மாறியதாகத் தெரியவில்லை. வருண் பள்ளி மாறி வரும்போது நம் பழைய கதையை நினைத்துக்கொண்டேன். எல்லாமே வெறும் நிகழ்வுகள் என்று எப்படி நம்புவது. எல்லாமே வெறும் மேகத்தூதுகளென்று.

ஒரு சொல். எத்தனை நிகழ்வுகளை புரட்டிப்போடுகிறது. எத்தனை நியாபகங்கள் சுழல்கின்றன ஒரு சொல்லைச் சுற்றி. என்னவாக இருக்கக்கூடாதென்று மெல்ல மெல்ல அடுக்கி வைத்த எத்தனை கோட்டைகளை ஒரு சொல் உடைத்து சிதறடிக்கிறது. அன்பிற்கு ஏங்குதல் அத்தனை பாவமா கெளரி. ஒரு சொல்லில் எல்லாவற்றையும் உடைத்து, உடைக்கக் கூடிய ஒரு சொல் என அறிந்த ஒரே ஒருத்தர் அதைச் சொல்ல நேர்வது எத்தனை பெரிய துர்கனவு கெளரி. உலகம் என்பது ஒரு கூட்டுச்சிந்தனை. நாம் வாழ்வெதெல்லாம் நாம் அறிந்தே ஒரே சிறுவாழ்வு. நம்மைச் சுற்றியுள்ள வெகுசிலர் சொல்லும் வெகு சில பதில்களுக்காக நம்மை நாமே கட்டி எழுப்பும் ஒரு கனவுச் சிற்பம். இந்த வாழ்வு ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் வெற்றி தோல்வியென்பது மூன்றாம் நபர் அறியாத ஒன்று. ஆனால் நம் விளையாட்டெல்லாம் மூன்றாம் நபரின் சொற்களை எதிர் நோக்கியே நாம் ஏன் அமைத்துக்கொள்ளவேண்டும் கெளரி. இந்த சொற்களை எத்தனை முறை விரித்து விரித்து பேசியிருப்போம். எத்தனை முறை எனை உடைத்து உடைத்து இந்தச் சொற்களை எனக்குப்புரியவைத்தாய். அத்தனையும் அறிந்தபின் ஏன் என்னுடன் இந்த விளையாட்டு… இந்த விளையாட்டின் முடிவுதான் என்ன?

பிறர் என்பது வெறும் பிம்பம் கெளரி. நாம் மட்டுமே நிஜம். பிறர் நம்மைப்பற்றி சொல்லும் சொற்கள், பிறர் நம்மைக் குறித்து உருவாக்கும் பிம்பங்கள் நம்முடன் நிற்கப்போவதில்லை. நாம் இதை ஒரு விளையாட்டாக நினைக்கப்போவதுமில்லை. இந்த பிம்பங்களைப்பற்றி நம் பயங்களைக் குறித்தே வாழ்வை அமைத்து உடைந்துகொண்டிருக்கிறோம். இன்று மழை தொடங்கியிருக்கிறது. இந்த வார இறுதியில் எதோ ஒரு புயல் எதோ ஒரு கரையைக் கடக்கிறது. எதோ ஒரு நாவாய் தன் நங்கூரம் முழுதும் அறுந்து ஆடத்தொடங்குகிறது. தன் தலைவனை இழந்த படகுகள் முழுதும் உடைந்து கடலில் மூழ்கப்போகிறது. எல்லாமே சொல்லால் நிகழ்கிறது கெளரி. எல்லாம் யாரோ ஒருவரின் சொல்லால். பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில் உலகின் மறு முனையில் கவிழப்போகும் நாவாய்களுக்கு பட்டாம்பூச்சியின் மீது எந்தக் குற்றச்சாட்டுமில்லை கெளரி. ஆனாலும், எல்லாம் ஓரிடத்திலிருந்து வேடிக்கை பார்ப்பவனுக்கு இந்த பட்டாம்பூச்சி என்ன செய்யப்போகிறது?

சொல்லென்பது ஒரு விதை. கடலில், பாறையில், தரையில், நிலத்தில், விதைப்பயிர்களுக்குள் விழும் விதை இடமேற்ப தன் வாழ்வைத் தகவமைத்துகொள்கிறது. நான் பாறையாய் இருந்தேன். சொல் விதையாயிருந்தது. அதன் வேர்களுக்கு என் ஊள்ளார்ந்த ஈரம் ஏங்கியிருந்தது. இது யாரும் யாரையும் குறைகூறும் படலமல்ல. யாரும் எதுக்கும் காரணமாகும் நிகழ்வும் அல்ல. எல்லாம் என்னவாக நிகழவேண்டுமென இருந்ததோ அதுவே அந்நிகழ்வாக இருந்தது. இதில் விதைகளுக்கு பாத்திரமில்லை. பாறைகளுக்கு, உள்ளார்ந்த நீருக்கு, உடைபட விதிசெய்த இயற்கைக்கு எதற்கும் பாத்திரமில்லை. இது இவ்வாறு இங்கனம் நிகழ்தல் ஒரு ஆதி வேடனின் முடிவாக இருந்தது அவ்வாறே நிகழ்ந்தது.

முகம், பிறந்த நாள், சொன்ன சொற்கள், நடந்த நிகழ்வுகள், நிகழ்வுகளின் இடங்கள் எல்லாம் நினைவிலிருக்கிறது. எல்லாம் எனக்கு மட்டும் நினைவிலிருக்கிறது. ஒரு பைத்தியக்காரனைப்போல எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த சொற்கள் யார் மூலமாகவாது உன்னிடம் வந்து சேரலாம், அன்று காலம் கடந்திருக்கலாம். அன்று நான் இல்லாமல் இருக்கலாம். சொற்களின் வாதையென்பது ஒற்றை விதையில் பல்கிப்பெருகும் விருட்சம். இந்த விருட்சத்தின் தென்றல் ஒரு நாள் உன்னை வந்தடையும்போது ஒரு முறை என் பெயர் சொல். ஒரு துளி கண்ணீரை வேரில் விடு. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வேறெதுவும் வேண்டாத
ஷிவா.