தீவு நிலத்தின்
முன்னிரவு நடனம்
பழங்கனவை ஒத்திருக்கிறது

பறை வார்களை இழுத்துக்கட்டியவன்
தொடைச்சூடு பட்டு
பாடிய அறம்
அதிர ஒலிக்கிறது

தெய்வங்கள் தன்னை அறியும்
கணமென்பது
முதல் முறை மண்ணிறங்கும்
குழந்தையின் நடன அசைவு பிதாவே

0

உடலெரிய ஓடிவரும் வியட்நாமியச் சிறுமிக்கும்
புகைவாசத்துடன் தண்ணீருக்கு அலறிய‌ ஜப்பானிய சிறுமிக்கும்
உன் முகம்தான்

எரிந்த ஆடைகளை பார்வைக்கு வைத்திருக்கும்
மீண்டெழுதலின் நிலம்
திரும்பிச்செல்பவர்களுக்கு வாசலில்
ஒரு மிட்டாயைக் கையளிக்கிறது.

காகிதக் கொக்குகள்
ஒளிமிதக்கும் பச்சை நிற தண்ணீர்தொட்டியில்
மிதக்கின்றன.

என் மீதான உன் மீப்பெருங்கருணையை
கொலைகளைப் பார்த்துதான்
உணர்ந்து கோள்ளவேண்டியிருக்கிறது தேவி.

0

தெளிந்த நீரோடையின்
சிறு விஷத்துளி போல‌
உன் பார்வை உயிரில் கலக்கிறது நிறமற்று

பூரண சரணாகதியென தன்னை ஒப்படைக்கும்
இச்சிறுபாணன்
கண்ணீர் வழிய கைகூப்பி நிற்கும்
தருணத்தில்

உன்
பரிசுத்தத்தின் புன்னகை
நிறைகிறது உலகெல்லாம்
மஞ்சள் பூக்கள் விரிய

0

நாற்காலிகளுக்கு எதிரான கலகங்கள்
தன் குறுவாளை நீட்டும்
காலத்தில்

தலைப்பாகைகள் தன்
ந‌ன்மருந்தைப் புகட்டும்
காலத்தில்

சிம்மாசன‌த்தின் கொடுங்கோலர்கள்
தன் ஆயுதங்களைக்
கையளிக்க வேண்டிய
காலத்தில்

கோரைப்பற்களின் கூர்முனைகள்
சொற்களால் மழுங்கடிக்கப்படும்
காலத்தில்

ஆதிவேடன் ஒரு அம்பை எடுக்கிறான்
கிரீடங்களுக்கு எதிராக‌
அதில் அமிர்தம் பூசப்பட்டிருக்கிறது.

0

இந்தத்தாண்டவம் தொடர்ந்து
ஆடப்படுகிறது
முகம் தெரிந்த ஒவ்வொருவரும்
அவனை மறுதலிக்கிறார்கள்

உடன் இருக்க விழையும் முதற்கணம்
அவர்கள் விலகிச் செல்கிறார்கள்.
முத்தத்திற்கு உதடுகுவிக்கும்போது
உடனடியாக இறந்துவிடுகின்றனர்

எரிதழல் தொடர்ந்து ஆடுகிறது

இவன் முத்தமிடுகிறான்
முழங்கையை மடக்கி
கடைசியாய் தன்னையே
ஒருமுறை

0

இசைப்பாணன் தன் இறுதி இசைக்கோவையை
அதன் உச்ச பரிசுத்ததில்
மெல்ல மெல்ல எழுத்தில் கட்டுகிறான்

ஒவ்வொரு கோர்வையையும்
மீண்டும் மீண்டும் திருத்தி
மீண்டும் மீண்டும் குறைத்து
மீண்டும் மீண்டும் செப்பனிட்டு

வாத்தியங்கள் தன் வார்களை
இறுக்கிக் கொள்கின்றன‌
புல்லாங்குழல்கள் தன் துளைகளை
அடைத்துக்கொள்கின்றன‌
நரம்புகள் தளர்ந்து படுக்கைக்கு ஏங்குகின்றன

பாணன் தன் விளையாட்டை
நிறுத்துவதில்லை
கருவிகளும் தான்.

0

உனக்காகத்தான் காத்திருக்கிறேன்
வாசகனே.
புன்சிரிப்பு போதும்
இந்த வாதையை உன்னிடம்
கையளித்துவிட்டு விலகிக்கொள்வேன்

இனி இது உன் வாதையாக இருக்கும்.
இந்தச் சொற்கள்
உன்வாழ்க்கையை உன்னை எழுதச் சொல்லி நச்சரிக்கும்

நீ இனி நானாகவும் இருக்கக் கூடும்
உன் கூர்வாள் எனக்காக தீட்டப்பட்டது தானே?
இந்தக் கையெழுத்திற்காக மட்டும் சிறுபங்கு
குருதியை எடுத்துவைத்துவிட்டு

இனி நீ உன் இச்சையைத் தீர்த்துக்கொள்ளலாம்.