இத்தீவின் எல்லா
ரயில் நிலையங்களிலும்
தெரிந்து விழுந்தவர்கள்
குருதி
வரலாறாக இருக்கிறது

நள்ளிரவில் அலையும்
தனித்த பூனை
நக்கித் தின்கிறது
வரலாற்றின் மலர்களை.

o

தெருவில் உருளும் பழங்களைப்
பொறுக்கும் குழந்தைகளை
அசூயை உடன் பார்க்கிறீர்கள்

போதையின் திணிப்பில்
மயக்கமுற்றிருக்கும் குழந்தைகள்
சிக்னலின் இரைச்சலில் தூங்குவது
குறித்து ஆச்சர்யம் இருக்கிறது

உடைந்த பொம்மையுடன்
ஒளிந்து கொள்ளும் குழந்தைகளை
இழுத்து அடிக்கும்போது

கண்ணில்படட்டும்
ஜன்னலுக்கு வெளியில் இருக்கும் மலர்.

o

இலையுதிர்கால மரங்களின் கீழே
தன் மலர்களைப் பொறுக்கும்
சாத்தானின் கரங்கள்

தூரிகைபிடித்து வரையும்
இரத்த மலர்கள்

வேர்களின் நிறங்களை வைத்திருக்கின்றன.

o

பழைய வனத்தின்
கழிவுகளின் மீது நின்றுகொண்டு
வரலாற்றைப் படிக்க விரும்பும்
குழந்தை

இடிபாடுகளுக்குள்
ஓவியத்தின் தூசிகளை
தூரிகைகளால் தட்டும்
ஒரு ஆய்வாளன்

தன் இசைக்கருவிகொண்டு
காலத்தைக் காப்பியமாக்கும்
பாடல்களைப் புனையும்
பாணன்.

எல்லாருக்கும் மழையென
வீழ்கிறது
பழைய நகரங்களை அழித்த
சாத்தானின்
பாத மலர்கள்.