முகு: பழைய அலுவலகத்தின் உள்வலைத்தளத்தில் நடக்கும் சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்ட விருந்தினர் பதிவு. இன்னும் சில கதைகள் உண்டு, தகுந்த இடைவெளியில் வெளியாகும். 😉

தூசிபறக்க காற்று மண்ணைவாரி முகத்தில் அடித்துக்கொண்டிருக்கும்போதுதான் நந்து தன் தூரிகை எதோ கனமான பொருள் மீது உரசுவதை அறிந்தான். தூரிகையைக் கீழேவைத்துவிட்டு கொஞ்சம் கையால் துடைத்துப்பார்த்தான். கருப்புமண் படிந்த குடுவை. முழுவதுமாக வெளியே தெரியும்வரை மெல்ல கைகளால் துடைத்து சுற்றிலும் தோண்டி குடுவையை வெளியே எடுத்தான். மூடி லேசாக உடைந்திருந்தது. குடுவையின் சுற்றுப்புறத்தில் வண்ணத்துப்பூச்சியின் பல்வேறு பருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. உள்ளே சின்னதாக ஒளி தெரிந்தது. அசைத்து மூடியை எடுக்கும்போது பாகங்கள் பிரிந்து இரண்டாக கையில் வந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. மூடியைக்கீழே வைத்துவிட்டு உள்ளே கைவிட்டு எடுத்தான். ஒரு தாமிரச்சுருள். வெளிப்புறம் முழுவதும் மண்ணில் பல ஆண்டுகள் புதைந்துகிடந்ததால் வந்த கருப்பு அப்பியிருந்தது. உள்பக்கமும் தூசியடைந்து இருந்தது. தூசியை வழக்கமான துணி கொண்டு அழுந்தத் துடைத்தான். எழுத்துக்கள் வாசிக்கக்கிடைத்தன. ஒவ்வொரு வார்த்தையாக வாசித்து முடித்தபோது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

நந்து ஆய்வுக்களத்திலிருந்து கிளம்பி தன் அலுலகம் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்கு வந்தான். கால்சட்டைப்பாக்கெட்டில் தகடு உறுத்திக்கொண்டிருந்தது. அலுவலகம் அத்தனை பெரிது ஒன்றும் இல்லை. ஒரு மடிக்கணினி. அதை வைக்க ஒரு மேஜை. அருகில் ஒரு நாற்காலி. தொலைவிலிருந்த அலமாரியின் மேலடுக்கில் ஆய்வுக்களத்திலிருந்து எடுக்கப்பட்ட சிறுகற்கள். சுடுமண் பொம்மைகள். சில எலும்புத்துண்டுகள். அடுத்தடுத்த அடுக்குகளில் சிறுதும் பெரிதுமாக சிலபல புத்தகங்கள். ஓலைச்சுவடிகள். அவற்றின் நகலெடுக்கப்பட்ட நீண்ட தாள்கள். மேஜையின் குப்பைகளை எடுத்து கொஞ்சம் சுத்தப்படுத்துவதான போர்வையில், கலைத்துவிட்டு, ஜாடியை மேஜை மீது வைத்தான். மடிக்கணினியைத் திறந்து இணையத்தில் மேய்ந்தான். பிறகு நீண்ட பெருமூச்சுவிட்டான். எழுந்துவெளிய வந்தபோது வெயில் மொத்தமாக இறங்கி இருள் பரவத்தொடங்கியிருந்தது. காற்று போடப்பட்டிருந்த ஒன்றிரண்டு கூடாரங்களையும் பிறித்து எறிந்துவிடும் வேகத்தில் சடசடத்துக்கொண்டிருந்தது. இன்னொரு முறை தகடைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். ஒரு நிமிடம் மனதில் அவனது கடன்கள், பிற செலவினங்கள், தேவைகள் ஒரு கணம் மின்னிமறைந்தன. மறுபடியும் ஒரு பெருமூச்சுடன் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு இருசக்கரவாகனம் நோக்கிச் சென்றான். ஆதிச்ச நல்லூரின் ஆய்வுக்கள பகுதியைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறியபோது மழை வலுக்கத்தொடங்கியது. அணிந்திருந்த மழையுடையைத்தாண்டியும் குளிர் ஊடுருவியது. பாண்டி கோயிலைத்தாண்டும்போது தன்னிச்சையாக கன்னத்தில் போட்டுக்கொண்டான். கோயில் வாசலில் அமர்ந்திருந்த பெருந்தாடிக்காரர் இவனைப்பார்த்து சிரித்ததுபோல் இருந்தது.

o

”எந்த நம்பிக்கைல சொல்ற” பிரபாகர் அசுவாரசியமாக சோபாவில் சாய்ந்துகொண்டான். கண்கள் ரிமோட்டையும் டிவியை மேய்ந்துகொண்டிருந்தன. மாற்றிக்கொண்டே இருந்தான். ஒரு அரசியல்வாதி யாரையோ பொம்மையாக்கி நடுத்தெருவில் எரித்துக்கொண்டிருந்தார். ஒரு நடிகர் அரசியல்வாதியாகும் முயற்சியில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். புரட்சிப்பெண்மணி ஒருத்தி ஆக்ரோஷமாக தன் கணவரைத் திட்டிக்கொண்டிருந்தார்(வீட்டுக்கு வரச்சொல்றார்ங்க!!). கோட் ஆசாமி குறுக்க மறுக்க நடந்து சுமார் நாப்பத்தைந்து குடும்பங்களை ஒரு மணி நேரத்தில் பிரித்துவைக்கும் விவாத நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார்.

“ஆர்க்கியாலஜில எனக்கு 15 வருஷம் அனுபவம். ஒரு கல்லப்பாத்தே இது எந்த வருஷம் எதுக்காக யூஸ் பண்ணியிருக்காங்கன்னு சொல்லமுடியும் . 99 சதம் தப்பாக வாய்ப்பே இல்ல தெரியுமா?” நந்து எரிச்சலுடன் சொன்னான்.

”அப்ப மீதி ஒரு சதம்?”

“அந்த நம்பிக்கை உனக்கு இருந்தாலும் பரவால்ல. ஆனா 99 சதம்டா.. சரியா இருந்தா இதுல கொட்டப்போற பணத்த மட்டும் யோசிச்சுப்பாரு”

”யப்பா ராஜா.. ஜெனிட்டிக் இஞ்சினியரிங்ன்றது நேரா ஆரம்பிச்சு உடனே பணம் கொட்ற விஷயம் இல்ல தெரியும்ல.. ”

”தெரியும். அதுக்குத்தான உன்கிட்ட வந்திருக்கேன். ஏற்கனவே எங்க தாத்தா ஓலைச்சுவடியெல்லாம் வாசிச்சிருக்கேன். இதுல என்ன இருக்குன்றத என்னால வாசிச்சு சொல்லமுடியும். நீ பண்ணவேண்டியதெல்லாம் இன்னைக்கு சைன்ஸ்ல அது என்னவா இருக்கோ அத பண்ண வேண்டியதுதான். புரியுதா?

“சரி மொதல்ல இருந்து சொல்லு” பிரபாகர் இப்பொழுது டீவியை அணைத்தான்.

”சிம்பிள் சைன்ஸ்டா.. இந்த தகட்டுல இருக்கிறது பரிமாணவளர்ச்சி சம்பந்தப்பட்ட எதோ ஒண்ணுன்னு நான் நினைக்கிறேன். மெட்டாமார்போஸிஸ் மாதிரி. ஒரு செல் உயிரில இருந்து ஆறறிவு மனுசன் வரை உருவாகுற உருவாக்குற அறிவியல். இது ஒரு வழிப்பாதையா மட்டுமில்லாம முன்பின்னாவும் இருக்கு. அதாவது சிறு அமீபாவ மீனாக்கலாம். மீன மனுஷனாக்கலாம். அல்லது எதிர்திசைல மனுசன அமீபா வரைக்கும் ஆக்கலாம். ஒருவேளை இததிரும்ப நம்மால செய்ய முடிஞ்சா, யாரையும் எதாவும் ஆக்குற சக்தி நம்ம கைல கிடைக்கும். “

“கிட்டத்தட்ட கடவுள் சரியா?”

“அதேதான்”

“சரி அதுக்கு என்ன பண்றது?”

“ஏழடுக்கின் தீரமது சூரமுடன் நானுரைக்க..”

”இந்தப்பாட்டெல்லாம் பாடாத. என்னென்ன வேணும்.. என்னென்ன சொல்லியிருக்கு… அத மட்டுஞ்சொல்லு.”

”அது தெரியாமத்தானே உங்கிட்டவந்தேன், என்னென்ன வேணும் என்னென்ன செய்யணூம்னு தெரிஞ்சா யாரையாவது வச்சு செஞ்சுக்க மாட்டனா?”

“அதுசரி.. பாடித்தொலை”

“ஏழடுக்கின் சூரணமாம் எரியுடையின் வாகனம்
யாழடுக்கின் மயிற்பீலி கரிபொடியின் தானுயர
பாழடுக்கின் பரம்பொருளாய் பரிமுடியும் கூடவர
கூழடுக்கின் சிறுஅணுவும் பூரணமாம் பூரணம்”

”ம்ம்.. நல்லாருக்கு.”

“அதில்ல. கடைசி வரி, அணுவிலிருந்து பூரணத்துக்குப் போறது பத்தி சொல்லியிருக்கு. மத்த பொருள்தான் தெரியல”

பிரபாகர் போய் ஒரு நோட்டை எடுத்துவந்தான், முதற்பக்கத்தில் பாட்டை நந்து தகடைப்பார்த்து சொல்லச் சொல்ல வரிசையாக எழுதிக்கொண்டான்.

”ஏழடுக்குன்னா ஹாலோஹென்ஸ். ஆனா அது ப்ரீயாடிக் டேபிள். கெமிஸ்ட்ரி. காலத்துல ரொம்ப பிந்திவந்ததுதான். ஆனா அதத்தவிர பெருசா ஏழுன்ற நம்பர் எனக்குத்தெரிஞ்சு வேறெங்கையும் இல்லை. ஆனா சூரணம்னு?” பிரபாகருக்கு சுத்தமாக நம்பிக்கையில்லை.

“எல்லாம் சமவிகிதத்துல கலக்கிறதுதான் சூரணம்னு சொல்லுவாங்க. ஹாலோஜென்றது ஒரு கெமிக்கல் இல்லையாம் ஐஞ்சு கெமிக்கல்ஸ்னு விக்கி சொல்லுது. சரியாத்தான் இருக்கு. அஞ்சையும் சமவிகிததுல”

”எரியுடையின் வாகனம்?”

“கரியா இருக்கலாம். அல்லது வைரம். அல்லது கார்பன்ல வர்ற எதாவது ஒண்ணு”

“முழுசா தெரிஞ்சுட்டுத்தான் வந்திருக்கியா?”

‘இல்ல கொஞ்சம் நெட்லபாத்தேன். கொஞ்சம் எனக்கே தெரியும். தாத்தா சித்தமருத்துவர். அதும்போக ரசவாதமெல்லாம் பண்ணிட்டு இருந்த ஆளு”

“ம்ம். யாழடுக்கு? எதாவது மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்டா?”

“இல்ல. யாழடுக்கின் மயிற்பீலி. துத்தநாகமாம்.”

”கரி பொடி? சாம்பல் கரெக்டா?”

“அதேதான். ஆனா எதோட சாம்பல்னு தெரியல. ஒருவேளை துத்தநாகத்தை பஸ்பம் பண்றதா இருக்கும்னு நினைக்கிறேன்”

”பரிமுடி? குதிரை முடியா… யப்பா…”

“இல்ல.. குதிரைவாலி. அது ஒரு தானியம். அதாத்தான் இருக்கணும்.”

“இருக்கணும், இருக்கலாம், இருக்கலாம்னு நினைக்கிறேன். சரியா யோசிச்சு சொல்லுப்பா. இதவச்சு என்னத்த செய்யுறது”

“எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். எல்லா காம்பினேசன்லையும் முயற்சி பண்ணி பாப்போம்”

”ம்ம். ஆக, கடைசிவரி, அமீபா மனுசனாகிறதுதான்ங்கிறது மட்டும் முடிவு பண்ணிட்ட”

“கிட்டத்தட்ட. அததவிர வேற வழியே இல்ல”

o

பிரபாகரின் ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதி இதற்காக ஒதுக்கப்பட்டது. வழக்கமான அலுவல் நேரம் முடிந்ததும், நந்து பிரபாகரின் ஆய்வகத்திற்கு வந்து உடனிருந்தான். ஒவ்வொரு பொருளாக சேகரித்து ஒவ்வொரு முறையாக சோதித்துப்பார்த்தார்கள். பொருட்களும் அதன் கலவைகளும் அதை உருவாக்கும் முறைகளையும் நந்து செய்தான். பிரபாகர், இறுதிக்கலவையை அமீபாக்களின் மீது பரிசோதித்து அதன் முடிவுகளை அவனது ஆய்வுக்கணினியில் தகவல் பொருட்களாகச் சேமித்துக்கொண்டே வந்தான். ஒவ்வொரு முறையும் தோல்வியிலிருந்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாக அவர்களுக்குப்பட்டது. சில சமயங்களில் அமீபா இரண்டாகப் பிரிந்து இரண்டுமே அழிந்தது. பிரபாகர், தன் பழைய ஆய்வுகளிலிருந்து எடுத்த முறைப்படி அமீபாவினை அழியாமல் காப்பதற்கான தடுப்புப்பொருட்களை இணைத்தால், எந்த வித்தியாசமும் இன்றி அமீபா அப்படியே மாற்றமின்றி இருந்தது. ஆறுமாதங்கள் இந்த ஆய்வில் காலம் கடந்தபின் அவர்களது அவ நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது. பிரபாகர் நந்துவைவிட அதிகமாவே அவ நம்பிக்கை அடையத்தொடங்கியிருந்தான். வேறு சில ஆய்வுக்காக வைத்திருந்த மாதிரிகளையும் இதற்குப் பயன்படுத்த ஆரம்பித்ததால், இதற்கான ஆய்வுகள் பெருஞ்செலவைத் தின்றபடி எந்த முன்னேற்றமுமில்லாமல் இருந்தன. நந்துவின் மனைவியும் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கேள்வி கேட்க ஆரம்பித்திருந்தாள். அவர்களுக்குள்ளே சின்னச் சின்னச் சண்டைகளும் வரத்தொடங்கியிருந்தன. நந்து இப்படி நேரம் காலம் இல்லாமல், தொழிலுக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு ஆய்வறையில் நேரம் போக்கிவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவது குறித்து அவளுக்கு கடுமையான வருத்தங்கள் இருந்தன. பாண்டிகோயிலில் பார்த்த பெருந்தாடிக்காரர் அடிக்கடி இவன் பாதையில் எதிர்பட ஆரம்பித்தார். இவன் கடந்துபோகும்போதெல்லாம் அவர் கைகொட்டிச் சிரித்தார்.

“இதுக்கு மேல எனக்கு சரியாவரும்னு தோணல நந்து” பிரபாகர் சொன்னான். முழுக்க நம்பிக்கையை இழந்திருந்தான். செலவுக்கணக்குகளைக் குத்திக்காட்டிய பேச்சுக்களுக்கு நடுவில்தான் ஆய்வு நடந்துகொண்டிருந்தாலும், அவ்வப்போது இப்படி வாக்குவாதங்கள் எழுவதுண்டு.

“எதோ ஒண்ணு மிஸ் பண்றோம்டா. என்னனு தெரியல. அத மட்டும் புடிச்சுட்டா சரியான கலவை கிடைச்சுரும். அது கிடைச்சுட்டா அப்புறம் நிலமையே தலகீழ்”

“அல்ரெடி தலகீழப்போயாச்சு நந்து. வீட்ல ரெஸ்பான்ஸ் ஒண்ணும் செரியில்ல. அவங்க பேசுறதும் சரியாத்தான் இருக்கு.. செலவு பண்ணி எதுவுமே கிடைக்கலைன்னா?”

”உனக்கே தெரியும் பிரபா.கிடைச்சா இதோட ரேஞ்சே வேற. வரப்போறகாச நினைச்சா.. இப்ப பண்ற காசு ஒரு சதத்துக்கும் கீழ தெரியும்ல?”

“அது இருக்கட்டும். ஆனா…. நாமளே பண்ணிட்டு இருந்தா எப்ப்படி? நீ ஆர்க்கியாலஜின்னா, நான் ஜெனடிக் இஞ்சினியரிங்க்… ஆனா யோசிச்சுப்பாரு… சித்தமருந்து, பலவருஷத்துக்கு முன்னாடி பண்ண ரசவாதம்.. அப்போதைய அறிவியல்.. இதெல்லாம் நமக்கென்ன தெரியும்? “வேண்ணா புலிதேசிகர்ட்ட ஒருதடவ கேட்பமா? சித்தராம்ல… கன்பார்மாவது பண்ணிக்கலாம்டா”

“யாரு.. அந்த பாண்டிகோயில் தாடிக்காரனா? அவன் முழு லூசாகிட்டாம்பா. முன்னாடியெல்லாம் கோயில்ல உக்காந்திருந்த ஆள், இப்ப ஊருக்குள்ளல்லாம் சுத்த ஆரம்பிச்சுட்டான்பா… நான் போறபாதை வர்ற பாதைலைல்லாம் நின்னு சிரிச்சுட்டு இருக்கான்பா”

“ஆமா… அவன் லூசு…. ஊர்ல எல்லாரும் லூசு. நாமதான் லூசாகிட்டு இருக்கோம்னு தோணுது நந்து… இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு… கிடைச்சகாசெல்லாம் இந்த தகட்ட நம்பி… மெட்டாமார்போஸிஸ் அது இதுன்னு….”

”ஹேய்ய்ய்ய்ய்ய்” நந்து ஓடிவந்து பிரபா கன்னத்தில் முத்தமிட்டான். “புடிச்சுட்டேன்…. எத மிஸ்பண்றோம்ன்ற புடிச்சுட்டேன். மெட்டாமார்போஸிஸ்! எஸ்! வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை ஸ்டேஜஸ். அந்தக் குடுவைல கூட வரைஞ்சிருந்தது. முட்டை. லார்வா, கூட்டுப்புழு பூபா, வண்ணத்துப்பூச்சி. அஞ்சும் அதுல இருந்துது. ஹாலோஜன்க்கு சேர்க்கவேண்டிய அஞ்சு அதுதான்! அம்மேசிங்க்! இன்னைக்கு அஞ்சு பருவத்துலையும் ஒரு ஸ்பெசிமன் எடுக்கிறோம். மருந்த முடிக்கிறோம். சியர்ஸ்”

பிரபாவும் நந்துவும் மனதுமுழுக்க நம்பிக்கையோடு வெளியே போனபோது புலிதேசிகர் வெளிவாசல் பெரியகதவின் அருகே நின்று சிரித்துக்கொண்டிருந்தார்.

O

நந்துவும் பிரபாகரும் திரும்பி வந்தபோது அவர்கள் கையில் ஐந்து பருவங்களுக்கான ஸ்பெசிமன்களையும் வைத்திருந்தார்கள். வாசலிலேயே தேசிகர் மறித்தார்.

“லூசு.. வழிய விட்றியா இல்லையா… “ நந்து எரிச்சலுடன் இருசக்கரவாகனத்தின் பின்னாலிருந்து இறங்கினான்.

“என்னப்பா கடைசியா பட்டாம்பூச்சியையும் எடுத்துட்டீங்க போல?” தேசிகரின் குரலில் நக்கல்தொனி.

பிரபாகர் திடுக்கிட்டான். வண்டியை தாங்கலிட்டு நிறுத்திவிட்டு அவனும் இறங்கினான்.

“அத வச்சு கடவுளாகிடலாம்னு நினைக்கிறீங்களா? அது வெறும் குப்பை. எவனோ தருமிப்புலவன் எழுதிவச்ச மொக்கை பாடல். பத்து பைசாவுக்கு ப்ரயோஜனமில்ல. அதவச்சு பணக்காரனெல்லாம் ஆகமுடியாது. என்ன மாதிரி பைத்தியக்காரன் வேணா ஆகலாம்” தேசிகர் மூச்சுவிடாமல் பேசினார்.

“அதப்பத்தி உனக்கென்…உங்களுக்கென்ன தெரியும்?” நந்துவின் குரலில் எரிச்சலும் ஆச்சர்யமும் கலந்தே இருந்தது

“தெரியும். அதைத்தெரியும். அதாலதான் உங்க தாத்தா சித்தவைத்தியர் இறந்துபோனார்னு தெரியும். வெள்ளக்காரன் காலத்துல லண்டன்ல விஞ்ஞானம் படிக்கப்போன நான் பைத்தியக்காரனா அலைஞ்சு, தாடியோட சுத்துறதால இப்ப சாமியாரா சித்தரா நினைக்கப்பட்ற வரைக்கும் தெரியும்”

“அப்ப நீங்க அத கண்டுபிடிச்சிட்டீங்களா? நான் எடுத்தது நாங்க தனிப்பட்ட முறையில பேசுனதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்கு”

பிரபா வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்குள் இன்னொரு கதை ஓடிக்கொண்டிருந்தது. பிரபாகரின் தாத்தா லண்டனுக்கு படிக்கப்போன கதை. பிறகு பைத்தியமாகி வீட்டிலிருந்து விரட்டப்பட்ட கதை.

”தேவையில்லாத கேள்விகளக் கேட்காத நந்து. அதுல இருக்கிறது மனுசன கடவுளாக்குற பாட்டு இல்ல. கடவுள மனுசன் கும்புட்றதப்பத்துன பாட்டு” தேசிகரின் குரலில் இப்போது அக்கறையும் இருந்தது. ஒருமுறை பிரபாவை தலைதிருப்பிப் பார்த்து சிரித்தார்.

“கடவுளக் கும்புட்றதா? அப்டின்னா?”

” நீ பாட்டச் சொல்லு?”

“ஏழடுக்கின் சூரணமாம் எரியுடையின் வாகனம்
யாழடுக்கின் மயிற்பீலி கரிபொடியின் தானுயர
பாழடுக்கின் பரம்பொருளாய் பரிமுடியும் கூடவர
கூழடுக்கின் சிறுஅணுவும் பூரணமாம் பூரணம்”

“எரியுடையின் வாகனம் – எருமைப்பால், யாழடுக்கின் மயிற்பீலி பாட்டுப்பாட்றவங்களுக்கு மயிலிறகாட்டம் குரல் கொடுக்கிற பனங்கற்கண்டு. கரிபொடி சுட்ட மஞ்சள் பொடி, பாலடுக்கின் பரம்பொருள் , பாலாடைக்கட்டி, பரிமுடியும் கூடவர கூழடுக்கு – குதிரைவாலியை அரைச்சு எடுக்கிற மை. எல்லாத்தையும் உருண்டையா புடிக்கிற பூரணம். கேள்விப்பட்டிருப்பியே இனிப்புக்கொழுக்கட்டை. அந்த பதத்துக்கு பூரணம் உருண்டையா புடிக்கணும்…”

“பொய் சொல்றீங்க. ஏழடுக்கின் சூரணம் பத்தி மறைக்கிறீங்க” நந்துவுக்கு கோபம் வந்தது. முற்றிலும் நம்பவும் முடியவில்லை. ஆனாலும் குழப்பமாக இருந்தது.

“இன்னுமா தெரியல. ஏழடுக்குன்னா கொலு. நவராத்திரி கொலுவுக்கு யாரோ செஞ்சு குடுத்த சூரணம் பத்தி எவனோ பாட்டெழுதியிருக்கான். அதவச்சு தலைமுறை தலைமுறையா யாராவது பைத்தியமாகுறாங்க.”

தேசிகர் இவர்களின் குழப்பத்தைப்பார்த்து சிரித்தார். சத்தம்போட்டு சிரித்தவாறே போய்விட்டார். இருவரும் வீட்டிற்குள் வந்தனர். பிரபாகருக்கு கால்கள் சோர்ந்து சோபாவில் பொத்தென விழுந்தான். நந்து குழப்பத்தில் இருந்தான்.

”போச்சு. மொத்தக்காசும், பத்துரூபா கொழுக்கட்டை செய்யுற பாட்டுல வேஸ்ட் பண்ணிருக்கம் நந்து” பிரபாவுக்கு முழுஎரிச்சல். கூடவே கையறு நிலையில் ஏற்படும் நக்கல்

“இப்பவும் இவர என்னால நம்ப முடியல பிரபா எதுக்கும் இந்த கடைசி முயற்சியையும் பண்ணிப்பாத்துரலாம்னு இருக்கேன்” நந்து உறுதியாகச் சொன்னான்.

”லூசாடா நீ… இதுக்குமேல….”

“இல்லபிரபா எனக்கு நம்பிக்கை இருக்கு. என் தாத்தா எதோ ரோட் ஆக்சிடண்ட்ல இறந்தார். இந்தாளு ஆராய்ச்சில இறந்ததா சொல்றார். ஊருக்கே தெரியும் உன் தாத்தா மட்டும்தான் லண்டன் போய் படிச்சவரு. இவரு அத தன்னோட கதையா சொல்றார்.”

“எனக்கென்னமோ இவர்தான் என் தாத்தான்னு..”

”லூசுமாதிரி பேசாத பிரபா… நான் செஞ்சுபாக்கபோறேன்”

நந்து வண்ணத்துப்பூச்சி படி நிலைகளின் ஸ்பெசிமன்களை எடுத்துக்கொண்டு ஆய்வகத்திற்குள் புகுந்தான். மறுபடியும் கலைத்துவிட்டு எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு படிநிலையாக செய்துகொண்டே வந்தான். கடைசியாக அமீபாமீது தன் கலவையை ஊற்றினான்.

பிரபா கொஞ்ச நேரம் சோபாவில் புரண்டுகொண்டிருந்தான். டீவியைப்போட்டான். மண்புழு உரம் பற்றி பொதிகையில் பேசிக்கொண்டிருந்தார். எரிச்சலையாகி டீவியை அணைக்கும்போது ஆய்வகத்தில் வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து ஆய்வகம் எரியத்தொடங்கியதைப்பார்த்தான். பயந்து வெளியே தலைதெறிக்க ஓடும்போது கதவின் அருகே கல்தடுக்கி ரோட்டில் தலைகுப்புற விழுந்தான். அதிகவேகத்தில் வந்த லாரி அதற்குள் நெருங்கியிருந்தது.