பானு பங்களாவின் வாசற்கதவைத் தள்ளியபோது அது கிறீச்சிட்டது. பேய்பங்களாவுக்கென்றே தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட சப்தம். மனதில் பாரம் முற்றிலுமாக இறங்கியிருந்தது. ஓடிவந்ததின் மூச்சிறைப்பு இன்னும் நிற்கவில்லை. இங்கிருந்து பார்க்கும்போது தூரத்தில் நந்துவின் வீடு எரிவது தெரிந்தது. கூடவே சுற்றியிருப்பவர்களின் சலசலப்பும் கேட்டது. இனி இந்த பங்களாவுக்கு போலிஸ்வரும். பார்த்துப்பார்த்து சேகரித்த ஒவ்வொரு செடியையும் அழிப்பார்கள். வீட்டையே புரட்டிப்போடக்கூடும். கூடவே யார் யார் வருவார்கள் என்பதை இப்போதைக்கு தெரியாது. ஆனால் யார் வந்தாலும் இனி கவலையில்லை. கடமை முடிந்தது. நந்து இறந்துவிட்டான். அல்லது கொல்லப்பட்டான். நகக்கீறல்கள் படியும் படி அவனைக்கீறி கொன்றாயிற்று. நீலிமாவுக்காக. அவளது சிதைந்த முகத்திற்காக. நந்து போன்ற விஷப்பூச்சிகள் நசுக்கி அழிக்கப்படவேண்டியவர்கள். அழித்தாயிற்று. தடயங்களைப்பற்றி கவலையில்லை. சென்ற வருடம் இதே நாளில் நடந்த கதைக்கு இன்றைக்கு தீர்ப்பு எழுதியாயிற்று.
0
நான் அன்றைய நாளில் ஒரு சைக்கோ. முழுக்க தன்னிலை இழந்த வெறியன் பிறர் குறித்த எந்தக் கவலையுமில்லாத தான்தோன்றி. அல்லது மனிதர்களின் மனதை அறியத்தெரியாத பைத்தியக்காரன். உடலும் மனமும் ஒரு நிலையில் நில்லாத பித்தன். நிலீமாவைக் காதலித்தேன். நிஜமாகவே.. நிமிடத்துக்கொரு மெசேஜ். மணிக்கொரு அழைப்பு. எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்பதை எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும். இதைத்தவறென்று சிலர் நினைக்கலாம். வழக்கமான ஒன்றென்று எடுத்துக்கொள்ளும் பெண்களும் இருக்கலாம். ஆனால் எனக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. அவனது பழங்கதைகளின் அனுபவங்கள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இந்த இடத்தில் நிறுத்தியிருக்கின்றன. இதற்காக என்னால் கவலைப்பட முடியாது. நான் எப்படி இருக்கிறேன் என எனக்குள் நுழைந்து பார்த்துக்கொண்டிருந்தால் என்னால் இந்த நிமிடத்தை வாழமுடியாது. நான் காதலிக்கும் பெண் என்ன செய்துகொண்டிருக்கிறாள் எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்ததில் என்ன தவறு. அவளுடன் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டிருக்க நினைத்தது என்ன தவறிருக்கிறது. பானு நீலிமா. சகோதரிகளாக இருக்கலாம். ஆனால் நான் ஒருத்தியைக் காதலிப்பதை இன்னொருத்தி எப்படி குறுக்கே புகுந்து கேள்வி கேட்கலாம். என் காதலை முழுக்க மோதலாய் மாற்றியது அக்காக்காரி. பானு. என் காதலை தூக்கிப்போட்டு காலில் மிதித்தது நீலிமா. இருவரையும் கொல்லும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் நீலிமாவின் அழகை அழிக்கவேண்டும். எனக்குக் கிடைக்காத அழகான முகத்தை, அந்த உடலை இன்னொருவன் தொடக்கூசவேண்டும். ஆசிட் வாங்கினேன். அதுதாங்குமாறு ஒரு பாட்டிலும். வீட்டிற்குள் நுழைந்தேன். அக்காவும் தங்கையும் தனியாக வீடெடுத்து தங்கிருக்கிறார்கள். அதை வீடென்று சொல்ல முடியாது. பங்களா. சுற்றிலும் பெரியதோட்டம். எவ்வளவு கத்தினாலும் வெளியே கேட்காது. வசதி. அவர்களுக்கு வெளிநாட்டுக்காசு. எங்கையோ வெளி நாட்டில் இருக்கும் அப்பாஅம்மா குறைந்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள். அல்லது கோடிக்கணக்கில் கூட இருக்கலாம். அந்தப்பணம். அந்தப்பணத்தில் தின்று கொழுத்த உடல். அது அவர்களை இப்படி திமிருடன் வளர்த்து வைத்திருக்கிறது. அந்தத் திமிரை முதலில் அழிக்கவேண்டும். முதலில் அக்காவை முடக்கி படுக்க வைத்துவிட்டு… பின் நிலீமாவை அவள் தன் அழகுக்காக பதறும் கணங்களை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துவிட்டு திராவகத்தை ஊற்றவேண்டும். வெளி நாட்டில் காசு சேர்க்கும் அப்பன் அலறவேண்டும். அந்த அழகு.

நினைத்துபோலவே எல்லாம் நடந்தது. வேலைக்காரர்களும் போனபின் இரவில் நுழைந்தேன். கதவைத்திறந்த பானுவிற்கு கதவிலேயே முகத்தில் அறைந்தேன். அலறி மயங்கி பின்புறமாகச் சரிந்தாள். கதவிற்கு அருகில் திரைச்சீலைக்குப் பின்புறம் மறைந்து நின்றேன். அலறல் சப்தம் கேட்டு பதறி ஓடிவந்த நிலீமா சுதாரிக்குமுன் பாட்டிலைத் திறந்து…….

நின்று அழகு அழிவதைப்பார்த்திருக்கலாம். என்னவோ ஒரு பதட்டம். மனதிற்குள் அலையாடும் இரும்புப்பந்து கனம். உடனே ஓடிவந்தேன். இன்றைய கணக்கை எடுத்துப்பார்த்தால் ஒரு வருடம் இருக்கலாம். அல்லது கூடவோ குறையவோ இருக்கலாம். ஒவ்வொரு நாளும் இந்த மதுப்புட்டியுடன் அமர்ந்திருக்கும் இரவில் நினைவுக்கு வரும் ஒரே கதை.

என் வாசல்கதவு தட்டப்படுகிறது.
0
பானு நந்துவின் வீட்டிற்குள் நுழைந்தபோது அவன் குடித்துக்கொண்டிருந்தான். கதவைத் திறக்கும்போதும் கையில் மதுக்கிண்ணம் இருந்தது. கால்களில் சோர்வு. நிலையடுக்கில் கைகொடுத்து நின்று யார் என்று கேட்டான். அவனுக்கு பானுவைத்தெரியவில்லை. யார் என்று புரியவில்லை. பானு வீட்டிற்குள் நுழைந்தாள். கையிலிருந்த மயக்கமருந்து கர்சீப்பை அவன் முகத்தில் வைத்து அழுத்தினாள். இதற்காகவே வளர்த்துவைத்திருந்த பெரிய நகங்களை முகத்தில் ரேகைகளாகப் பதித்தாள். பிறகு முகத்தை கோடு கோடாகக் கிழித்தாள். ரத்தம் நக இடுக்குகளில் படிந்தது. நந்து தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தான். சட்டையைக் கிழித்து மார்பெங்கும் மறுபடி நகக்கீறல்கள். மயக்கமும் வலியும் கலந்த நிலையில் இன்னும் கிடந்தான். சுற்றிலும் பார்த்தாள். ஓரமாய் இருந்த அறை தெரிந்தது. வாசலில் அளவு பாத்ரூம் எனத்தெரிந்தது. நேரே உள்ளே நுழைந்தாள். ஆசிட் இருந்தது. டப்பாவோடு எடுத்துவந்தாள். நந்துவின் உடலெங்கும் ஊற்றினாள். நந்து கொண்டுவந்த ஆசிட் போல இல்லை. இதுவும் கொஞ்சம் புகைந்து எரிந்தாலும், நந்துவிற்கு இந்த வலி காணாது. சமையலறைக்குள் நுழைந்தாள் கேஸ் சிலிண்டரை இழுத்துவந்து நந்து பக்கத்தில் வைத்தாள். கையில் கிடைத்த காகிதம், துணி எரியும் பொருள் அனைத்தையும் வீட்டு ஹாலெங்கும் எறிந்தாள். மேலாக நந்துவின் மது. பாட்டிலைத் திறங்கும் அங்கும் இங்கும் எங்கும் என தெளித்தாள். கதவை மூடும் முன்னதாக ஒருமுறை முழுதாகப் பார்த்துவிட்டு தீக்குச்சியைக் கிழித்து எறிந்துவிட்டு தனது வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினாள்.
O
பானு வீட்டிற்குள் வந்து பிரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள். அக்கா இறந்த வீட்டில் இருக்கவேண்டாம் என எத்தனையோ பேர் கூப்பிட்டும் எத்தனைபேரோ வற்புறுத்தியும் தொடர்ந்து இருந்ததன் நோக்கம் நிறைவேறிய ஆசுவாசம் எழுந்தது. கொலை என்பது ஒரு கணத்தில் நிகழ்வதல்ல. அதன் ஒவ்வொரு கண்ணியும் முழுக்க முடிவெடுக்கப்பட்டு நீட்டப்படுகின்றன. நந்து கொலையாகவேண்டுமென எழுதப்பட்டு மெல்ல மெல்ல அவன் சைக்கோவாக மாறிவந்தான். நீலிமா அவன் மேல் காதல் கொள்ளவேண்டுமென எழுதப்பட்டு அவள் செய்தாள். அவன் இவளைப்படுத்தினான். பிறகு ஆசிட். கொலை. மறுபடியும் இப்போது ஒரு கொலை. எல்லாம் ஒவ்வொரு முறையும் யாராலும் திருத்தமுடியாத ஒரு கதையாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் இரண்டு நொடிகளுக்குள் கடந்துபோகும் ஒரு நாளிதழ் செய்திக்குப்பின்னால் இவ்வளவு பேருடைய வாழ்க்கை காரணமாக இருக்கிறது. அந்தக் கொலைக்காக துரும்பையாவது அசைத்த ஒவ்வொருவருக்குப் பின்னாலும் இத்தனை கணங்கள் மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டு எழுகின்றன.

பானு கொலை செய்யக்கூடியவில்லை. நீலிமாவுக்கும் அதைப்பற்றிய எண்ணம் இருந்திருக்காது. ஆனாலும் இன்று பானு இந்தக் கைகளால் இந்தக் கொலையைச் செய்யவேண்டுமென இத்தனை நடந்திருக்கிறது. பானுவிற்கு நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. கூடவே சோர்வாகவும். பாத்ரூமுக்குள் நுழைந்தாள். உடைகளைக் கழற்றி ஒரு வாளியில் திணித்துவிட்டு சுடுதண்ணியை சரியான பதத்தில் வரும்படி ஷவரில் திறந்துவிட்டாள். கொஞ்ச நேரம் முகத்தையே கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தாள். ஷவர் நீரில் சரியான பதம் வந்ததும் பாத்டப்பில் இறங்கி சுடு நீரில் அமிழ்ந்தாள். முழு உடலும் நீரில் அமிழ்ந்திருக்க ஷவரிலிருந்தும் நீர் விழுந்துகொண்டிருந்தது. எதோ ஆற்றில் குளிக்கும்போது மழை வந்ததுபோல. இந்தக் கற்பனையை நினைத்து சிரிப்பு வந்தது . கல்லூரியில் படிக்கும்போது இப்படியான கற்பனைகளுக்குக் காத்திருந்தவள் பானு. இதெல்லாம் வரும்போது உடனடியாக ஒரு காதல் கவிதையாக அது முடியும். ஆற்றில் குளிக்கும்போது வரும் மழையில்/உன் நினைவு/அதனால்தான் என்னவோ…..

எத்தனை கவிதைகள். எத்தனை நோட்டுப்புத்தகங்கள். எத்தனை போட்டிகள். எத்தனை பரிசுகள். கூடவே ரோஜாப்பூக்களும், கிரீட்டிங்க்கார்டுகளுமான எத்தனை எத்தனை கைகள். கெஞ்சும் எத்தனை முகபாவனைகள். எத்தனை மனிதர்கள். எல்லாம் அழிந்துபோயிற்று. இன்று…
பாத்டப்பிலிருந்து எழுந்து மறுபடி பானு முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். உடலெங்கும் டவலெடுத்து துடைத்துக்கொண்டாள். அலமாரியிலிருந்து நிலீமாவுக்குப் பிடித்த சிவப்பு நிற உடையை அணிந்துகொண்டாள். கழற்றிவைத்த ஆடைகள் இருந்த வாளியை எடுத்துக்கொண்டு புழக்கடைக்கு வந்தாள். வாளியிலேயே கொஞ்சம் மண்ணெண்ணை ஊற்றி நெருப்புக்குச்சியைக் கிழித்துப்போட்டாள். நெருப்பு எரிவதைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். பிறகு தோட்டத்தில் நடக்கலாம் என்றும் தோன்றியது. எரியும் நெருப்பைப் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு உன்மத்த நிலை. மெல்ல அதற்குள் கரைந்து அந்த ஒளி மட்டுமே மனசுக்குள் ஆடிக்கொண்டிருக்க எந்த குழப்பமும் இல்லாமல் எல்லா நினைவுகளும் அழிந்துவிட்ட ஒரு மயக்கத்தைத் தரும் நிலை. தோட்டத்தின் அரளிகள் சிவந்து பூத்திருந்தன. திடீரென நினைவுக்கு வந்து சுற்றிப்பார்த்தாள். பார்க்கும் இடமெல்லாம் சிவப்பே நிறைந்திருந்தது. சிவப்பு நிற குரோட்டன்ஸிலிருந்து ரோஜாப்பதியன்கள் வரை ரத்தச் சிவப்பு. வெறுப்பின் சிவப்பு. நிலீமாவின் அன்புச் சிவப்பு. பானுவிற்கு வெள்ளை பிடிக்கும். வெள்ளையின் தூய்மை. அதன் கவனம் பெறாமல் மோனத்தில் இருக்கும் தனிமை. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பின்னரும் பானு தேடித்தேடி எடுத்த எல்லாச் செடிகளிலும் சிவப்பே நிறைந்திருக்கிறது. உடலுக்கும் மனதுக்கும் சம்பந்தமிருக்கிறதா? ஒருவேளை வேறு உடலில் குடி புக நினைத்தால், நமது இதே நினைவுகள் இருக்குமா? அல்லது அந்த உடலுக்கான நினைவுகள் இருக்குமா? தனக்குப்பிடித்த வெள்ளையை விட நிலீமாவுக்கு பிடித்த சிவப்பு எப்படி எல்லா தேர்வாகவும் அமைந்தது. பானுவுக்கு தலை வலிப்பது போல் இருந்தது. சிவப்புடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் இந்தக்குழப்பம் அதிகரித்துக்கொண்டே போகும். இதனால் தான் சிவப்பு பானுவிற்குப் பிடிக்காது. தலைவலியை உண்டாக்கும் நிறம். குழப்பத்தை. கோபத்தை. ஆக்ரோஷத்தை. வாளியிலிருந்த துணி எரிந்து கருகியிருந்தது. பின்வாசலின் தோட்டத்து டேப்பைத் திறந்து தண்ணீரை வாளியில் காட்டினால். கரைந்து சாம்பல் வாளியேறி மண்ணில் விழுந்து கரையத்தொடங்கியது. எப்படியும் தடையங்கள் அழியப்போவதில்லை. நாளை காலை எல்லாருக்கும் எல்லாரும் தெரிந்துவிடும்.

கேஸ் சிலிண்டர் ஹாலில் இருப்பதைப்பார்த்தாலே இது விபத்தில்லை என்பது தெரிந்துவிடும். நந்துவிற்கு எதிரியென்றால், அது பானுவும் நிலீமாவும்தான். நேராக இந்த வீட்டிற்குத்தான் வருவார்கள். பின்வாசலில் வீட்டிற்குள் நுழைந்தாள். கதவை இறுக்கப்பூட்டினாள். பிறகு பின்கட்டு, சமையலறை, இடைவளி எல்லாம் கடந்து முன் வாசலுக்கு வந்தாள். நடந்து முன்பக்கத்தில் நின்ற வேப்பமர நிழலில் நின்றாள். பின் தோட்டத்தின் சிவப்பு மலர்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. பச்சை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை. குளிர்ந்தது. பச்சை சூழலுக்கும் சிவப்பு உடைக்கும் நடுவில் வெள்ளை நிறத்தை நுழைத்து ஒரு தேசியக்கொடியைக் கற்பனை செய்து பார்த்தாள். சிரிப்பு வந்தது. பங்களா உயர்ந்து நின்றுகொண்டிருந்தது. தேடித் தேடிக் கண்டடைந்த பங்களா நிலீமா கல்லூரியில் படிக்கப்போகிறாள் அதுவும் இந்தியாவில் படிக்கவேண்டும் என்றதும் இந்தியாவைப்பார்க்கலாம், இந்தியாவில் இன்னும் சிலவருடம் இருக்கலாம் என மேற்படிப்பைத் தள்ளிப்போட்டவள் பானு. நிலீமா கல்லூரி போய்வரும் நேரங்களில் வேலைக்காரர்கள் போனபின் அவள் அடிக்கடி இதே மரத்தின் கீழே நின்று இதே வீட்டை இதே கோணத்தில் பார்ப்பது வழக்கம். ஆனாலும் அன்றைக்கும் இன்றைக்கும்தான் எத்தனை வித்தியாசம். தனிமையென்பது நாம் தேர்வு செய்வதாய் இருக்கும் வரை கிடைக்கும் நிம்மதியும் கர்வமும் தனிமை நமக்குக் கொடுக்கப்படும்போது இருப்பதில்லை. ஒருவேளை அன்றைய நாள் மாறி நடந்திருந்தால் நிலீமா நமக்குப்பதிலாக இங்கு நின்றிருப்பாளா? அல்லது அடுத்த பாதையில் சென்றிருப்பாளா. மறுபடியும் குழப்பம் தொடங்கியது. தலைவலிக்க ஆரம்பித்தது. உள்ளே ஒரு குரல் உன் கடமை முடிந்தது உனக்குச் செய்யவேண்டிய தேவைகள் முடிந்தன. இனி இந்த உலகை விட்டுக் கிளம்பலாம் என கூக்குரலிட்டது. இந்த ஒரு நந்துவை அழித்தால் போதுமா? ஊரெங்கும் ஆயிரம் நந்துகள். ஆயிரம் விஷப்பூச்சிகள். இந்தப்பூச்சிகளை எல்லாரையும் நீ ஒருத்தியே அழிக்க முடியாது பானு. நீ கிளம்பியே ஆகவேண்டும் என்றது குரல்.
ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள். உலகை விடைபெற இது சரியான தருணம், போய்விடுவோம் என தனக்குள் ஒருமுறை சொல்லிக்கொண்டாள். நின்றவாறே உலகை விட்டுப் போகும் அந்தச் செயலைச் செய்தாள்.
O
மறுநாள் போலிஸ் அந்த பங்களாவிற்குள் நுழைந்தபோது நிலீமா சிவப்பு உடையில் மரத்தடியில் மயங்கிக்கிடப்பதைப் பார்த்தார்கள்.
O

பிகு: கடைசி மூன்று பதிவுகளும், பழைய அலுவலகத்தில் நடந்த சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்ட விருந்தினர் பதிவுகள். முக்கிய விஷயம், மூன்றும், செப்டம்பர் 4  அன்று, ஒரே இரவில், ஒன்றடுத்து ஒன்றாக தொடர்ந்து எழுதப்பட்டவை. 🙂