இலக்கற்ற பெரும்பயணத்தில்
ரயில்பெட்டியில்
இடைவிடாத பிரார்த்தனையிலிருக்கும்
பெண்

மறுகரையின் கடந்துபோக நேரும்
சில கணங்களுக்குள்
தேவையான முடிவுகளை உருவாக்கி
உடைகளைச் சரிசெய்து முறைத்துப்போகும்
பெண்

அல்லது

காலங்களற்ற காலத்தின்
பெருந்தனிமையை
உணரச் செய்து
இலக்கற்ற பயணங்களை
கற்றுத்தந்த
பெண்

எல்லா மலர்களின்
வேர்களுக்கும்
பாய்வது
ஒரே நதிதான் இல்லையா?

o

கூச்சத்தில் நெளியும்
மன நிலை பிறழ்ந்த
பையனின்
குஞ்சைப்பிடித்து
கழிப்பறையின் கோப்பைகளுக்குள்
நீட்டும்
ஒரு தகப்பனிடம்
உங்கள் குறைகளை பிறகெப்படிச் சொல்வீர்கள்?

கோழை வழிய
ஆடை விலகிக் கிடக்கும்
பிறழ்வுற்ற பெண்ணின்
தாய் பதறி ஓடிவரும்
காட்சியை ரயில் நிலையத்தில் பார்த்தபின்
அலுவலகப்பிரச்சினைகளைப் பற்றி
எப்படி ஒரு கவிதையை எழுதுவீர்கள்?

கையைக்கிழித்துக்கொண்டு
ஸ்ரெச்சரில் படுத்திருக்கும் பையனுக்கு
காதல்பிரச்சினையாகத்தான் இருக்கும்
என
எதை வைத்து முடிவெடுக்கிறீர்கள்?

நம்மை நாமே திரும்பிப்பார்க்க
வலிகளை
யாரோ ஒருவர் அடையத்தேவையிருக்கிறது
என்பதையாவது
எப்பொழுதாவது நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா?