குதிரைகளை வரையும்
ஒட்டகங்கள் முதுகில் திமில்வரைந்து
அழகாக்குகின்றன‌

கால்களின் நீளம் போதாமை குறித்த‌
குற்றச்சாடுகள்
ஒட்டகங்களுக்கு உண்டு.

தேவையற்ற விரைவுகளைக்
கட்டுப்படுத்தும் மருந்துகளை
குதிரைகள் அறியவேண்டுமென‌
ஒட்டகங்கள் விரும்புகின்றன.

புல்வெளிகளிலிருந்து வந்தவை
மணல் பரப்பின் சூட்டை தன் அடிவயிற்றில்
பொத்திவைத்துக்கொள்வதைப்பற்றி
ஒட்டகங்கள் பேசிக்கொண்டேயிருக்கும்
ஒட்டக‌த்தின் தூரிகைவழி
உருவாகிவரும் ஒரு ஓவியத்தில்
இருப்பது

அழகான குதிரையென்று
ஒட்டகங்கள் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும்
குதிரைகள் அறிகின்றன‌
ஒட்டகங்கள் வரைவது ஒட்டகங்களை மட்டுமே என.

o

காயங்களைக் கட்டுவதற்கு முன்னதாக‌
அதை ஆழமாகக் கீறிவிடவேண்டியிருக்கிறது

எரியும் அமிலங்களும்
கொஞ்சமும் தொடர்பற்ற இடத்திலிருந்து
எடுக்கப்படும் சதையும்
இணைய வேண்டியிருக்கிறது.
பஞ்சு உறிஞ்சும் குருதி
காய்ந்து காய்ந்து
தகரக்குடுவைகளில் சேகரமாகிறது.
அறுவை சிகிச்சையிலிருந்து
வெளிவரும் காயம்பட்டவன்
அறிவது

பெருவாழ்வின் சிறுதுளி தோழர்.

o

வீடற்றவர்கள்
இரவிலிருந்து அமர்ந்திருக்கும் அதே பூங்காவில்தான்
ஜன்னல்களின் போதாமைகுறித்த குற்றச்சாட்டுகளை உடையவர்கள்
காலைநடைக்குச் செல்கிறார்கள்

கையிழந்தவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்
அதே மருத்துவமனையின்
இன்னொரு திசையில்தான்
மனைவியை இழந்தவன் தலைகுனிந்து கனத்த மவுனத்துடன்
அமர்ந்திருக்கிறான்

ஒரே செடியின்
இரு மலர்கள்தான் படுக்கைக்கும்
சுடுகாட்டுப்பாதைக்குமென‌
கூடையின் அசைவில் பிரிந்து
பயணிக்கின்றன

மழை தெறிக்க‌
குடைபிடித்துச் சிரித்திருக்கும்
பெண்ணே
உனக்குத் தெரியுமா
என் பாதங்கள் அறிந்த நெருப்பின் வாசனை?