#1

மார்ச்சுவரியின் வாசலில் அழுதுகொண்டிருந்த‌
பெண்ணுக்கு
இருபத்து நான்கு வயதிருக்கலாம்

சட்டையை மடித்து குதிகால் உயர்த்தி
நிலையற்று அசைந்து கொண்டிருந்தவன்
மாமனாக இருக்கக்கூடும்

இறந்த உடல்கள் பெயர்களை
இழக்கும்போது
சில மனிதர்கள் புதிதாகப் பிறப்பதாகத்
தோன்றுகிறது என்றேன்

இடுப்பில்தானே..
நானும் பார்த்தேன் என்றான்.

#2

நிர்வாண உடல்கள் ஒற்றைத் துணியில் சுற்றப்பட்டு
கிடத்தப்பட்டிருக்கும் அறையில்
தன் இரவு உணவைக் காலிசெய்பவன்

சிதறிய துணுக்குளை
காகிதத்தில் ஒற்றி எடுத்து
சேகரித்துக்கொள்கிறான்

முடி உதிர்ந்திருக்கும் மேஜையை
இன்னொரு காகிதத்தில்
துடைக்கிறான்
வெளியேறுவதற்கு முன்னதாக‌
விளக்குகளை அணைக்கிறான்
படியில் அமர்ந்து சிறிது அழுகிறான்

பிறகு நமக்காக காத்திருக்கத் தொடங்குகிறான்.

#3

‘செத்துப்போனவங்க தப்பிச்சுப்போகாம‌
இருக்க இவ்வளு பெரிய
பூட்டு தேவைதான்’
பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டதை
உணர்ந்து குலுங்கிகுலுங்கிச் சிரிக்கிறேன்

அவர்களிடமிருந்து நம்மைக் காக்க அல்ல‌
நம்மிடமிருந்து அவர்களைக் காக்க‌
பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டதாக‌
அவனும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறான்.

பிறகு
நான் அந்த மார்ச்சுவரிக்கு
போகவேயில்லை.