எளிய கேவலில் தொடங்கும்
அழுகுரல் சுவர்கடந்து நுழைகிறது

மறுசுவற்றின் கரையில்
கட்டில் உராயும்
பேரொலி

கண்ணீருக்கும்
காமத்திற்குமான இடைவெளியில்
ஒரு பாடல் எழுகிறது

அழியா பெருநேசத்தின் சொற்களை
மீண்டும் எழுப்பும் பழம்பாடல்

o

நாம் நாமாக
அல்லாது நீயாகவும் நானாகவும்
பிரித்துச் சொல்லவேண்டிய இந்த நாளில்

உனது பனித்துளியின் அன்பை
என்ன செய்வது
என் தீப்பொறியை
எந்தக் குகைக்குள் கொண்டு வைப்பது
இந்த ஆயுதங்களை எப்படி மழுங்கடிப்பது
அல்லது
எளிய தற்கொலையை
யார் பெயரில் நிகழ்த்துவது

பரபரப்பான சாலைச் சந்திப்பில்
திடீரென மலர் கொடுத்து
கடந்து செல்லும் குழந்தை
என்னை மறந்திருக்கும் என்றாலும்

அந்த மலரை என்ன செய்து
வாடாமல் வைத்திருப்பது சகி?
o

என் பிரிய சாத்தானே
முத்தங்களை ஏற்றுக்கொள்
இறுதியாக உன் சொல்
இன்று மேடையேறியது

அழிந்த நிலம்
அத்தனை நீரையும்
ஒன்று திரட்டி எழுப்பிய
ஒரு விதை
பச்சையத்தை அறியாமலே
அமிலம் ஊற்றப்பட்டது

கொலைக்களத்தில் தலைதப்பியவன்
குடல் நிரப்பிய மழை
முதற்சுவாசத்தை
குழந்தை புன்னகைக்கும் நேரத்தில் வெளியேற்றியது

என் பிரியசாத்தானே
என் முத்தங்களை ஏற்றுக்கொள்
இறுதியாக உன் சொல்லே மேடையேறியது.