மழை காய்ந்த நிலத்தில்
மறுபடி முதலிலிருந்து
விதை எழுகிறது

பறவைகளால் கொத்தப்படாத‌
விதைகள்
தேனீக்களுக்கான‌
ஆகாரத்தை உருவாக்கக் கிளர்ந்தெழுகின்றன‌

இந்தச் சிறு தோட்டத்தில்
தேவதையே

உன் முத்தங்களை நான் புதைத்துவைப்பேன்.

o

பிறகு அந்த பட்டாம்பூச்சியைத் துரத்த‌
ஆரம்பித்தேன்
எல்லா காடுகளின் மலைகளின்
மரங்களின் ஊடாக‌
மழையின் பெரு வேட்கையை
அணிந்து கொண்டபடி

கண்ணிலிருந்து தப்பவிடாத‌
வேட்கைக்கும்
கண்ணிலிருந்து தப்பிவிடாத‌
ஊடலுக்கும்
ஒரு மலர் அளவு தொலைவு

பறக்கும் மலரின் அளவு.

o

இறுதிப்பயணத்தில்
மாலையொன்று பயணிக்கிறது

இறந்தவர்கள் கழட்ட விரும்பாததென்று
இருப்பவர்கள் நினைக்கும்
ஒரு மாலை

செல்கள் அழியத்தொடங்கும்
பயணத்தில்
எரியூட்டலுக்கு உடல்விறைத்துத்
தயாரான பயணத்தில்

இறுதிப்பயணத்தில் உதிரும்
மாலைகளிலிருந்து
வெளியேறுவது

ஒரு மலர் விதை.