எளிய மெளனங்களால்
பற்றிக்கொண்ட விழுதுகள்
நம் கரங்களிலிருந்து
விலகிவிடாதபடிக்கு
ஒரு பிரார்த்தனை இருக்கிறது

அலைவுறும் கரங்களை
பற்றிக்கொள்ள விழுதுகள்
முளைத்தெழும்போது
எச்சமிட்ட பறவைகளை
நினைத்துக்கொள்ள
ஒரு மனம் இருக்கிறது

ஆழ்கடலின் நீரோட்டத்தில்
நாம் சந்திக்கும் மீனுக்கும்
உணவென்பது
பிற மீன்கள்தானே?

o

பேரழிவிற்குப் பிறகு
மீண்டெழும் பிரம்மாண்ட தேசத்தின்
மூலையின் ஒரு கதிர்
நீரின்றி காயத்தொடங்குகிறது

அழியாப்பெருங்கருணையின் பாடல்
ஒலிக்கும் ஒரு பேராலயத்தின்
மையத்தில்
மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்
ஒரு பால்யம் சிதைக்க்ப்படுகிறது

பொல்லாத்தீயின்
ஒவ்வொரு துளியும்
விளக்குகளுக்காக உருவானவை
என்பதை எப்போது அறிவோம் பிதாவே?

o

பிணம் தூக்க எங்கிருந்தோ
முளைக்கும் கரங்களில்
வரலாற்றின் இனிமைகள் பச்சை குத்தப்பட்டிருக்கிறது

தன் கண்ணீரைத் தானே
துடைக்கும் சிறுகுழந்தை
பிறகு எழுந்து
விளையாடச் செல்கிறது பின்வாசலின் கிணற்றடிக்கு

எரிசிதைகளின் உடையும் எலும்புகளை
கைக்குவாகான கொம்புகளால்
அடித்து
தன் கடமையைத் தொடர்பவன்

ஒவ்வொரு முறையும் அறிந்திருக்கிறான்.
இது முத்தங்களுக்குத் தப்பிய வெற்றுடல் என்று.