பைத்தியக்காரர்களுக்கான அறையில் காத்திருந்த நாட்களைப்பற்றி
என்றாவது எழுதவேண்டும்தான்

அல்லது
அரைத்த ஊமத்தங்காய்களின் வீரியமின்மை
உணர்ந்து சோப்புக்கரைசலை குடித்தபின்
வீடுவரும்வரை நடந்த
பெரிய தெருவையும் அதிலிருந்த
அரளிச்செடிகளைப்பற்றியும்

அல்லது
கிழிந்த ஆடை பைத்தியக்காரியைக் கடக்கும்போது
கிழித்துச் சவைத்த முதல் பாக்கெட்
பான்பராக் பற்றி

மேடையின் ஓரங்களில்
ஒளிந்துகொண்டு வசனங்களை
எடுத்துக்கொடுப்பவனின்
இருப்பை அறியாதவரைதான்

நாடகங்கள்
தன் சுவையை இழக்காமல் இருக்குமென்பதை
நீங்கள் அறிவீர்களா?

O

பாம்புகள், சினிமாக்காட்சிகள்
எழுதிமுடித்த தேர்வுகளை
மீண்டும் எழுதி தோற்றுப்போதல்
கழுத்தில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன்
பேருந்து நிலையத்தில் காத்திருத்தல்

கழுத்தறுபட்டு கையில் கிடக்கும் பெண்ணிற்காக
கல்லெறிந்து நிறுத்தும் டாக்ஸியில்
ஓட்டுனர் இருக்கை காலியாய் இருத்தல்

எல்லாவித கனவுகளுக்குப் பின்னாலும்
மீண்டும் எழுந்து அன்றைய வேலைக்குத் திரும்பியிருக்கிறேன்

பாலையின் மணலொன்றில் மயிர்க்கால்கள் மண்ணில் பொசுங்க நின்றிருந்த
பூனை
மெல்ல மடியேறி வந்து சிறிது நக்கிக்கொடுத்து
இறங்கிப்போனது நேற்றைய கனவில்

இனி உறங்க பயமாக இருக்கிறது.

O

ஓநாய்களை வீட்டில் வளர்க்க ஆசைப்படுவர்களைப்பற்றி எனக்கு வருத்தமில்லை.

உங்கள் உணவின் மீதியை
புளித்த கோழி இறைச்சித்துண்டுகளை
அளித்து அதனுடன்
சமரசம் செய்துகொள்ளும் உங்கள் விருப்பங்கள் மீதும் இல்லை

குச்சிகளை பந்துகளை தூர எறிந்து
திரும்ப கொண்டுவந்து
தரப் பணிக்கும் கீழ்மைகளின் மீது

விருந்தாளிகளுடன் கைகுலுக்கச் சொல்லும்
சிந்தனைகளின் மீதும் கோபம்
இல்லை.

அவற்றை இயல்பிலிருந்து பிரிக்கும் உங்கள்
பிரயாசைகளின் ஊடாக
மறந்துவிடாதிருங்கள்

அது ஓநாய் என்பதை

பென்சில் சீவும்போது நறுக்கிக்கொண்ட
சுண்டுவிரலிலிருந்து வழியப்போகும்
சிறு துளி குருதி
அதை மீண்டும் இயல்புக்கு
திருப்பிவிடும் என்பதை.