பூங்கா இருக்கையில்
தனித்தமர்ந்திருப்பவன் தலையில்
சீரிய இடைவெளியில் வந்து விழுகிறது மஞ்சள் மலர்
மரணத்தைப்போல

பிறகு
கொடுக்கப்படாத முத்தங்களைப் பற்றிய
கதைகளைப் பேசுபவர்கள் வெடிச்சிரிப்புடன்
கடந்து செல்கிறார்கள்

அல்லது
ஒரு பட்டாம்பூச்சியை கைகளுக்குள்
பொத்திவைத்துக்கொண்டு
ஒரு சிறுவன்
பறந்துவிடாதபடிக்கும்
இறந்துவிடாதபடிக்குமாக
மூடி மூடித்திறந்தவாறே
கடந்து செல்கிறான்

ஒரு குப்பி விஷத்தில் முடிந்துவிடும்
பழைய கதையை
இன்னும் எத்தனை வருடங்களுக்கு
இழுத்துச் செல்வது சகி?

o

தூரத்து தேவாலய மணியோசைக்கு
தன்னிச்சையாக கற்பனைச் சிலுவையில்
தன்னை அறைந்துகொள்பவன்

கொலைபாதகத்திற்குப் பிந்தைய
மதியத்தில் தன் முதல் பிரியாணியை
சுவைப்பவன்

இரவெல்லாம் காத்திருந்தும் வராத
வாடிக்கையாளனைச் சபித்தபடி
சகியிடம் காலைப்பாலுக்காக
சிறிது பணத்தை
கடன்வாங்கிச்செல்பவள்

மக்கிய இலைவீச்சம் அடிக்கும்
காட்டில்தான்

இன்னொரு மூலையில்
முதற்காலடியை
வைக்கிறது
முயல்

மற்றும்

வென்ற முதல்வேட்டையைச் சுவைக்கிறது ஓநாய்

o

முதல்பிரசவத்தின் இறந்த குழந்தையை
மனதிலிருந்து இறக்காத ஒருவன்
முத்தங்களுடன் இறைஞ்சும்
தன் உதடுகளை ஈரப்படுத்தியபடி
பிரசவ அறையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும்போது

தனைத்தூக்கியடித்த மின்மாற்றியின் முன்னால் நின்று
என்றோ எரிந்த
ஒற்றைக்கையின் மிச்சங்களைத்
தடவியபடி ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கும்போது

தொலைதேசத்தில்
கடைசிப்பேருந்தைத் தவறவிட்ட
கணவனால் விரட்டப்பட்டவள்
தன் பெட்டியின் மீதமர்ந்து அழத்தொடங்கும்போது

உங்களிடம் இறைஞ்சுவது
ஆறுதலையல்ல
அன்பையும் அல்ல.
மெளனத்தை.