வீடுமாற்றிச் சென்றவர்கள்
கைவிட்டுப்போன நாய்குட்டிகளை
வாஞ்சையாக‌
வருடிக்கொடுக்கும் கைகளை

சுடுகாட்டுப்பாதையில்
இன்னும் நசுங்காமலிருக்கும்
ஒரு மஞ்சள் மலரைப் பொத்தி
எடுத்துச் செல்லும் கைகளை
சிலுவையில் அறையும்போது
கூர்மையைப் பற்றியும் கவலைப்பட்டிருக்கலாமே?

o

நினைத்து நினைத்து தன் பாதையை
மாற்றிக்கொண்டிருக்கும்
நண்டின் மீது உங்களுக்கு வரும்
தார்மீகக் குழப்பங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான்.

கடைசிக் கணத்தில்
நாற்காலியிலிருந்து
இறங்கி சுருக்கை அவிழ்ப்பவனுக்கு
எழும் நியாபக‌ங்களை நாம் அறியமுடியாது

ஒரு கைகுலுக்கல்
எல்லாவற்றையும்
அழித்து இல்லாமலாக்கிவிடும் என்பதை மட்டும்
நாம் அறிந்திருக்கிறோமா என்ன?

o
இறுதிக் கணக்கை
முடிக்கும்பொருட்டு திருப்பிக்கொடுக்கப்பட்ட‌
மூன்று புத்தகங்களில்
ஒன்று கூட கையிலில்லை.

சிறுசிறு பரிசுகளில்
அவற்றுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில்
அதைப்பகிர்ந்து கொண்ட நண்பர்களில்
எதுவும்
இன்று இல்லை
உதிர்ந்த மலர்களின்
வனத்திற்குத்தானே
உரம் தேவையில்லை?