எளிய மற்றும்
ஒரே நம்பிக்கையாய் இருந்த
கடவுளை விட்டு பிரிந்த காலத்திற்குப்பிறகெல்லாம்

நியாயத்தின் கரங்கள் கழுத்தறுக்கின்றன
அன்பின் முத்தங்கள் நிராகரிக்கப்படுகின்றன

நிராகரித்த உதடுகளை
வேண்டுதலாய் பார்த்திருக்கும்போதே
உதவ வரும் கரங்களைப்
பற்றி முறித்துப்போட முடிகிறது

பன்னெடுங்காலமாய் பிரியாமல்
இருக்கிறேன்
என்னுடன் நான்.

O

தொலைந்த சிப்பிகளைத் தேடி
கடற்புரத்தில் நடக்கவேண்டியிருக்கும்
சிறுவனின்
கரங்களுக்குள் வெளித்தெரியாதபடி
ஒரு மலர் இருக்கிறது

இனி
யாரையும் சந்திக்கப்போவதில்லையெனும்
முடிவுடன் திரும்பி நடக்கும்
ஒருவனிடம்
ஒரு ரகசிய சொல் இருக்கிறது

பிரேதம் மறைத்தவன்
அடையாளத்துக்கு வைத்துச் சென்ற
செடிகளில்தான்

நீங்கள் மலர்களைப்பார்க்கிறீர்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா?

O

புரியாத பாடலை
மனனம் செய்து ஒப்பித்த நாளிலிருந்து

அந்தரங்கப்பிரதேசத்தின் மயிர்கால்களில்
கொதிக்கும் மெழுகு ஊற்றி
மயிர் நீக்கும்
நாட்கள் வரையிலான

உங்கள் பயணத்தின்
தொலைவை அறிந்து கொண்டவனின்

யாருமில்லாத நாளிலிருந்து
யாருமில்லாத நாள் வரையிலான
பயணத்தொலைவு
ஏன் வெற்றிடமாக புரிந்துகொள்ளப்படுகிறது?