தண்ணீர் துப்பாக்கிகளை தன்னை
நோக்கிப்பிடித்திருப்பவர்களை
நீங்கள் பயம்கொள்ளவேண்டியதில்லை.

தூக்கமாத்திரைகளை
விழுங்கிக்கொண்டிருப்பவனை
காலை எழுந்துவிடுவான் என்று
நினைத்துதான் புன்னகைக்கிறோம்

எரிவாயுக்கலன்களை
திறக்கும்போது
அவை விபத்துகளுக்காக‌
உருவாக்கப்பட்டவையில்லை என்பது நமக்குத் தெரியும்.

குறுக்கே செல்லும்
பூனைக்குட்டிக்கு
பலன்களை யோசித்திருக்கும்போது
கவனியுங்கள்

அவை அச்சாலையை கடக்காமலே போகக்கூடும்.

0

கிழிந்த புத்தகத்தை
கையில் வைத்துக்கொண்டு
செய்வதறியாது வரப்பிலமர்ந்து
அழுதுகொண்டிருக்கும் குழந்தையை உங்களுக்குத் தெரியுமா?

முதல் தூக்குக்கயிறு
அறுந்து விழுந்து
முட்டியை உடைத்துக்கொண்ட
சிறுவனை எங்காவது
நீங்கள் சந்தித்திருக்கக்கூடும்

மூன்றாவது முறையாக மறுதலிக்கப்பட்டு
எங்கேபோவதென்றறியாது
ரயில் நிலையத்தில்
அமர்ந்திருந்தவனை

இனி எங்காவது சந்தித்தால்
வாருங்கள் ஒரு கோப்பை காபி அருந்தலாம்.
சிலுவைக்கு சில ஆணிகள் குறைகின்றன.

0

நினைவின் பாடல்கள்
மீண்டும் ஒலிக்கும்போது
பழைய நாட்குறிப்பை மீண்டும்
புரட்டும்போது

பழைய காலத்தின் பாதைகளின்
வழி நாம் ஒரு நாள் நடந்து செல்லும்போது
பிரிவின் சிறுசெடிகள் மரமாகி
பரப்பிய நிழலில் நின்றுகொண்டிருக்கும்போது

முக்காலியின் மீதேறி
சுருக்குக் கயிற்றினை இழுத்துப்பார்க்கும்போது

காப்பாற்றுவதாய் எண்ணி கத்தாதீர்கள்.
கேட்காது.