தொடர்ந்து விஷம் பிரயோகிப்பட்ட
பழைய எளிய மனதைத்தான்
சந்திக்க இருக்கிறீர்கள்
என்பது நினைவில் இருக்கட்டும்

உணவற்ற இரவுகளிலிருந்து
கொடுக்கப்பட்டவற்றை மறுக்கப்படும் காலத்திற்கு வர
நீண்ட தூரம் நடக்கவேண்டியிருந்தது

இனி
இந்தப்பாத்திரத்திலிருந்து எதையும் அருந்தும்முன்
நினைவில் கொள்ளுங்கள்

இது
இங்கே இருந்ததில்லை
இங்கே வைக்கப்பட்டது.

O

பூனைகளின் கூரிய நகங்களில்
கவனிக்காமல் விடப்பட்ட பழங்காலத்தின்
வரலாறொன்று ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது

மென்பாதங்களுக்குள்
ஒளிந்திருக்கும்
பழங்கதைகள் கூர்கத்திகளுக்கு
எதிராக வெளிவராமல் இருக்கப்போவதில்லை

உணவை அளிப்பதின் மூலமாக
வேலை எதுவுமில்லா நேரத்தில்
தடவிக்கொடுப்பதன் மூலமாக
படுக்கைகளை வாங்கி வைப்பதன் மூலமாக

நகங்களை மறைக்கமுடியுமே அன்றி
அழிக்க முடியாது.

O

புறக்கணிப்பின் சொற்கள் பல்கிப்பெருகுகின்றன

காலத்தின் ஒவ்வொரு காலடியும்
குருதிதோய நடக்கும் ஓநாயின் பாதங்களாக
இருப்பதை அறிந்துகொள்ளுங்கள்

மேடையின் மீதிருந்து கதை சொல்லுபவனுக்கும்
கீழிருந்து கைதட்டுபவனுக்கும்
ஒரு இடைவெளி கொடுக்கப்பட்டிருக்கிறது

நாற்காலியிலிருந்து எழுந்து வராதீர்கள்
நண்பர்களே
சிலசொற்கள்
கண்களில் விழுந்துவிடக்கூடும்
சில சொற்கள்
கூர்மையாகப்பாயும்

சில மெளனங்கள்
உங்களைக்கொன்றுவிடக்கூடும் என்று
மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.