தொடர்ந்து
சில தேவதைகளால் நிராகரிக்கப்பட்டவன் தான்
சிலரை மறுதலிப்பவனாகவும் இருக்கிறான்

ஆறுதலின் அட்சயப்பாத்திரத்தை
கையில்
ஏந்தியிருக்கும் கரங்களுக்குரிய முகம்
தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றது

எதிர்பாராத விபத்தை
தினம் சந்திக்கும்
வாகனங்களில் எதிர்ப்பார்ப்பது

எத்தனை துயரம் தெரியுமா?

O

இறுதிச் சொற்கள்
இனி சொற்களுடன் புழங்கக்கூடாதென கட்டளையிடும்போது
எழும் இசை
மன நரம்புகளை அறுப்பதாக இருக்கிறது

நினைவுகளைச் சொற்களாக்கி
காற்றில் எறியும் வித்தைக்காரனின்
இறுதி மூச்சை உள்ளேயே அடக்கச் சொல்ல
யாருக்கு
உரிமை கொடுக்கப்பட்டது

தன் புண்களை தானே நக்கிச் சுத்தம்
செய்யும் பூனைகளுக்கு

நாவடக்கம் கற்றுக்கொடுப்பதன்
பெயரும் கொலைதானே?

O

பாலையின் பெருமணல்களுக்குப்
பழகாமல்
ஓடிச்சாகும் குதிரையிடம்

கூண்டுகளின் அகலம்
போதாமல் கம்பிகளில்
மோதிச்சாகும் பறவையிடம்

மரத்தாவலில் மடிவிட்டு
தரைவிழுந்து உணவற்று
வருந்திச் சாகும் குரங்கிடம்

சொற்கள் இருக்கின்றன
சொல்லத்தெரியாத
சொன்னாலும் புரியாத
பெருங்காப்பியத்தின் எளிய சொற்கள்.