ஒரு
திடீர்கணத்தில்
பாதைகள் வெறிச்சோடி அதுவரை
உடன் நடந்தவர்கள் அனைவரும்
மறைந்து விட்ட தோற்றம் எழுகிறது

அனைத்து மேகங்களும் கலைந்து
வானம் வெளுத்துத்தெரிகிறது
சாலையின் எல்லா வாகனங்களும்
நம்மைக்கடந்து போய்விட்டதாகவும்

ஆற்றின் எல்லா கூழாகற்களும்
அவரவருக்கான கடலை அடைந்துவிட்டதாகவும்
அறிவிக்கப்படுகிறது

உண்மையில்
கடைசி மரம் அறுக்கப்படும்போதுதானே
காடு அழிகிறது?

O

காயங்களை ஆற்றுப்படுத்தியபடி
நம்மை நெருங்கியவர்கள்
வடு மறைந்த
ஒரு கணத்தில்
நம்மை மீண்டும்
காயத்திற்கு முந்தைய நாட்களுக்கு
மீட்டெடுத்துவிட்டதாக நம்புகிறார்கள்

அந்த வலியை அறியாதவர்களாக நம்மையும்
வலிகொடுத்தவர்களின் இடத்தில் அவர்களையும்
பொருத்திப்பார்த்து கண்மூடுகிறார்கள்

மீண்டும் அந்த நினைவே
வரக்கூடாதென்றும்
அப்படி ஒன்று நிகழாதவனாயும்
நடிப்பை எதிர்நோக்குகிறார்கள்

மீண்டும்
அதே பாதையில் நிற்கவைப்பதன் மூலம்
அதே விபத்தில்
அதே காயத்தை
மீண்டும் உருவாக்கிவிட முடியும்
என்றும் நம்புகிறார்கள்

விபத்தின் கணமென்பது
அறிந்த காயங்களல்ல
காயங்களின் நினைவு மட்டும்தான் நண்பர்களே.

O

நீ
வருவதற்கு முன்பாகவே இங்கு
சில கவிதைகள்
இருந்தது

நான் மறைந்த பிறகும்
இங்கே
சில கவிதைகள் இருக்கும்

நதியறியும் வேர்கள்
நதியினுடைவை அல்ல
சகி
மரத்தினுடையவை.