பேராழத்திலிருந்து மீண்டெழும்போது
கரையாமல் மிச்சமிருக்கும் மண்ணை பற்றி
மேலேறும்போது
கரங்களில் சிக்கிய‌
மலர்களை
பத்திரப்படுத்தி கொண்டு போக முடிவதில்லை

ஒவ்வொரு
கனவிலிருந்து விழிக்கும்போதும்
படுக்கையின்
நிஜத்தை முழுதுமாக உணர‌
சில நொடிகள்
பிடிக்கிறது

காலத்தின் பெருங்கிணற்றில்
தவறிவிழுந்த‌
கூழாங்கற்களைப்போல‌
ஆழத்தில் படிகிறது
சொற்கள்

படிகமளவு தெளிந்த நீரில் பிம்பங்கள் தெரிந்தாலும்.

o

நீர்த்திவலைகளில் துடைக்கப்படும்
குட்டிகளின் கையிலிருக்கும்
பால்புட்டிகளில்
அழகை அறிகிறீர்கள்
எந்த முலை நினைத்து
சப்பிக்கொண்டிருக்கும்
என்றொரு கேள்வி எழுகிறது

கருப்பு வெள்ளைப்புகைப்படத்தில்
கண்கள் விரிய‌
குதிக்கும்போது
கிணற்றில் மேல‌
உறைந்திருப்பவனின் வேட்கையை ரசிக்கிறீர்கள்
வீட்டில் யாருமில்லாத பகல்களை
நினைத்துக்கொண்டு மானசீகமாக‌
அதே கிணற்றில் குதிக்க நேர்கிறது

தனித்திருக்கும் கிழவிகளின்
முகச்சுருக்கங்களை
தடவும் உங்கள் விரல்களிலிருந்து விலகி
இதுவரை பலர் கொள்ளியை ஏந்திய‌
கரங்களுடன் விரல் கோர்த்துக்கொள்கிறேன்

எல்லாருடனும் இருக்கும்போதும்
தனியாக இருக்கும்
மனதை
இப்படித்தான் புரியவைக்கமுடியும்

o

எல்லாக் குழந்தைகளின்
அழுகுரல்களின் வழியாகவும்

ஜன்னல் வழியே
நுரைத்த வாயுடையவர்கள் நடுவே
அமர்ந்தழுதுகொண்டிருந்த
பழைய நண்பனை சந்திக்க நேர்கிறது

விளக்கை நெருங்கும்போதெல்லாம்
வீடு எரிந்ததை
நினைத்துக்கொள்ளும் பழக்கம்
உங்களுக்கும் இருக்கிறதா?