தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும்
ஒரு கிணற்றின்
மோட்டர் ரூம் கூரையிலிருந்து
குதிப்பவன்
சரிந்திருக்கும் தென்னையின்
ஒற்றைக் கிளையொன்றைத்
தொட்டபின்
நீரில் விழுகிறான்

நிஜத்தில் அந்தச் சிறுவன்
சுற்றுசுவர் மோதி மண்டையை உடைத்துக்கொண்டதைச்
சொல்லத்தயக்கமாக இருக்கிறது

கையில் ஒற்றைத் தென்னங்கீற்றை
இறுக்கமாகப் பற்றியிருந்தான் என்பதை
எப்படி புரிந்துகொள்வீர்கள்

மரணமென்பது காரணங்களுக்காக உருவாக்கப்படுவதில்லை
நிகழ்வது
பிரிவுகளைப்போல.

o

மனிதர்களை வெறுத்து
நெடுந்தூரம் ஊரைவிட்டு விலகி
வெறிச்சோடிக்கிடக்கும்
தார்ச்சாலையின் தூரத்து கானல் நதிகளைப் பார்த்துக்கொண்டு
ஒரு வாகனத்தில் சாய்ந்து
அழுபவர்கள்

அல்லது

நாற்புறமும் வயல்சூழ‌
நாற்றுமறைக்கும் வரப்பில்
அமர்ந்து
முகம் தெரியாதவாறு குனிந்து
அழுபவர்கள்

அல்லது

நிழலினை அணைத்துக்கொண்டு
தூங்க நேர்ந்த‌
இரவுகளைப் பற்றி காலையில்
கவிதைகளை எழுதுபவர்கள்

சுவர்தாண்டி பழம் தரும் மரங்களின்
வேர்
நாம் பார்க்காத நதியில்
நனைந்து கொண்டிருக்கக்கூடும்தானே?

o

எனது தெய்வங்களின் வாசலில்
கொலைவாள் பதிக்கப்பட்டு
குருதி உறைந்திருக்கிறது

வீடுகட்டுபவர்களே
கூடுகளை கலைப்பவர்களாக இருக்கிறார்கள்
சுவைத்தபின் முட்டையோடுகளைக்
கவனமாக குப்பையில் சேர்ப்பவர்களாகவும்

தொண்டைகளை
அறுத்துக்கொண்ட மூதாதையின்
நினைவாக பூசணிக்குள்
குங்குமம் கரைத்தூற்றி
அறுத்து வீசுகிறார்கள்

என்னிடம்
கொடுக்கப்படும்
மீன் தொட்டியில்
ஒற்றை மீன் தனித்திருக்கிறது

காலங்காலமாக.