முள்வேலிகளுக்குள் இருப்பதான கதைகளைக் கேட்டு

ஆதிதெய்வத்தின்
வழிகளைத் தேடும் கூட்டத்தில்
இறுதியாய்
இணைந்து கொண்டவன்

ஒவ்வொருவராய்
வழியில் விலகிவிட தனியாக‌
தெய்வத்தை அடைகிறான்

உண்மையில்
ஆதி தெய்வம்
அவ்வாறு அங்கு வந்து சேன்ற ஒன்றுதான்
என்று எழுதப்பட்டிருக்கும் பட்டயத்தை
அவன் வாசிக்க முடியாதுதானே?

o

நகரத்தின் மையத்திலிருக்கும்
அமானுஷ்யக்கதைகளின் கோயிலில்

வவ்வால்கள் பதறி வெளியேறும்
குகைக்குள் நண்பகலில்
நுழையும்போது

தூண்சிற்பத்தின் அகலிகை
தன்
ஒற்றை அகல்விளக்கை
ஏந்தியபடி பாறையிலிருந்து
இறங்கினாள்

சுகந்தத்தின் பெரு நெடியில் மயங்கிச் சரியும்போது
தோன்றுகிறது

வழிதிரும்பாதவர்களின் கதைகளில்
இயலாமைக்கும்
விரும்பாமைக்கும் இடையில்
ஒளியளவு தொலைவு.

o

செம்மண் சாலையில்
மிதக்கும் கருமுத்தைப்போல
அசைந்து வந்தவள்
இறுதியாக‌
சுமைதாங்கிக்கல்லருகில் அமரும்போது

அவ்வழியாக குருதியின் நதி பாய்கிறது
பசுந்தளிர்களை எழுப்பும் பொருட்டு

ஈரம்படாமல் பாய்ந்து கடக்கும் ஓநாய்கள்
முகர்ந்து பின் குடிக்க‌முனைகின்றன‌

வரலாற்றில் பன்னெடுங்காலத்திற்கு
மீண்டும் மீண்டும்
நிகழும் பெருங்கதையை
எழுதி முடித்த
ஆதிவேடன் தன் கண்டம் அறுக்க‌
சூரிக்கத்தி எடுக்கையில்

மரம் அசைந்து
பறவைகளை அனுப்புகிறது

வேடனின் மடிக்கு.