எரிந்தமுகத்துடன் தலைகுனிந்து செல்பவன்
நிமிர்வதே இல்லை

கொலை நகரத்தின் வழியாக
தலைதாழ்த்திச் செல்பவனின்
பயத்திற்கும்

கழிவுப்பாதைகளில்
வேறெங்கோ பார்த்துக்கடக்கும்
அசூயைக்கும்
இடையே பெருநதியின்
இடைவெளி இருக்கிறது

தற்செயலாய் கண்களைச் சந்திந்த
இந்தத்தெருவிலிருந்து
உரக்கச் சொல்வேன்

முகம் எரிந்து தலைகுனிந்து செல்பவனுக்கு

தன் முகம் தெரிந்துவிடும் பயமில்லை
பிறர்முகம் பார்க்கும் வெறுப்பிருக்கலாம்

o

மீயொலிகளின் பிரவண இணைப்பில்
ஒரு முத்தம் மறைந்துபோகிறது
இணைவைக்கமுடியாத
மலரொன்று
தனிமரத்திலிருந்து
முதல்முறை உதிர்கிறது

மீண்டும் மீண்டும்
பாடப்படும் காவியத்தில்
ஒரே சொற்களை திரும்பத்திரும்பச் சொல்பவன்
ஒரு ஆடலின் நடுவில்
மண்டியிடுகிறான்

மண்ணில் இறங்கிப்பாய்கிறது
கண்ணீரின் தனி நதி

o

பெரும்பாறையிலிருந்து
தன்னைத்தானே செதுக்கி
இறங்கி வரும்
பந்தம் ஏந்திய
யட்சன்

தன் கண்ணில் படும்
விளக்குகளை
எரியச் செய்கிறான்.

தன்னை பற்றவைக்க முயன்ற
யட்சனை காப்பாற்றி
பிறகு
பாறைகளைச் சொற்களால்
தகர்த்ததற்குப் பதிலாக

அப்படியே விட்டிருக்கலாம் நீங்கள்.