ஆகவே நிஷாதனே

உன் ஆயுதங்களுக்கு
அஞ்சும் இவர்களிடம்
நீ

வழியில் பறித்த காட்டுமலர்களை
நீட்டும்போது
இவர்கள் அதையும்
உனது பிறிதொரு ஆயுதமென
அஞ்சி
பின் செல்கிறார்கள்

அம்புகளால் காயம்பட்ட இவர்
புண்களுக்கான உன் களிம்புகளை
இவர்கள்
மயக்கும் இன்னொரு
விஷமென அஞ்சி
விலகுகிறார்கள்

பிரிய முத்தங்களால் ஈரம் செய்யமுடியாத
உன் காய்ந்த உதடுகள்
இவர்கள் கன்னங்களில்
ஆறாத குருதி வடுக்களென
எஞ்சும் என்பது
உண்மைதான் என்றாலும்

பிரிய வேடனே
ஒரு வேடனுக்கு உணவளிக்க
அஞ்சும் இவர்களிடம்

உன் பெரு உழைப்பின்
மாமிசங்களைக் கையளித்து
தாள்பணியும் அன்பிற்கு

இங்கிருக்கும் எந்த தேவதைக்கும்
அருகதையில்லை என்பதை
மெய்யாகவே அவர்கள்
உனக்குச் சொல்வார்கள்

0

நிஷாதன் தன் வேட்டைக்கான
பெருங்காட்டின் வழிகளில்
அற்புத விளக்குகளை
கண்டெடுக்கும்போது

அதைத் தூய்மை செய்யும்
விரல்களில் உரசப்பட்டு
எந்த பூதமும்
எந்த தேவதையும்
வெளிவருதில்லை

வேடனிடம்
அற்புத விளக்கிலிருந்து
பூதம் வந்து
உன் தேவைகளைத் தீர்க்கும்
என யாரும் கதைசொல்லியிருக்கவில்லை
என்பதால்

அவன் வழக்கத்தின் படி
விளக்கினை எறிந்துவிட்டு
தன்
அம்புகளை மட்டும் முத்தமிட்டு
முன் செல்கிறான்.

o

நிஷாதன்,

சென்னியில் சூடியிருக்கும் மலர்களுக்கும்
அம்பு நுனியில் காத்திருக்கும்
ஓநாய்களுக்கும்
வாளறுபட்டுச் சாகும் முயல்களுக்கும்
இடையில் வேறுபாடு
காண்பதில்லை

அறுக்கும் நாணலுக்கும்
பாதையின் முட்களுக்கும்
கனிந்து விழும்
பழங்களுக்கும்
இடையில் வேறுபாடு
காண்பதில்லை

நிஷாதன்
காடாகவே இருக்கிறான்.
காடும்
காடாகவே இருக்கிறது.