இடக்கையில் செதுக்கிய
நடராஜர்
கால்மாற்றி ஆடிக்கொண்டிருக்கிறார்

தொட்டியில் பிறந்த மீனின்
கண்ணாடி வானம்
முன்னூற்றருபது டிகிரிக்கு வளைந்திருக்கிறது

யாருமற்ற தெருவில்
உணவுக்கு அலைபாயும்
கண்ணற்றவர்கள் கரங்களில்
மரம் மலர்களை உதிர்க்கிறது

எளிய விதைகளிலிருந்து
வரும்
எளிய மரங்கள்தான்

என் அடர்வனத்தை உருவாக்குகின்றன
என்று சொல்லும்போது
உங்களுக்குப் புரிவதில்லை.

o

கடைசி நாளின் நியாயத்தீர்ப்பிற்காக
முதல் நாளிலிருந்தே
மழுங்கச் சிரைத்து
காத்திருப்பவனிடம்

நீங்கள்
மரணத்தைக் குறித்த பயங்களை
உருவாக்க முயற்சி செய்கிறீர்கள்

முத்தங்களினால் உரசப்படாத
காய்ந்த புலன்களின் மீது
உங்கள் பனித்துளிகள்
குளிர்காலத்தைக் கொண்டுவரும்
என நம்ப வைக்க முயற்சி செய்கிறீர்கள்.

தேவரீர்
மன்னிக்கவேண்டும்
காட்டுச்செடிகள் நிழல்களில் வளர்பவை இல்லை.

o

உடைந்த முகமூடியுடன் மேடையேறும்
பழைய
கோமாளியின் கால்சராயில்
முதல் சன்மானம் செல்லாக்காசென காய்ந்திருக்கிறது

தொலைதீவின் நதியலைகளில்
தன் காட்டுப்பயணத்தின் படகுகளில்
நடுக்கத்துடன் கால்வைப்பவன்
கையில் ஒரு கைக்குட்டையைப்
பொத்திவைத்திருக்கிறான்
நீரில் விட

அழிந்த நிலத்தின்
தாய்பத்திரங்களை பூர்வீகத்தின் வாசனையுடன்
பயணப்பெட்டியின்
கடைசி அடுக்கில் ஒளித்து வைத்திருப்பவன்
எடுக்கும்போதெல்லாம்
மனம் உடைகிறான்

கறிக்குச் சுடும்முன் ஒரு முறை
நினைத்துப்பாருங்கள்
அந்தப்பறவை
எத்தனை மரங்களை
சுமந்து திரிந்தது என்பதை.