இறுதியாக ஒருமுறை
இந்த வார்த்தைகளைச்
சந்திப்பதற்காக வருபவர்கள்

தன் முகங்களை எங்காவது
கண்டு பதைக்கிறார்கள்

பெயரற்றவர்களின் பெயரற்ற
வாழ்வின் மூலையில்
தன் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக்
கண்டு
அச்சம் கொள்கிறார்கள்

கணங்களை
வரலாறாக மாற்றும் பாணர்களிடம்
புன்னகைப்பது

பெரும் சுமை என்பதை
இனியாவது அறிவீர்களா?

o

எறிந்த கடவுள்களை
மறுதலிப்பவன்
மனிதர்களிடம் தன் எளிய
பிரார்த்தனைகளுடன் கையேந்துபவனாகிறான்

புறக்கணித்த மனிதர்களின்
சொற்களை
சுமந்துகொண்டு பெரும்தூரம் வருபவன்
பிறகு
பொருட்களின் மீது
தன் சுமைகளை இறக்கி வைக்கிறான்

ஆயுளழிந்த பொருட்களுடன்
தனித்திருக்க நேர்பவன்
பிறகு போதைகளை
அணைத்தபடி
இரவுகளைக் கடக்கிறான்

இறுதியாக
கடவுள் சுமந்த மனிதர்கள்
பொருட்களை
பரிந்துரைக்கிறார்கள் போதைகளுக்கு
மாற்றென

நண்பர்களே
நதி
தொடங்கும் இடத்தில்
எப்பொழுதும்
முடிவதில்லை.

o

மயானத்திலிருந்து
கிளம்பும்போது
திரும்பிப்பார்க்காமல் செல்லும்படி
கேட்டுக்கொள்ளப்பட்டவர்கள்
அந்த சொல்லை
திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு
வீடு வந்து சேர்கிறார்கள்

கடைசி ஆயுதம்
நிராகரிக்கப்பட்டவர்கள்
தன் தோல்வியை உணரமுடியாமல்
திகைத்து நிற்கிறார்கள்

கடைசியில்
கையில் முத்தமிட்டுப்போனவர்கள்
இப்போது எங்கிருப்பார்கள்
என்றொரு கேள்வி எழும்போதெல்லாம்

நினைவில் எழுகிறது

மலர் உதிர்ந்து
சுழன்று இறங்குவதை
பேரதிசயமாய் பார்த்து
நிற்கும் குழந்தையின் முகம்.