தன் உள்ளங்கையையே
கன்னத்தில்
வைத்தபடி உறங்கிப்போகும்
குழந்தைக்கும்

முதல் அழுகையை உதடுமடித்து
விழுங்கும் சிறுவனுக்கும்

காலையிலிருந்து பொறுக்கிய
சிப்பிகளை
அதே கரையில்
வீசிவிட்டு சலித்து அமரும் சிறுமிக்கும்

சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது.

கேட்பதற்கு இல்லாமல்
போனவர்கள் பற்றிய கதை

o

தற்கொலைகளிலிருந்து
வெளியேறுவதற்காக

குடும்பங்கள் சூழ்ந்த தனியறையிலிருந்து
மரங்கள் சூழ்ந்த
தனியறைக்கு பிரயாணப்படுகிறான்

மட்கிய இலைவாசத்தின்
அறையிலிருந்து சாவி கொடுத்து
வெளியேறும்
சிப்பந்தி
அதே அறையில்
இதுவரையில் இறந்தவர்களின்
கதைகளை எடுத்து வைக்கிறான்.

பிறகு
அந்த அறையில்
இதுவரை கேட்டும் சலிக்காத
தாய் நிலத்தின் இசை
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது

நிறுத்துவதற்கு ஆளில்லாமல்.

o

இறுதிமுறையாக முத்தமிடுபவர்கள்
மட்டுமே
கண்ணீரை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள்

பிரிதலின் பிரகாசம்தான்
அணையப்போகும்
விளக்கைப்போல்
அத்தனை கூர்மையாக
இருக்கிறது.

மஞ்சனத்தி மரத்தின்
கவிச்சி வாசம்
காலமெல்லாம் நினைவில்
உறைந்திருக்குமென யாரும்
எதிர்பார்க்கவில்லை

என்றாலும்

பிறரிடமிருந்து
தனித்து தெரியும்
வாழ்வொன்றை வேண்டியிருக்கவேண்டாம் அவன் என்றே

இப்பொழுது தோன்றுகிறது.