கூட்டிலிருந்து தவறி விழும்
சிறு பறவையை
அம்மா மாதேவி என்று அலறியோடி
ஏந்திக்கொள்ளும்
கரங்களை எனக்குத்தெரியும்

தற்கொலைக்கு முந்தைய
இறுதிக்கணத்தில்
தன் முதற்குருதி எண்ணி
முகம்பூத்த சிறுமியை
நான் அறிவேன்

பட்டாம்பூச்சிகள்
சுவற்றில் உரசிப்போகும்போது
உடல் கூசுபவர்களும்
நம்முடனேதான் இருக்கிறார்கள்

அத்தனை மென்மையான
புன்னகையை உடையவர்
ஒரு நாள் சொன்னார்
மெழுகுவர்த்தியை அறுப்பதன் மூலம்
கழுத்தை அறுக்கும் இன்பம் கிடைக்கிறது என்று

மலர்களுக்குள்ளிருக்கும்
விதைகள்
எந்த மரத்தை ஒளித்துவைத்திருக்கிறதென்று
யாருக்குத் தெரியும்.

o

நிழல்களைப் புகைப்படம் எடுப்பவர்கள்
வண்ணங்களிலிருந்து
தன்னைத் துண்டித்துக்கொள்கிறார்கள்

நிர்வாணத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள்
ஆடைகளை
பிறருக்கென ஒதுக்கிவைக்கிறார்கள்

மெளனத்தினால் நிறைபவர்கள்
ஏராளமான சொற்களைப்
புதைத்தவர்களாக இருக்கிறார்கள்.

இன்மை என்பதை
மறைத்தல் என்பதாக மட்டும்தானே
அறிந்திருக்கிறோம்?

o

கருத்த எண்ணைப்பிசுக்குடன்
தூணில்
உறைந்திருக்கும் யட்சியிடம்
விளக்கிருக்கிறது

கனத்த திரவங்களை
உறிஞ்சி எரிக்கும்
விளக்கிடம்
ஒளியிருக்கிறது

கூடவே

ஒளிவீசும்
விளக்கின் அடிப்பாகத்தில்தான்
ஒளிந்திருக்கிறது
மொத்த அறைக்குமான இருள்.