உடன்வர மறுப்பவர்களுக்கு
கோமாளியாய்
இருந்திருப்பதைக் குறித்த
குற்றச்சாட்டுகளால் நாட்குறிப்புகள் நிறைந்திருக்கின்றன

தவறவிடப்பட்ட முத்தங்களை
மீண்டும் கண்டறிய முடியாத
வானம்
எல்லார் காலடியிலும் இருக்கிறது

விடைபெற்றுச் செல்வதன் கடைசித்தருணங்கள்
மட்டுமே
இல்லாத இனிமை நாட்களை
மிச்சம் வைத்துப்போகுமெனில்

முதல் நாளிலேயே விடைபெற்றிருக்கலாம்
நாமும்.

o

என் தெய்வங்கள்
பிறருக்கான உணவை
ஆயிரமாயிரம் கைகளில் ஏந்தியிருப்பவை

நீங்கள் நம்பும் தெய்வங்களே
உங்களைக் காக்கட்டும்
எனக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை
என்பதை
மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்

உங்கள் தெய்வங்கள்
உங்கள் பழக்கங்களின் வழி எனை அளவிட்டு
உங்களுக்கு அஞ்சி
எனை நோக்கி
தன் மழுக்களை
உயர்த்துமெனில்

மீண்டும்
மெய்யாகவே உங்களுக்குச் சொல்வேன்
நான் சாத்தானாயிருத்தல்
என் தேர்வல்ல
உங்கள்
தெய்வங்களின் தேர்வு
o

பேசுவதற்கு யாருமற்ற தனித்த
பயணத்தில்

ஜன்னல் நிலா நம்முடன்
வருவதாக நினைத்துக்கொள்வது
ஆசுவாசமாக இருக்கிறது

அத்தனை
அறிதல்களுக்குப் பின்னும்

நம்
பாதைகளில் தனித்து நடக்கையில்
எதிர்வரும் நீ
முகம் திருப்பிக்கொள்வதற்கு
முன்பாக

எல்லாம் திரும்பிவிட்டதாக
நினைத்துக்கொள்ளும் கணத்தைப்போல