நள்ளிரவில் கடல்பார்ப்பதற்காக
காற்றில் அணையும் கைவிளக்கை
மீண்டும் மீண்டும்
ஏற்றி
கொண்டு செல்லும்
பைத்தியக்காரனை நீங்கள் இன்று சந்திக்க இருக்கிறீர்கள்.

சிப்பிகளில் பிரதிபலிக்கும் வெளிச்சம்
கடலைக்குடிக்க
அவனுக்குப் போதுமானதாக
இல்லை

ஒரு நாள்
அந்த விளக்கை
அவனிடமிருந்து பாதுகாப்பதன் பொருட்டு
பிடுங்கி விடுவீர்கள் என்பதை அவன் அறிந்திருக்கிறான்

ஒரு நாள்
அந்தக்கடலை
அவன்
ஸ்பரிசங்களால் பார்க்கக்கூடும்
என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

o

ஓசைகளற்ற உலகத்திலிருந்து
வந்தவர்கள்
தங்கள் பிரார்த்தனைகளை
சைகைமொழியில்
இறைஞ்சும் பிரார்த்தனை அறையில்

தெருக்களில் பிரார்த்திக்கும்
ஓசைகளின் உலகத்திலிருந்து
வந்து சேர்ந்தவன்
தங்க நேர்கிறது

அவரவர் காதுகள்
அவரவர் கடவுள்கள்

ஆனாலும் பிரார்த்தனைகள்
ஒன்றுதான் என்பதை
பிதாவும் சுதனும்
அறிந்திருக்கிறார்கள்.

o

இறுதியாகப் பேசிய
கண்ணீரைத் துடைப்பவன்

நான் இறக்கிவைப்பதெல்லாம்
என் சுமைகளல்ல
என்னிடம் சுமைகளில்லை
சுமைதாங்கிக் கற்கள் மட்டுமே
இருக்கின்றன
என்றான்

மேலும் அவன் பேசும்போது

அதிகமாய் அழுதவர்கள்
கரங்களே
கண்ணீர் துடைக்க முதலில் நீளும்
என்றான்.