1.

தற்கொலைகளின்
காரணங்களை விவரிக்கும்
ஒவ்வொரிடமும்
ஒரு நீதிபதியின் முகத்திற்கு மாறிவிடுகிறோம்

ஆகச்சிறப்பான சோப்பினைக் கொண்டு
தன் பாவக்கறைபடிந்த
கைகளை
அத்தனை வேகமாக கழுவிக்கொள்கிறோம்

அத்தனை தற்கொலைகளிலும்
யாரோ
ஒருவருக்கான குற்ற உணர்ச்சி
மிச்சமிருக்கிறது

அதை தன் மீது விழுந்துவிட்டதாக
எண்ணி
முதன் முதலாக
கழுவத்தொடங்கும்
ஒருவரிடம் எப்பொழுதும்

ஜாக்கிரதையாக இருங்கள்.

2.

இறந்த நாளை
முடிவு செய்திருக்கும் ஒருவனிடம்
கடவுளின் தோரணை வந்துவிடுகிறது

ஆயத்தங்களைச் செய்யும்போது
ஞானியின் முகம்
இருக்கிறது

இறுதிக்கடிதத்தை எழுதும்போது
கவிஞனின் சொற்கள்
அலையடிக்கின்றன

பிறகு
எதுவும் அறியாமல்

தூக்குக்கயிற்றிலிருந்து
இறக்கும்
ஒருவர்

உச்சுக்கொட்டுகிறார்
எல்லா கடிதங்களுக்கும் சேர்த்து.

3.

பழைய முகங்களைத் தேடுபவர்கள்
தன் வடுக்களை
அதே கணத்தின் வாசலில் நின்று
தடவிப்பார்க்கிறார்கள்

பிரார்த்தனைக்கூடங்களின் வெளியில்
பிரார்த்தனைகளின்
மனிதர்களை சந்திக்க நேர்பவர்கள்
நடுங்கும் உடலுடன்
முடிந்தளவு வேகமாக அவ்விடத்தைக்
கடந்துவிட முயற்சி செய்கிறார்கள்

கால்தடங்கள்
பதியாத கடற்கரையில்
நிற்கும்போது

அலை எழுகிறது

காலம்காலமாக மாறியும் மாறாமலும்
இருக்கும் அலை.