இறந்த காலத்தில்
உறைந்தவர்கள்
ஒரு எதிர்பாராத கணத்தில்
எழுந்து வருகிறார்கள்

காலத்தினால் தொலைந்தவர்கள்
அவர்களை சந்திக்க விரும்புவதில்லை

காலத்தினால் தொலைந்தவற்றை
அவர்கள் திரும்பப்பெற விரும்பவில்லை

தன் முகத்தை அடையாளம்
கண்டுகொள்ளும்
ஒரு முகத்தைத் தேடி

உறைந்து நிற்கிறார்கள்
காலங்காலமாக.

o

காலம் ஒரு பேரருவியைப்போல்
விழுந்துகொண்டிருக்கிறது

எந்த நீரிலாவது
வழுக்கி
எந்த ஆழத்திலாவது
விழுந்துவிடாமலிருக்கும் பொருட்டு
கரங்களைத் தேடித்தேடி
பற்றுகிறவனுக்கு

மேலும் கிடைக்கின்றன

இன்னும் அழகிய
இன்னும் ஆளத்திற்கு
இழுத்துச் செல்லும்
கரங்கள்.

o

காலத்துடன் உரையாடிக்கொண்டிருக்கொண்டிருக்கும்போதெல்லாம்
ஒளியேந்தி இறங்கி வரும் உருவமொன்று
நினைவில் வருகிறது

இடைவெளிகளின்
தொலைவுகளை
சொல்லற்ற மெளனங்களைக் கொண்டு
அளக்கவேண்டியிருக்கிறது

மழைக்குச் சரியும்
பாலையின் மரம்
காலத்தை ஒரு கனியாக தரையிலறைகிறது

பெரும்பாலத்தில்
குதிக்கும்பொருட்டு தயக்கத்துடன்
நின்றுகொண்டிருப்பவன் காலுக்குக் கீழ்தான்
ஓடிக்கொண்டிருக்கிறது

காலமென்னும் நதி.