அலமாரியின் ஆழத்திலிருந்து
நான் ஒரு பூனையைக் கண்டெடுத்தேன்
என் வாசலில்
ஒரு புத்தகம்
வாலாட்டியபடி படுத்திருக்கிறது

என் பிரியத்துக்குரிய முத்தம்
பறக்கும்போது
தவறிவிழுந்து
சிறகை உடைத்துக்கொண்டது

எல்லாவற்றையும்
மொத்தமாக கலந்து
சிறிது ஐஸ்துண்டங்களை மிதக்கவிட்டு
மிடறு மிடறாக
ஒரு கொலைசெய்தேன்

அதை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

o

சொந்தக்குழந்தைகளைக் கொல்பவர்களைக்
காண்பதற்காக
அவரவர் குழந்தைகளை இடுப்பில்
வைத்துக்கொண்டு வரிசையில்
நிற்பவர்களுடன் நானும் நின்றிருக்கிறேன்

கொல்பவர்கள்
கொல்லப்படுபவர்களுக்கு முன்பே
இறந்துவிடும் அபத்தம்
என்னையும்
துணுக்குறச் செய்திருக்கிறது

நீங்கள் ஒரு வேளை
கொல்பவர்களாக இருக்கலாம்
கொல்லப்படுபவர்களாக ஆகியிருக்கவேண்டிய
கடைசி தருணத்திலிருந்து
இங்கே வழிதவறி வந்திருக்கலாம்

நீங்கள் ஒருவேளை
என்னுடன் வரிசையில்
நின்றவர்களாகவும் இருக்கலாம்
யார் கண்டது?

o

இசையற்ற நிலத்திலிருந்து வந்தவர்கள்
தங்கள் கருவிகளுடன்
நிற்கும்
தெருவிற்கு

இறுதியாக வந்து சேரும்
சொற்களின்
கடவுள்

சலித்துத் திரும்புகிறார்
தன்னிடம் இல்லாத கருவிகளுக்கு.

o