எரிந்துவிழும் வானத்தை நோக்கி
தன் அம்புகளை
அனுப்புகிறவர்களுக்கு
திரும்பி வரும் மெளனம்

அல்லது

உடைந்த கண்ணாடித்துண்டுகளை
கையில் வைத்து
முகம் பார்க்கும்
எளியவனின் புன்னகை

அல்லது

பைத்தியக்காரியின் கிழிந்த
ஆடைகளுக்குப் பதிலாக
இறந்த மகளின் ஆடையை
யாருக்கும் தெரியாமல்
அணிவித்துப்போகும்
ஒருவர்

அல்லது

சில தூக்க மாத்திரைகள்.

o
ஆக

பாகங்களை இழந்தவர்களின்
எல்லா
சாதாரண நாட்களும்
உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது

தூக்கிற்கு முன்னதாக
தன்
இறுதி உணவை
ருசித்து உண்பவனைப்பார்க்க
பயமாக இருக்கிறது

நாப்கின் வாங்கிவரச் சொல்லும்
காதலியைக் கண்டு
சில நொடிகள்
திகைக்கிறீர்கள்

ஆக
நமக்கு வராத வலிகளைக்
கடப்பவர்களை
நாம்
பாராட்டுவதற்கு
அறிவுரைகளை எடுத்து வைப்பதற்கு

பயம்மட்டும்தான் காரணமாக இருக்கிறதா?

o

வரையாடுகளின் மேய்ச்சல் நிலமும்
பட்டி ஆடுகளின்
மேய்ச்சல் நிலமும்

பாதுகாக்கக்கப்பட்ட சுவர்களுக்குள்
எரியும் விளக்கின் நெருப்பும்
கூரைகளுக்கு கீழ்
எரியும் சிதையின் நெருப்பும்

வனாந்தரத்தின் தளிரும்
வீட்டுத்தோட்டத்தின்
பூச்செடியும்

ஒன்றையொன்று
பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன
என
நிச்சயமாக எனக்குத்தெரியும்.