மூன்றாவது முறையாக மறுதலிக்கப்பட்டு
ரயில் நிலையத்தில்
அமர்ந்திருப்பவனுக்கு

வேகமாக வரும் புகைவண்டி
பழுத்து உதிரும் மஞ்சள் இலை
தவறி விழப்போகும்
குழந்தை மூன்றும் கிடைக்கின்றன.

மூன்றாவது முறையாக மறுதலிக்கப்பட்டு
தொலைதூரத்தின் தார்ச்சாலையில்
நின்று அழுபவனுக்கு

யாரோ விட்டுச்சென்ற கவிதைத்தொகுப்பு
தேட ஆளில்லாத ஒரு தங்கக்கொலுசு
வெயிலுக்கு ஒதுங்கிய
சிறு பறவை மூன்றும் கிடைக்கின்றன

முதல்முறையாக
தலைவருடும் கரங்கள்
முதல் முறை அளிக்கின்றன
ஒரு இனிய கோப்பை நிறைய விஷத்தை.

o

தன் வழிகளை அறிந்த பறவை
திகைத்து அமர்ந்திருக்கும்
மழை நாளில்

காலத்தை சுண்ணாம்புடன்
குழைத்து பொக்கைவாயிடுக்கும் கிழவி
சலித்து
அமர்ந்திருக்கும்
வெயில் தருணத்தில்

அத்தனை மலர்களும்
தன் மொட்டுக்குத் திரும்பிவிட
உட்குவியத்தொடங்கும்
குளிர் நாட்களில்

நான் உன்னை நினைத்துக்கொள்கிறேன்

சிறுகுழந்தையை
முதல் முறை கையிலெடுக்கும்
சிறுவன் போல.

o

ஒரே பிரியத்தை
ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொண்டிருப்பவன்
மற்றும்

பல்வேறு பிரியங்களைப் பற்றி
எப்பொழுதுமே சொல்லாமலிருப்பவன்
மற்றும்

ஒவ்வொரு பிரியத்தைப் பற்றியும்
வேறு வேறு தருணங்களில்
பேசிக்கொண்டிருப்பவன்

கூடைகளின் அசைவில் இறுதி ஊர்வலத்திற்கு
வந்துசேரும் மலர்கள்
மணமற்றவை என்பதை யார் சொல்லப்போகிறார்கள்?