கனவுகள் அழகானதாய்
இருக்கும் வாழ்விலிருந்து
வாழ்வு
அழகாய் இருக்கும்
கனவிற்கு போகவேண்டுமென அவன்
நினைத்துக்கொண்டான்

ஒருநாள்

பருந்துகளுக்கு பயந்து
எழுந்து
தன் விரியன் பாம்புக்குட்டிகளை
ஆதூரத்துடன் அணைத்துக்கொள்ளும்போது
மதுப்புட்டிகளை தூக்கிப்போட்டு
உடைக்கவேண்டும்
என அவன் நினைத்துக்கொண்டான்

ஒரு நாள்

முத்தங்கள் உலர்ந்த உதட்டின் மெளனங்களை
முற்றிலுமாக அழித்துவிட்டு
சுவர்களுக்கு மறுபுறம் இருப்பவர்கள்
தூக்கம் கெட்டு எழுந்தமர்ந்து
சபிக்கும்படி கூச்சலிடவேண்டுமெனவும்

அவன் நினைத்துக்கொண்டான்.

o

தினம் எங்காவது ஒரு கொலை
நடைபெறுகிறது
கொஞ்சம் மனதை உலுக்கும்படி

யாராவது பிரியத்திற்குரியவர்கள்
இறந்துபோகிறார்கள்
அவ்வப்போது
சில சமாதானச் சொற்களைப்
பெற்றுக்கொள்வதற்கு முன்பாகவே

எங்கோ இறந்தவர்களை
எரிவதற்கு முன்னால்
நனையும்படி அமிழ்த்தி அனுப்புவதற்காகவே
ஒரு நதி இருக்கிறது

மயான அமைதியுடன்.

o

தனியர்கள் எப்பொழும்
அறையில் பாடல்களை
உரக்க ஒலிக்கவிடுகிறார்கள்

எதாவது திரைப்படத்தில்
யாரோ ஒரு மனைவி
யாரோ ஒரு குழந்தையை
யாரோ ஒரு கணவனிடம் ஒப்படைத்து
எதையாவது பேசிக்கொண்டேயிருக்கிறாள்

அல்லது

யாராவது யாரையாது அலறும்படி
சுடுகிறார்கள்
துரத்துகிறார்கள்
அருவிக்கரையமர்ந்து மென்மையாக
கைபற்றி பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்

தனியர்கள்
தன் அறையில் திரைப்படங்களை
ஒலிக்கவிட்டு
அமர்ந்திருக்கிறார்கள்

அமைதியாக.
மெளனத்தை நினைத்துக்கொண்டு.