ஒரு ஞாயிறு
உரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
ஆட்டின் கண்களைப்பார்த்தேன்

அன்றுதான் நூற்று எட்டு வயதில்
சாகாத தன் தந்தையினைக் கொல்லும் முயற்சி பற்றி
பேசிக்கொண்டிருந்தவனுடன் குடித்தேன்

அன்று மாலை
தன் உள்ளாடை விரித்து அடித்து
காசுதராத எவனையோ திட்டிக்கொண்டிருந்த
பாலியல் தொழிலாளியையும் சந்தித்தேன்

அன்று பேருந்து கூட்டத்தில்
முலை தடவப்பட்டு
அழுதபடி இறங்கிப்போன பெண்
திரும்பிப்பார்த்துக்கொண்டே போனாள்

அன்று இரவு
கனவில் ஒரு சிவப்பு நிற பூ பூத்தது

நியாபகங்களின் நிறம் சிவப்பு.

O

எனது தேநீர் இடைவேளையில்
யாரோ மாடியிலிருந்து
தலைசிதற விழுந்தார்கள்

உடன் வேலை செய்துகொண்டிருந்தவள்
அப்பா இறந்துவிட்டாரென்று
அரற்றியபடி கிளம்பிப்போனாள்

விரக்தி இரவில் ஒருவன்
ஒரு கவிதையை அனுப்பி
விளக்கம் கேட்டிருந்தான்

இந்த முறை
கனவில் பூ வரும் என்றொரு நம்பிக்கை இருந்தது

ஏமாற்றங்களின் நிறம் கூட சிவப்பு.

O

மொழியறியாத தீவின் வழியறியாத
பயணத்தில்
கடற்கரையில் தனித்தமர்ந்திருக்கும் பெண்
தலைகவிழ்ந்து அழுதுகொண்டிருக்கிறாள்

வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக
பறக்கும் சாலையில்
நூற்றுக்கிழவி
ஒரு விலாசத்தைக் கையில் வைத்துக்கொண்டு
கண்களைச் சுருக்கி
உதவி செய்பவர்களுக்காக
காத்திருக்கிறாள்

பேரங்கடியின் மூலையில்
ஒரு குழந்தை
கண்களைக் கசக்கிக்கொண்டு
அழத்தயாராகிறது

மெளனத்திற்கும் சில நாட்களில்
வண்ணம் உண்டு

அது சிவப்பு.